முகப்பு வாயில்

 


திருக்குறள் அறிவுத்துறைகள் நூலில் நயினார் கோயில்

சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோயிலைப் பலரும் நன்கு அறிவர். அக்கோயிலைத் திருவள்ளுவர் கோயில் என இன்று அழைக்கப்பட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நயினார் கோயில் என்றே வழங்கி வந்தது.

வரலாற்றின் வழியில் ஆராயும்போது அக்கோயில் தோன்றிய காலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை நயினார் கோவில் அல்லது நாயனார் கோயில் என வழங்கி வந்துள்ளது. நாயனார் எனில் நாயகன், தலைவன் எனப்பொருள்படும். நாயனார் என்ற இச்சொல் முதன் முதல் ஜைன சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர்களுக்கும் ஜைன முனிவர்களுக்கும் பட்டப் பெயராகத் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தின் ஆரம்பத்தில் கூறும்.

"திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக் கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதை தாழ்பிண்டிக் கெழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி"

என்னும் அருகன் வாழ்த்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அறிவன் கோயில் என்பதற்கு நாயனார் கோவில் என உரை எழுதியுள்ளார். இது போன்றே கழுகுமலையிலுள்ள கல்வெட்டுச் செய்திகளில் ஜைன முனிவர்களைப் பற்றிய குறிப்புகளில் நாயனார் எனப்பொறிக்கப்பட்டுள்ளது. திருவதிகையில் கிடைத்த கல்வெட்டுகளில் ஜைனக்கோயிலை நால்முக நாயனார் கோயில் என்றும், முனை தீச்சுரம் உடைய நாயனார் என்றும் காணப்படுகிறது. திருப்பாதிக் குன்றத்துக்கோயில் கல்வெட்டுச் செய்தியில், அக்கோயில் தீர்த்தங்கரரை நாயனார் என்றே பொறிக்கப் பெற்றுள்ளது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதர் தமது உரையில் அவிநாயனார் என்னும் ஜைன அறவோரை அறிமுகப்படுத்தி உள்ளதைப் புலவர் உலகம் நன்கு அறியும். சில பண்டைய கல்வெட்டுச் செய்திகளில் தீர்த்தங்கரர்களையும், முனிவர்களையும் நயினார் என்றும் குறித்துள்ளனர். குறிப்பாக விழுப்புரம் தாலுக்காவிலுள்ள கோலியனூர் ஜைனக் கோவில் ஒன்றில் ஸ்வவஸ்திஸ்ரீ தேவர் பெருமானார் ஸ்ரீகோவில் என்றும், கோலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் என்றும் காணப்படுகின்றன. இவ் வரலாற்றின் அடிப்படையிலேயே திருக்குறளாசிரியருக்கும் நாயனார் என்றும், தேவர் என்றும் பட்டங்கள் அமைந்துள்ளன. தேவர் என்ற பட்டத்தைப் பற்றிய வரலாறு பலருக்கும் நன்குதொயும். ஜைன சமயத்தை தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரருக்கு விருஷபதேவர் (இடப தேவர்) எனப் பட்டம் வழங்கி வந்துள்ளது போன்று, ஜைன முனிவர்கள் பலருக்கும் தேவர் பட்டம் விரவி வந்துள்ளதைக் காணலாம். எனவே நாயனார், தேவர் என்ற பட்டங்கள் முதன் முதல் ஜைன தீர்த்தங்கரர்களுக்கும் முனிவர்களுக்கும் வழங்கி வந்துள்ளன என்பதை அறிகின்றோம்.

இவ்வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள திருக்குறளாசிரியான் திருக்கோயில் வரலாற்றை ஆராய்வோம்.

"மறமேமுனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியும் அருட்கொண்டலே யாதஞ்சிவந்த
நிறமே காயவொண் மாணிக்கமே நெடுநாளொளித்துப்
புறமே திரிந்த பீழையடியேனைப் பொறுத்தருளே"

எனத் திருநூற்றாந்தாதி ஆசிரியர் மயிலாபுரியில் கோயில் கொண்டிருந்த நேமிநாத தீர்த்தங்கரரைப் போற்றியுள்ளார். இதுபோன்று வேறு பல தோத்திரப் பாக்களாலும், மயிலாப்பூரில் கிடைத்துள்ள ஜைன தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகளாலும், கல்வெட்டுச் செய்திகளாலும், பண்டைய காலத்தில் ஜைன சமயத்தின் உறைவிடமாய் மயிலாப்பூர் விளங்கிற்றென்பது தெளிவாகிறது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மயிலாப்பூரில் நன்னூல் உரை ஆசிரியர் மயிலைநாதர். அவிரோதிநாதர், நேமிநாதர் இயற்றிய குணவீர பண்டிதர் போன்ற பல்கலைச் செல்வர்களாகிய ஜைன அறவோர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். மயிலாப்பூரில் வாழ்ந்த ஜைனப் பெருமக்கள் நேமிநாதரை வழிபட்டதைப் போன்றே தெய்வப் புலவராம் திருக்குறளாசிரியரையும் வழிபட மயிலையில் கோயில் ஒன்று அமைத்தார்கள். அக்கோயிலில் திருக்குறளாசிரியான் திருவடிக் சின்னங்களைப் பொறித்து வைத்து வழிபாடியற்றி வந்தனர்.

