முகப்பு வாயில்

 


ஆசிரியர் : ஜீவபந்து ஸ்ரீபால்

வெளியிடுதல் : ஜைன இலக்கிய ஆராய்ச்சி மன்றம்,
34, சுப்பிரமணிய முதலி தெரு, சென்னை-1.

முன்னுரை

இந்நூல் தமிழ்ப் பொயார் உயர்திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் M.A., B.L., M; O; L. அவர்களின் மணிவிழா மலால் யான் எழுதிய "தமிழகத்துச் சமயவாழ்வில், ஜைனர் கண்ட நெறி" என்னும் கட்டுரையின் விரிவேயாகும்.

தொல்காப்பியத்தினின்றும் ஆராய்ந்து எழுதிய இந்நூலில் ஜைன சமயத்தின் தொன்மையும் தன்மையும் விளங்குவதோடு வரலாறு காணா காலமுதலே ஜைன சமயம் தமிழகத்தில் பெரும்சமயமாக விளங்கியுள்ளதென்னும் உண்மையையும் கலங்கரை விளக்கம்போல் காட்டப்பட்டுள்ளது.

வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும், மாணவ மாணவிகளும் இந்நூலை ஆழ்ந்து படித்து உண்மைகாண்பார்கள் என நம்புகின்றேன். தமிழகத்துச் சமய வாழ்வில் ஜைனசமயத்தின் அறநெறிகளும் அதன் வரலாற்றுண்மைகளும் நிறைந்த இவ்ஆராய்ச்சி நூலினை வெளியிட உதவியவர்கள் இருபெரியார்களாவர். சமய வளர்ச்சிக்காகவும் சமய உண்மைகள் பரவுவதற்காகவும் இன்றியமையாதவை நூல்களே என்பதை நன்குணர்ந்து பொருளுதவியும் காகித உதவியும் புரிந்த ஆரணி வ. தேவேந்திரஜெயின் அவர்களும், சென்னை. ஜி. சாமிநாத ஜெயின் அவர்களுமேயாவர்.

இவ்விரு பொயார்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றேன்.

இந்நூலினை எனது அன்புக்கும் மதிப்பிற்கும் உரியவரும் காலம் சென்றவரும், தமிழ், கன்னடம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமைவாய்ந்தவருமாகிய ஆரணி. ச. வசுபாலநயினார் அவர்கட்கு காணிக்கையாக்கி மகிழ்கின்றேன்.

இங்ஙனம்,
T.S. ஸ்ரீபால்
20-10-1963

ஜைன சமயத்தின் தொன்மையும் தன்மையும்

தமிழ்நாட்டுச் சமயவாழ்வில் ஜைனர் கண்ட நெறியை அறிவதற்குத் தமிழ் இலக்கியங்களே பொதும் உதவுகின்றன. தமிழ் நூல்களிலே தொன்மை வாய்ந்தது தொல்காப்பியம். எனவே தொல்காப்பியத்தினின்றும், ஜைனர் கண்ட நெறியை ஆராய்ந்தறிவோம். தொல்காப்பியத்தில் ஜைன சமய நெறிகளை பொதும் காணப்படுகின்றன. அந்நெறிகளைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போதெல்லாம், 'நோதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர்' என்றும், 'நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டனர்' என்றும் உயர்வாகக் கூறிச் செல்கின்றார்.

உலகம் :

இவ்வுலகம் ஆதியும் அந்தமும் அற்றது. "மொழி முதற்காரணம், அணுத்திரள் ஒலி" என்னும் நன்னூல் கொள்கை போன்று அணுத்திரள்களாலாயது. எக்கடவுளாலும் படைக்கப்படாதது. இயற்கையின் பாற்பட்டது. நிலம், தீ, காற்று, நீர், ஆகாயம் ஆகிய ஐந்தின் சேர்க்கையையுடையது. இவ்வாறு ஜைன சமயம் உலகைப் பற்றிக் கூறுகிறது. இக்கொள்கையையே தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் மரபியல் 89 வது சூத்திரத்தில்,

"நிலம், தீ, நீர், வளி, விசும்போடைந்தும்
கலந்த மயக்க முலக மாதலின்"

