முகப்பு வாயில்

 

பதிப்புரை

அருகப்பெருமானைப் போற்றும் இன்னிசைப்பாடல்கள் கொண்ட இந்நூலை இரண்டாம் பதிப்பாக வெளியிடும்பேறு எனக்கே அமைந்தது கண்டு மகிழ்வெய்துகிறேன். கடந்த ஆண்டு ஜைன சமயக்காவலர் ஜீவபந்து T.ஸ்ரீபால் அவர்கள் பல இன்னிசைப் பாடல்கள் இயற்றி இசைச் செல்வியர்களைக் கொண்டு கரந்தை, விழுக்கம், மேல் சித்தாமூர், மேல்மலையனூர், நாவல், காட்பாடி, தச்சூர், பெருமண்டூர், வெண்பாக்கம், சேவூர் ஆகிய ஜைன கிரமாங்களின் ஜினாலயங்களின் இசை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

ஜீவபந்து அவர்களின் இம்முயற்சி அவர்தம் எண்ணிறந்த சாதனைகளில் இதொன்று, தமிழக ஜைனப் பெருமக்கள் எண்ணிப்பார்க்காத ஓர் புதிய சாதனை, இசை உலகுக்கோர் இன்கனிவிருந்து. ஜைன அறவோர்கள் அருளிய பல இன்பத் தமிழின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாக அரும்பி மலர்ந்த இந்நூலை இந்த இருபதாம் நூற்றாண்டு இசை இலக்கியமெனில் மிகையாகாது. இக்கருத்திற்கேற்ப கோவையினின்றும் வெளிவரும் கலைக்கதிர் என்னும் விஞ்ஞான இதழில் அதன் ஆசிரியர் இந்நூலுக்கு மதிப்புரை வரைந்துள்ளப் பாராட்டுரையில் "ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள் தமிழ் உலகுக்கு சிறந்த இசைத் தமிழை வழங்கியுள்ளார்" எனப் புகழ்ந்துள்ளார்.

இசைச்சுவையும், இலக்கிய நயமும், பக்திப்பெருக்கும் பண்பு நெறியும், அருகப்பெருமானின் குணமாண்பும், ஞானஒளியும், அறநெறிகளும், அப்பாடல்களைக்கேட்டு சுவைத்தோர் உள்ளங்களில் ஊடுருவி ஓர் புத்துணர்ச்சியை அளித்தன. இறைவன் வழிபாட்டின் குறிக்கோளையும், இன்றியமையாமையையும் உணரச்செய்தன. கருத்துக் கருவூலமாய் விளங்கிக் கேட்டார் உள்ளத்தைப் பிணிக்குத் தன்மை வாய்ந்த இப்புண்ணியப் பாடல்களை நூல் வடிவாகக் கொண்டுவர விழைந்தேன். ஜீவபந்து அவர்களும் என் விருப்பத்திற்கு மகிழ்ந்து பாடல்களை அன்புடன் அளித்தார்கள். யானும் அவைகளைக் கடந்த ஆண்டு அச்சிட்டு முதல் பதிப்பாக வெளியிட்டேன்.

இசை இன்பம் நிறைந்த இந்நூல் வெளியானதும் வெண்பாக்கம் ஜைனப் பெருமக்களால் நிறுவப்பெற்ற மகாவீர ஜைன இளைஞர் மன்ற அன்பர்கள் 5-3-1967ல் வெளியீட்டு விழா நடத்திச் சிறப்பித்தனர். அவர்கள் ஆர்வம் அத்துடன் அமையாது அன்புப்பெருக்கால் இந்நூல் ஆசிரியராகிய கவிஞர் ஜீவபந்து T.S. ஸ்ரீபால் அவர்களைக் கெளரவிக்க வேண்டி அவருக்கும் பொன்னாடைப் போர்த்தி மகிழ்ந்தனர். சொல்லுள் அடங்காப் புகழ் பொதிந்த ஜீவபந்து அவர்களை அறியாதார் இத்தமிழகத்தில் எவரும் இரார். நல்லொழுக்கமும், சொல்லொழுக்கமும், கலை ஒழுக்கமும் நிறைந்த ஜீவபந்து அவர்கள் இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளிலும் பல நூல்கள் இயற்றித் தமிழ் உலகுக்குத் தந்த முத்தமிழ் வித்தகர். இவ்வுண்மையைத் தமிழகம் போற்றும் நாடகக் கலைஞர் ஒளவை T.K. சண்முகம் அவர்கள் நமது ஜீவபந்து அவர்களின் மணி விழா மலால் "ஸ்ரீபால் ஒரு கவிஞர், நாடக ஆசிரியர், ஆராய்ச்சியாளர்" எனப் புகழ்ந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