நமது பாரத நாட்டின் வரலாற்றை ஆராயின், ஜைன சமயத்தவரே முதன் முதல் தங்கள் தீர்த்தங்கரர்களையும், ஆச்சாரியர்களையும் முனிவர்களையும் வழிபட அம்மகான்களின் திருவடிச் சின்னங்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளது. நன்கு விளங்கும். குறிப்பாக இமயமலையில் கைலாச கிரியிலும், வங்காளத்தைச் சார்ந்த சம்மேதசிகர மலையிலும், சம்பாபுரி, பாவாபுரி, கிர்னார் போன்ற பல மலைகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவடிகள் பொறிக்கப் பெற்றுள்ளன. தமிழகத்தில் பொன்னூர் மலையில் திருக்குறளாசிரியர் குந்தகுந்தாச்சாரியார் திருவடிகளையும், இப்பெருமான் பிறந்த திருத்தலமாகிய ஏகுந்தகுந்தா மலையிலுள்ள திருவடிகளையும், ஜீனகாஞ்சியில் வாமன முனிவர் திருவடிகளையும், விழுக்கம் குணசாகரர் திருவடிகளையும் காணலாம்.

கி.மு. 3-ம் நூற்றாண்டில் தென்னகம் விஜயம் செய்த பத்திர பாகு சுவாமிகளின் திருவடிகளும், மெளாய சக்கரவர்த்தி சந்திர குப்த மன்னான் திருவடிகளும், சிரவண பெள்குளாவில் அழகாகப் பொறிக்கப் பெற்றுள்ளன. இவ்வழக்காற்றின் துறையிலேயே மயிலையிலும் திருக்குறள் ஆசிரியான் சிறப்புப் பெயர்களாகிய திருவுள்ள நாயனார், அல்லது திருவுள்ள தேவர் எனப் போற்றி அவர் திருவடிகளை ஜைனப் பெருமக்கள் வணங்கி வந்தனர். இவ்வழிபாட்டில் ஏனைய சமயத்தவரும் கலந்துகொள்வார்கள். அவர்கள் இக்கோயிலைக் குறிப்பிடும் போதெல்லாம் தமிழகத் ஜைனப் பெருமக்களின் பட்டப்பெயராகிய நயினார் என்பதைக் கொண்டு நயினார் கோயில் என அன்புடன் அழைத்துப் போற்றுவார்கள். அவ்வழக்கம் இன்றும் அப்பகுதியில் வழங்குவதைக் காணலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 'திருவள்ளுவர் கோயில் எது?' என்று கேட்டால் அக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் ஒன்றும் விளங்காமல் விழிப்பார்கள். நயினார் கோயில் எனின் 'அதோ' எனச் சுட்டிக்காட்டுவார்கள்.

கி.பி. 17-ம் நூற்றாண்டுவரை மயிலாப்பூரில் பெரும்பாலும் ஜைன சமயத்தவரே வாழ்ந்து வந்தமையால் அவர்களின் பட்டப்பெயராகிய நயினார் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டு அவ்வாறு அழைத்து வந்தனர். மயிலையில் ஜைனர்களே மலிந்திருந்தனர் என்பதைப் பண்டைய நூலாகிய தோத்திரத் திரட்டில் "மயிலாப்பூர் பத்து" என்னும் பதிகத்தில்,

"ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனையுயரமோ ரோசனையில்
களிதரு நாண்மலரணியும் சோகுடையா குலநாயகரூர்
விளிதரு மூடமும் வினையும் விடாமல் வீடருநால் வகையிற்
றெளிதரு சாவகர் செழுமனையேமலி திருமயிலாபுரியே"