என உலகத்தின் இயல்பை நன்கு விளக்கியுள்ளார். நிலம், தீ, நீர், வளி, ஆகாயம் ஆகிய ஐந்தில் ஆகாயம் மற்ற நான்கைப் போன்று நிறமோ, சுவையோ, மணமோ உடையதல்ல. உலகில் உள்ள பொருள்கள் ஒதுங்குவதற்கும், அசைவதற்கும் இடம் விட்டுப் பெயர்வதற்கும் இடம் அளிப்பது. எனவே ஆகாயம் இன்றியமையாததொன்றாகும். ஆகாயம் உலக ஆகாயம், அலோக ஆகாயம் என இருவகைப்படும். உலக ஆகாயம், புறவுலகப் பொருள்களுக்கு இடம் தருவது. இதற்கு மேலும் எல்லையில்லா ஆகாயம் இருக்கிறது. இதுவே அலோகாகாயம் என அழைக்கப்படுகிறது. அவ்வகண்ட ஆகாயத்தில் பல்லாயிரக்கணக்கான கோள்கள் உலவுகின்றன. இவ்விருபதாம் நூற்றாண்டில் தமது கண்களின் முன்னே ரஷ்ய வீரர்களும், அமொக்க வீரர்களும் வானவெளியெங்கும் ராக்கெட்டில் சுற்றிவந்ததை கண்டுகளித்தோம். எனவே உலகத்தைப் பற்றிய ஜைனசமயக் கொள்கைக்கு அரண் செய்வது போன்று உலகம் கடவுளால் படைக்கப்பட்டதல்ல! வென்பதையும் இயற்கையின் பாற்பட்டதென்பதையும் தொல்காப்பியமும் இன்றைய உலகமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

உயிர்வகைகள் :

ஜைன (சமணம்) சமயம் அஹிம்சா தர்மத்தை அடிப்படையாகக்கொண்டு விளங்குவதால் அது உயிர்வகைகளைப் பற்றி ஆராய்ந்து உலகுக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறது. இக்கடமை உணர்ச்சியை ஜைன அறவோர்கள் நன்கு உணர்ந்து உள்ளார்கள். அவர்களின் உயிரியல் ஆராய்ச்சி அறிவுக்கு விருந்தாகும். புலன்களுக்கேற்ப உயிரியல் உலகை வகுத்திருக்கின்றார்கள். அந்தந்த உயிர்களுக்கு அமைந்துள்ள புலன்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு வகுக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரிவுகளின்படி தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவித்திருக்கின்றனர். ஜைன அறவோர்கள், இந்த உயிரியல் தத்துவத்தைப் தொல்காப்பியர்,

"ஓன்றறி வதுவே யுற்றறிவதுவே
யிரண்டறி வதுவே யதெனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றோடு கண்ணே
யைந்தறி வதுவே யவற்றோடு செவியே
யாறறி வதுவே யவற்றோடு மனனே
நோதனுணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"

"புல்லு மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப்பிறப்பே
நந்து முரளு மீரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே யக்கிளைப் பிறப்பே
நண்டுத் தும்பியு நான்கறிவினவே"
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மாவு மாக்களு மையறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே யாறறிவுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே"
(தொல்காப்பியம் பொருளதிகார மரபியல்)

என்னும் சூத்திரத்தால் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறே* தத்துவார்த்த சூத்திரம் என்னும் வடமொழி ஜைன நூலில் உயிரியல் தத்துவம் மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

* ப்ரத்வியம் தேஜோ வாயு வனஸ்பத ஸ்தாவரா :
"த்வீந்திரியா தயஸ் தரஸா :"
"பஞ்சேந்திரி யாணி"
"ஸ்பர்ஸன ரஸன கிராண சக்ஷ ஸ்ரோத்ராணி"
"வனஸ்பத் யந்தானா மேகம்"
"க்ருமி பீபீரி காப்ரமா மனுஷ்யாதீனா மேனக விருத்தாணி"
"ஸஜ்ஞின : ஸ்மனஸ்கர :"

(தத்துவார்த்த சூத்திரங்கள்)

இவை தவிர கண்களுக்குப் புலனாகாத உயிரணுக்கள் இருக்கின்றன வென்றும், அவைகளுக்கு உணர்ச்சிப் புலன் மட்டும் உண்டு என்றும் கூறப்பட்டிருக்கின்றது. மண்ணை உடலாக உடைய உயிர்கள், நீரை உடலாக உடைய உயிர்கள், நெருப்பை உடலாக உடைய உயிர்கள், காற்றை உடலாக உடைய உயிர்கள், மரம், செடி, கொடிகளை உடலாக உடைய உயிர்களும் இருக்கின்றன. இவை உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன. இவ்வுயிரியல் தத்துவ விளக்கத்தை மேரு மந்தர புராண ஆசிரியர்.