பொதுநலப் பணிகளோடு சமயத் தொண்டுகளையும் புரிந்துவந்தார். இவர்தம் சமய சேவைகளைப்பற்றி எழுத இவ்வேடு அடங்காது. இவர் சேவைகளைப்பற்றி சென்னை, தத்துவ சூடாமணி, பேராசிரியர், உயர்திரு. A. சக்கரவர்த்தி நயினார், M.A., I.E.S., (Rtd) அவர்கள் ஜீவபந்து அவர்களின் மணி விழா மலால் எழுதியுள்ள பாராட்டுரைகளில் சிலவாகளை இங்கு தருகின்றேன்.

"He is also interested in correcting false notions prevalent among the non-jains. whenever such false notions are published either in journals or in books Mr. Sripal does not fail to notice them and correct them by printing out the truth about Jaina religion. His work in this respect is greatly appreciated by Tamil Scholars."

"ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் ஜைன சமயத்தாரல்லாதார் நடுவண் பரவியிருக்கும் தவறான கருத்துக்களை அவ்வப்போது எடுத்துக்காட்டி நெறிப்படுத்துவதில் பேரார்வங்கொண்டவர். தவறான கருத்துக்கள் எவரேனும், எந்நூலிலேனும் பதிப்பித்து விட்டாலும் அவை அவரது கண்களினின்றும் தப்பமுடியா. கண்களில் பட்டவுடன் அவற்றைத் திருத்தவேண்டி ஜைன சமய் உண்மைகளை எடுத்துக் காட்டி கட்டுரை வாயிலாகவும், நூல்யாத்தும், தெற்றென விளங்கும் பெற்றி வாய்ந்தவர். இவ்வாறு அவரால் எழுதப்பெறும் அவரது நூல்கள் தமிழ் வல்லுநர்களால் பொதும் போற்றப்பெற்று வருகின்றன."

தமிழக ஜைனப்பெருமக்கள் ஜீவபந்து அவர்களை "ஜைன சமயக்காவலர்" என அழைத்துப் போற்றிவருகின்றனர். இப்புகழுரைக்கு அரண் செய்வது போன்று நமது மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் 22-4-1967 ஆம் தேதி சென்னை மாநகால் நடைபெற்ற மஹாவீர ஜெயந்தி விழாவில் தலைமை வகித்துப் பேசிய உரையில் "யான் ஜீவபந்து T.S. ஸ்ரீபால் அவர்களைப் பல ஆண்டுகளாகவே அறிவேன். அவர்தம் தன்னலமற்ற சேவைகளையும், அவைகளின் வெற்றிகளையும், அவரால் எழுதப் பெற்ற நூல்களையும், கண்டும், படித்தும் மகிழ்ந்துள்ளேன். அவருடன் ஜைன சமயக் கொள்கைகளைப்பற்றி பல முறை விவாதித்துள்ளேன். அவர் தந்த விளக்கங்கள் எனக்கு ஏற்புடையதாக இருந்ததுடன், ஜைன சமய அறநெறிகளில் ஈடுபாடு உடையவனாகவும் செய்தன. எனப் புகழ்ந்து பேசி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இத்தகைய சிறப்புகளுக்கும் புகழுரைகளுக்கும் பாத்திரமாய் விளங்கும் ஜீவபந்து அவர்கள் இயற்றிய இந்த இசை நூலைப் பாராட்டித் தமிழக அறிஞர் பெருமக்களும், புலவர் பெருமக்களும், கலைக்கதிர், சுதேசமித்திரன், தினமணி, தமிழ்நாடு, நிலத்திலக் குவியல் போன்ற பத்திரிகை ஆசிரியர்களும் கடிதங்கள் வாயிலாகவும் மதிப்புரை வாயிலாகவும் புகழ்ந்து எழுதியுள்ளனர். அப்பேருரைகளையும் இந்நூலில் காணலாம். இந்நூலின் முதற்பதிப்பிற்குப் பின்னர் ஜீவபந்து அவர்கள் இயற்றிய சில புதிய அரிய பாடல்களையும் இணைத்து இப்பதிப்பில் வெளியிட்டுள்ளேன்.

உள்ளத்தை உருக்கிப் பக்தி மனம் கமழச் செய்யும் இப்பண்கனிந்த பாடல்களை ஜைனப் பெருமக்களேயன்றி ஏனையோரும் பாராயணம் செய்து இறைவனைப் பாடிப் புண்ணியம் பெருமாறு வேண்டுகின்றேன்.

தமிழகத்து இசைமேதைகளும் இசைச்செல்வியர்களும் இப்புனிதப்பாடல்களைப்பயின்றுத் தங்கள் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடிவான் மக்கள் இறைவன் மாண்பின் இயல்பை உணர்ந்துகொள்வதோடு நல்லறிவையும், நற்பண்பையும் பெற்றுத்திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை, எனவே தமிழக இசைவாணர்கள் எனது வேண்டுகோளையும் விருப்பத்தையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். என் உள்ளக்கிடக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சுதேசமித்திரனில் வெளிவந்துள்ள மதிப்புரையின் கருத்தும் அரண்செய்கிறது.

சென்னை அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர்களும் இப்பாடல்களை ஒலிபரப்பி உலகுக்கு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்பன்,
[Sd] V.A. சின்னத்தம்பி நயினார்
ஆலக்கிராமம்.


நூன்முகம்

ஜைன அறவோர்கள் இலக்கியச் செல்வங்களையும் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் அதனதன் அடிப்படையில் அவைகள் செம்மையுற்று விளங்கும் வகையில் பலநூல்களை இயற்றி வளர்த்துள்ளார்கள் என்பதை நோதின் உணர்ந்த புலவர்பெருமக்கள் நன்கு அறிவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதரகாவியம், மேருமந்தர புராணம், நீலகேசி, போன்ற இலக்கியங்களிலும், திருக்குறள் நாலடியார் போன்ற நீதிநூல்களிலும் இவ்வுண்மையைக் காணலாம். அதுமட்டுமல்ல; பிரபந்தங்கள் எனக்கூறும் துதிப்பாடல்கள் கொண்ட தோத்திரத்திரட்டு, திருவெம்பாவை திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி, ஆதிநாதர் உலா, திருமேற்றிசையந்தாதி போன்ற இசை நூல்கள் இயற்றியுள்ளார்கள். இவற்றுள் சிலப்பதிகாரமே முத்தமிழ்க் காப்பியம் என்பதை புலவர் உலகம் நன்கு அறியும். அக்காவிய ஆசிரியர், இளங்கோவடிகள், ஜைன அறவோர். அப்பெருங்காவியத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் ஜைன அறவோரேயாவர்.

இக்காவியத்தின் அரங்கேற்றுக் காதையில் முத்தமிழ் பற்றியும் இளங்கோவடிகள் நன்கு பாடியுள்ளார். மாதவியின் இசையும் நாடகமும் நம் கண்முன்னே காட்சியளிப்பதைக் காண்கிறோம். அதற்கமைந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் உரையிலிருந்து பழந்தமிழ் இசைத் தமிழ் நூல்களும், நாடகத்தமிழ் நூல்களும் விளங்கியதை அறியலாம். பெருங்குருகு, பெருநாரை, செயிற்றியம், பரதசேனாபதியம், சயந்தம் போன்று இசைநாடக நூல்கள் அனைத்தும் ஜைன அறவோர்கள் இயற்றியருளியவைகளேயாகும்.