"ஒன்றி ரண்டொரு மூன்று நாலைந்தாய்
நின்ற வைம்பொறிநெறியின் வாழுயி
ரொன்று மாநில நெருப்பு காற்
றென்றுக் காயமைந் தெய்து வாழுமே"

"நந்து சிப்பி சங்காதி நாவன
குந் தெறும்பு கோபாதி மூன்றன
வந்து தும்பி வண்டாதி நாலவைந்
திந்தியம்பக நரகர் தேவராம்"

என சுருக்கிக் கூறியுள்ளார். எனவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயமாகியவற்றிலும், உயிர்கள் வாழ்கின்றன என்பதை அறிகின்றோம். இவ்வகை உயிர்களில் உயர்ந்த இனத்திற்கு ஐவகைப் புலன்களுண்டு. அவைகளுடன் மனமும் ஒன்றாகும். இது இந்திரியத்தின் உருவம் எனப்படும். மனித இனம் இவ்வுயிர் வகைகளுக்கெல்லாம் தலையாயது. நன்மை தீமைகளை, உணர்ந்து நல்லறங்களைப் பின்பற்றும் இயல்பு அமைந்துள்ளதால் மனிதன் ஆறறிவு படைத்தவன் எனப் போற்றப்படுகிறான்.

இவ்வாறு உயிர்களை வகைப்படுத்திக் கூறியுள்ள தத்துவம், ஜைன நூல்களிலன்றி வேறு எந்தச் சமய நூல்களிலும் காணவியலாது.

அறிவுக்கலை :

இனி ஜைன சமயம் அறிவுக்கலையை எவ்வாறு வகுத்துள்ளது எனக் காண்போம். ஜைன அறவோர்கள் அறிவு அறியப்படும் செயலை ஐந்து பிரிவுகளாக வகுத்திருக்கின்றார்கள். ஐம்புலன்களால் அறியும் அறிவை புலன் அறிவு (மதிஞானம்) என்றும், நூல்களின் வாயிலாகப் பெறும் அறிவை (சுருத ஞானம்) என்றும், வெகுதூரத்திலுள்ள பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளும் அறிவை அவதிக் ஞானம் என்றும், பிறர் மனத்திலுள்ள உணர்ச்சிகளைத் தொந்து கூறும் அறிவை மனப்பாயை ஞானம் என்றும், ஐந்தாவது கேவலக்ஞானம் என்றும் அழைக்கப்பெறும், இவ்வையறிவுகளில் மூன்றாவது அறிவாகிய அவதிக்ஞானம் சாதாரண புலன்களால் அறியப்படுவது அல்ல. மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் தூர மனோதிருஷ்டி என்றும், இவ்வறிவு ஒவ்வொரு மனிதனிடமும் மறைந்து கிடக்கும் ஓர் ஆற்றல் என்றும் கூறுகிறார்கள். நான்காவதாக மனப்பாயை ஞானமும் மிகச்சிறப்புடையது. இவ்வறிவை அறிவுத்துறை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதுமட்டு மல்ல! அப்பேரறிவை "டெலிபதி" என்றும் அழைக்கின்றனர்.