இத்தகு இசைச் சிறப்புக்கள் அமைந்த ஜைன இலக்கியங்கள் வழிநின்று அருகப்பெருமானைப் போற்றும் இன்னிசைப் பாடல்களை இயற்றினேன். இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருவடிகளை நினைவிற்கொண்டு இருபத்து நான்கு பாடல்களே இயற்றி வெளியிட்டுள்ளேன். சீவகசிந்தாமணியின் இறைவன் வாழ்த்தும் மங்கல வாழ்த்தும், இந்நூலின் முதற்பாடலும் இறுதிப்பாடலுமாக இணைந்துள்ளேன். யான்கல்வி அறிவு பெற்றான் முதலே காவியவழி காட்டியாய் விளங்கும் கவிச்சக்கரவர்த்தி திருத்தக்க தேவரை என் உள்ளத்தில்குருவாகப் போற்றி வணங்கி வருகின்றேன். என் இருபத்துநான்கு பாடல்களும் அப்பெருமகன் அருளால் அமைந்ததனவாகக் கொண்டு அவர்தம் இணையடிகள் நினைவாக அவ்விரு பாடல்களையும் இந்நூலில் இணைத்துக்கொண்டேன்.

சமயப்பற்றும், இயல் இசை நாடகச் கலைகளில் ஆர்வமும் பாசமும் நிறைந்தவருமாகிய ஆலக்கிராமம் திருவாளர். V.A.சின்னத்தம்பி நயினார் அவர்கள் இந்நூலை இரண்டாம பதிப்பாக வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு அப்பொயாருக்கும், அணிந்துரையும் மதிப்புரையும் பாராட்டுரைகளும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றேன்.

இந்நூலை அச்சிடும்போது பிழைத் திருத்தம் செய்து உதவிய திரு. K.J. அகஸ்தியப்ப ஜெமின் அவர்களுக்கும் என் நன்றி என்றும் உரித்தாகுக.

அணிந்துரைகள் :

முன்னாள் தனிநிலை நகராட்சி ஆணையர். தருமையா தீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர், தமிழக ஆட்சிமொழித் தனி அலுவலர், தமிழ்மணம், சென்னை-600 030.

உயர்திரு. கீ. இராமலிங்கம், எம்.ஏ., அவர்கள்
08-10-1967

அன்புகனிந்தருளிய அணிந்துரை

அருகப் பெருமானைப் போற்றும் இன்னிசைப்பாடல்கள் நூலை முழுதும் படித்து மகிழ்ந்தேன். எல்லாப்பாடல்களுக்கும் இசைக்குப் பொருத்தப்பெற்று பண்ணும் தாளமும் குறித்து. இசைக்குப் பொருந்த வகுக்கப்பெற்றுள்ளது. திரு. ஜீவபந்து அவர்கள் இயற்றிய 24 பாடல்கள் கீர்தனைவடிவில் அமைந்துள்ளன. சில பாடல்கள் தற்கால முறையில் இயற்றப்பட்டுள்ளன. சில பாடல்கள் அனைத்துமே பொருள் பொதிந்தனவாக மிளிர்கின்றன. திரு. ஸ்ரீபால் அவர்களின் நாட்டிலே மிகமேன்மை என்னும் ஜோன்புரி இராகப்பாடல் என் உள்ளத்தைப் பொதும் கவர்ந்தது. நாட்டிலே எது மிகமேன்மையானது என்று அறிந்துகொள்ள பித்தன்போல் ஓடி அலைந்து நீதி மன்றங்களுக்கும், கவிச்சாலைகளுக்கும் ஓடினார். அறிவில்லாதவனையும், அழகிளம் கன்னியையும், ஆண்மைசால் இளைஞனையும், தோளுடை வீரனையும், அரசியல் அறிஞரையும் எதிர்பட்டுக்கேட்டார். அவரவர்கள், பொதெனப்போற்றும் பொருளே சிறந்தது என்றனர். அமைதிதரவில்லை. கடையசியாக, கடலோரத்தில் தனித்து அமர்ந்து சிந்தித்தார். அன்பு, அன்பு, அன்பு என்று உள்ளக்கோவிலிலிருந்து எழுந்தது இன்னோசை! ஆநந்த முற்றார். தொழுதார், துள்ளிக்குதித்தார், அன்பே தெய்வமென வாழ்த்தித்துதித்தார், பொழிந்தார் இன்பக்கண்ணீரை, மெய்மறந்தார், அன்பால் போற்றுங்கள் எவ்வுயிரையும் என உலகுக்கு விளம்பினார். தமது வாழ்க்கைப் பெரும் பணியாக இவ்விசைக்கவிவாணர் கொண்டுள்ள ஜீவ இரக்கம் கொலைத்தவிர்ப்பு. இக்கருத்தையே கொண்டதாய் எத்துணை எத்துணையோ ஆயிரமாயிரம் உயிர்கள் கொலை செய்யப்படுவதைத் தவிர்த்திருக்கிறார். தெய்வத்தின் பெயரால் கொலை செய்வதைத்தடுக்கச் சட்டம் கொணரக்காரணமாயிருந்தவர் என்பதை உலகறிந்ததே. இவருக்கு ஜீவபந்து என்னும் பட்டத்தை அளித்திருக்கிறது.