அருமைமிக்க இவ்வறிவுகளைப் பண்டைய கால ஜைன அறவோர்கள் உள்ளத் தூய்மையாலும், தவவலிமையாலும் பெற்றிருந்தார்கள். இவர்களைப் பின்பற்றி ஏனைய சமயத்தினரும் இவ்வறிவுகளைப் பயின்றிருந்தார்கள் என்றும் தொகிறது. இனி ஐந்தாம் அறிவாகிய வாலறிவு (கேவலக் ஞானம்) பற்றி ஆராய்வோம். இவ்வறிவின் பெயரைக் கொண்டே இதன் மாட்சிமையை அறிகின்றோம். இதன் இயல்பு அளவற்றது. மனித உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. இவ்வறிவை முழுதுணர் ஞானமென்றும் அழைப்பதுண்டு. இப்பேரறிவை முற்றுந்துறந்த முனிவர்கள் தங்கள் கடுந்தவத்தாலடைந்து, கர்மத்தைக் கெடுத்து வீடுபேற்றை அடைவார்கள். தீர்த்தங்கரர்களும், முனி புங்கவர்களுமே இக்கேவல ஞானத்தைப் பெற்று விளங்கினர். இவர்களில் முதல்வராக விளங்கிய பகவான் விருஷப தேவரையே தொல்காப்பியர் "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" எனப் போற்றியுள்ளார். அது மட்டுமன்று. இம் முதல்வான் பற்றற்றநிலையைக் கொண்டே இவரைக் கந்தழி எனவும் புகழ்ந்துள்ளனர். கந்தழி எனில் பற்றற்றவர் எனப் பொருள்படும். சிலப்பதிகாரத்தில் இப்பெருமான் கோயிலை இளங்கோவடிகள் நிக்கந்த கோட்டம் எனப் போற்றியுள்ள தினின்றும் அறியலாம்.

எனவே நல்லொழுக்கத்தினாலும், தூய தவத்தினாலும் மக்கள் பலரும் அறிவும், பண்பும் பெற்றுயர்ந்து வினையின் நீங்கி வீடு பேற்றை அடையலாம் என்னும் ஆத்மீகக் கலையை ஜைன அறவோர்கள் உலகுக்கு வழங்கினர். இதனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த முயற்சியாலும், ஒழுக்கத்தாலுமே உயர்வடைய வேண்டும் என்பதைத் தெளிவாக்கியுள்ளனர். இவ்வுண்மையை,

"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் - தன்னை
நிலைகலக்கிக் கீழிடுவானும் - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானுந் தான்!"

உண்மை உறுதி சான்ற - அறிவு சான்ற நாலடியாராலும், "தன்னைச் சிறுவனாச் செய்வானும் தானே தன்னை இறைவனாச் செய்வானும்தானே" என்னும் அறிநெறிச்சாரத்தாலும் அறியலாம்.

அறவுரைகள் :

மக்கள் பலரும் தங்கள் ஆன்மாவின் ஆற்றலை அறிந்து இந்தப் பிறவித்துன்பத்தினின்றும் நீங்கிப் பிறவாமையாகிய வீடுபேற்றை அடையவேண்டும் என்ற பரந்த நோக்கங்கொண்டு ஜைன அறவோர்கள் மக்களுக்குப் பல அறநெறிகளையும் வகுத்தளித்தனர். அவ்வாறு அறங்கூறவந்த ஜைன ஆன்றோர்கள் உண்மையைக் கையாண்டனர். பொய்யைக்கூறி மக்களை மயக்காமல், எது உண்மையோ (Truth) அதனை அப்படியே விளக்கிக்கூறினார்கள். அதனாற்றான் அவர்கள் அருளிய அறநெறிகளை மெய்ப்பொருள்களென ஜைன நூல்கள் யாவும் கூறுகின்றன. உண்மை என்னும் அடிப்படையில் ஆராயும்போது மக்கள் அனைவரும் அஹிம்சை என்னும் அருளறத்தின் வழி நிற்க வேண்டியவர்களாகிவிடுகிறார்கள். இவ்வுண்மையை முதன் முதல் அறிந்து உலகுக்கு உரை செய்தவர் பகவான் விருஷபதேவர். இப்பெருமகனையே திருக்குறள் ஆசிரியர், ஆதிபகவன் எனப் போற்றினார். பகவான் விருஷபதேவர் தாம் வகுத்த அறநெறிகளை இல்லறம் துறவறம் என இருவகையாகப் பிரித்தார். இதனைத் தொல்காப்பியர்,

"காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்"

என விளக்கியுள்ளார். இச்சூத்திரத்தில் இல்லற இன்பங்களைப் பூரணமாக அனுபவிக்க வேண்டும் என்பதனையும், பின்னர் கிழவனும், கிழத்தியும் துறவறத்திற்கான ஒழுக்கங்களை இல்லறத்திலேயே பயிலவேண்டும் என்பதையும் விளக்கப்பட்டுள்ளது.