இந்த அன்புக் கவிஞர் இசையில் வல்லவராகவும், இசைப்பாடல்கள் புனையும் திறனுடையவராகவும் விளங்குகின்றார் என்பதை, இந்த இசைப்பாடல் நூலைக்கண்ட பிறகே அறியலானேன்.

இசை, நாட்டியம், நாடகம் போன்ற இன்கலைகளை ஜினசமயம் வெறுக்கின்றது என்னும் எண்ணம் பரவியிருப்பது, எவ்வளவு தப்பானது என்பதையும் இந்நூலைப் பார்த்தபின்பே உணரலானேன். இசைப்பாடல்களை இயற்றியதோடு இருந்துவிடாமல் அவற்றை இனிமையாகப் பாடுவதற்கு இசை நுணுக்கம் அறிந்த இன்னிசைச் செல்வியர் செல்வர்களைக் கொண்டு இசையரங்குகள் நடத்திச் சிறப்பித்து வந்தமைக்கு ஜீவபந்து அவர்களைப் பாராட்டுகிறேன். இப்பாடல்கள் சிலவற்றை இசைச் செல்வியர் வாயிலாகச் சொற்சிதைவு, பொருட்சிதைவு இன்றி, உயிருணர்வைக் கிளர்விக்கும் உயர்ந்த இசை நலம் நிரப்பிப் பாடுவதைக் கேட்டு மெய்மறந்து இன்புற்றிருக்கும் வாய்ப்பையும் ஒரு முறை எனக்கு நல்கினார் திரு. ஸ்ரீபால் அவர்கள்.

இவ்விசைப் பாடல்கள் அருகசமயத் தலைவர்க்கு மட்டுமே உரியதல்ல; அன்பு நெறிபோற்றும் எந்தச் சமயத்தவரும் எல்லா மக்களுமே இவற்றை இனிது பயன்படுத்தி இசையின்பமும், அருள் உள்ளமும், ஒருங்கே பூண இவை வாய்ப்பானவையாகும்.

பாராட்டுரைகளும், மதிப்புரைகளும் :

'ஜீவகாருண்யமும், பக்தியும், மானிடசேவையுமே வாழ்வின் இலட்சியங்களாகக் கொண்ட தங்கள் தமிழ் இதயத்தில் எழுந்த பைந்தமிழ்ப் பாடல்கள் பாடப்பாட நற்சுவை தருபவை. சிந்தாமணி தரும் செந்தமிழ்க்கடலில் பக்திப் படகோட்டிப் பவனிவரும் அஹிம்ஸாமாலுமியாகிய தாங்கள் இசை உலகுக்கு ஓர் அரிய விருந்தையும் அளித்துள்ளீர்கள்.

வாழ்க உங்கள் வளமார்ந்த தெய்வப்பணி அஹிம்ஸைத்திருப்பணி! அன்பின் பெரும்பணி.
அறிஞர். எஸ்.டி. சுந்தரம், M.L.C.,
சென்னை. 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com