இதனால் இல்லறமே துறவறநெறிக்குத் துணைசெய்வது என்பதும் பெறப்படுகின்றது. இல்லறம் இரும்புச் சுரங்கம், துறவறம் பொன் சுரங்கம், பொன் சுரங்கத்தினின்று பொன்னை எடுக்கவேண்டு இரும்பு இன்றியமையாதது. இரும்பு இல்லாமல் பொன்னையொடுக்கவியலாது. எனவே இல்லறமாகிய இரும்புச் சுரங்கத்தினின்றும் இரும்பை எடுத்துப் பண்படுத்திக் கொண்டே பொன் சுரங்கத்தில் இறங்க வேண்டும். அது போன்றே துறவறம் மேற்கொள்ள விழைவோர் வயது முதிர்த்த பின்னர் அதாவது இல்லற இன்பங்களைத் துய்த்த பின்னர் இல்லறத்தினின்றே சிறந்தது பயிற்றல் வேண்டும். அதாவது பிரம்மச்சாயம், உணவு, சுவை குறைத்தல், பட்டினி நோன்பியற்றல், உழவு, வாணிபம் முதலான குடும்பத் தொழில்களில் ஈடுபடாதிருத்தல், இன்னான், இனியான் என்றிராமல் யாவாடத்தும் அன்புடன் பழகுதல் போன்ற நெறிகளாகும். இவைகளும் இல்லற நெறிகளென்றே கூறப்பட்டுள்ளன. இத்துறைகளில் வெற்றி பெற்றவரே துறவறமேற்றுக் கொள்ளத் தகுதியுடையவர்கள். இல்லையேல் இல்லற நெறியிலேயே நின்றுவிடலாம். இதனையே,

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றின்
போஒய்ப பெறுவ தெவன்"

என்றார் நமது தமிழ் மறையாத்தப் பொயார். ஏனெனில் இல்லறம் எனில் மனைவி, மக்கள், சுற்றம் செல்வத்துடன் வாழ்வது மட்டுமல்ல. அதற்கேற்ற பண்புகளும் அமைய வேண்டும். தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயலில், 21-ஆம் சூத்திரத்தில்,

"கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்
இடையில் வண்புகழ்க் கொடைமையானும்
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்
பொருளொடு யுணர்ந்த பக்கத்தானும்"
என்றார்.

இவ்வாகளின் உரையை இளம்பூரணர் நன்கு விளக்கியுள்ளார்! "இல்லறத்தார்க்கு உரித்தாக நான்கு வருணத்தார்க்குஞ் சொல்லப்பட்ட அறம். அவையாவன - அடக்கமுடைமை, அன்புடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை, வெகாமை, புறங்கூறாமை, தீவினை அச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை என்பவையுடன் கொடை, பொறுமை, மெய்ப்பொருளறிதல் ஆகியவைகளாகும்" என்றார். எனவே இல்லறமும் ஆத்மீகத் துறைக்கு அடிகோலும் போடமாகும். இதனாற்றான் இல்லற நெறியைத் தவத்திற்கொப்பாகவும் போற்றப்பட்டுள்ளது.

"நற்றவம் செய்வார்க்கிடம்
தவம் செய்வார்க்கு மதிடம்"

என திருத்தக்கதேவரும் சீவகசிந்தாமணியில் விளக்கியுள்ளார். இத்தகு தலைசிறந்த இல்லற நெறியைப் பின்பற்றிய வணிகவேளளார்களைத் தொல்காப்பியர் உலகுக்கு அறிமுகம் செய்கையில்

"பகட்டினானும் ஆவினானுந்
துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்"

என்றார். இவ்வாகளுக்கு உரை எழுதிய இளம்பூரணர், பகட்டால் புரைதீர்ந்தவணிகர்வேளாளர் எனச் சிறப்பித்துள்ளார். இவர்களனைவரும் ஜைனப் பெருமக்களே,
 

1   2   3   4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com