எனவரும் தோத்திரப்பாவின் கடைசி வாயால் விளங்குகிறது. இதனால் மயிலாப்பூரில் சாவகர்கள் (நயினார்கள்) சிறப்பாகவும் வாழ்ந்திருந்தனர் என்பதையும் அறிகின்றோம். அந் "நயினார்" பட்டம் தமிழகத்தில் வாழும் ஜைனர்களிடம் இன்றும் சிறப்பாக வழங்கி வருகிறது. ஜைன சமயத்தினின்றும் வேறு சமயம் புகுத்தவர்களும் தங்கள் பண்டைய நயினார் பட்டத்தைத் துறக்கவில்லை என்ற உண்மையை இன்றும் காணலாம். குறிப்பாக நீறுபூசி வேளாளர்களும், நெல்லிக்குப்பம், பண்ரூட்டி, செஞ்சி, ஆரணி பகுதிகளில் காப்பலூர், கலசப்பாக்கம் கிராமங்களில் வசிக்கும் பல வேளாளர்களும் பண்டைய நயினார் பட்டத்தையே வைத்துக் கொண்டுள்ளார்கள். தென்னாட்டு முஸ்லீம்களில் பெரும்பாலோருக்கும் நயினார் பட்டம் வழங்குகிறது. அவர்களும் ஜைனர்களாயிருந்து மாறியவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி ஜில்லாவில் ஆழ்வார் திருநகா, ஸ்ரீவைகுண்டம், தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள சைசவ சமயத்து வேளாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் நயினார் பிள்ளை எனத் தங்கள் பண்டைய சமயப் பெயரை விடாது அமைத்துக் கொண்டுள்ளார்கள். மேலும் தமிழகத்தின் பல பாகங்களில் நயினார் குளம், நயினார் மண்டபம், நயினார் மேடு, நயினார் குப்பம் என வழங்குவதைக் காணலாம். அவைகள் யாவும் ஜைனர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்.

இத்தகு சான்றுகளால் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த நயினார்கள் வழிபாடியற்றிய திருக்குறளாசிரியர் நாயனார் கோயிலே இன்று திருவள்ளுவர் கோயில் என அழைக்கப்படுகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அத்திருவடிகள் எங்கே?

பண்டைய காலமுதல் திருக்குறளாசிரியான் திருவடிகளை வணங்கி வந்த நயினார்கள் (ஜைனர்கள்) மயிலாப்பூரில் பிற்காலத்தில் அருகிவிட்டார்கள். அங்குள்ள கோயில்களும், சின்னங்களும் மறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் போயின. இது மறுக்க வியலாத வரலாற்றுண்மை இந்நிலையில் சுமார் 100 அல்லது 120 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளாசிரியருக்கு உருவச்சிலை வைப்பதாகக் கூறித் தாடி மீசை சடையுடன் கூடிய உருவச் சிலையைச் செய்து வந்து திருக்குறளாசிரியர் திருவடிச் சின்னங்களுக்குப் பின்னே மூலவராக அமைத்தார்கள். அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அத்திருவடிச் சின்னத்தைப் பெயர்தெடுத்து மறைத்துவிட்டார்கள்.

இவ்வடாத செயலைக்கண்ட அங்குள்ள பொதுமக்கள் அர்ச்சகரையும் அவ்வாறு செய்ததற்குக் காரணமாய் இருந்தவர்களையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். இவ்வெதிர்ப்பின் வேகத்தை அறிந்த அர்ச்சகர்கள் அச்சின்னத்தைச் சிதைத்துச் சில மாறுதல்களுடன் உன் கோவிலை விட்டு வெளியே மண்டபத்தில் வைத்தார்கள். இவ்வாறு சில காலம் அம்மண்பத்திலேயே இருந்தது. என்றாலும் அவ்வர்ச்சகர்கள் அத்திருவடிகள் அங்கிருப்பதில் வெறுப்பே கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் அங்கு வருபவர்கள் அத்திருவடிகளையும் தொழுது வந்தார்கள். அதனால் சில ஆண்டுகள் கழித்து அச்சின்னத்தை அக்கோயிலின் மதிற்சுவால் வைத்து மூடிவிட்டார்கள். அதனை அறிந்த பொதுமக்கள் எதிர்க்கவே புதைத்த இடத்திலேயே திறந்து வைத்துவிட்டார்கள். இக்கிளர்ச்சிகளெல்லாம் ஜைனரல்லாத அப்பகுதிப் பொது மக்களாலேயே நடந்தது. ஏனெனில் அவர்கள் பல காலமாக அத்தேவர் திருவடிகளைத் தொழுது வந்த உரிமையாலும் அன்பாலும் ஆகும். ஜைன சமயத்தவர் வழிபடும் சின்னம் என்பதற்காகவும், திருக்குறளாசிரியான் சிறப்புப் பெயராகிய திருவுள்ள நாயனார் என்னும் பெயர் மாறித் திருவள்ளுவர் என வழங்குவதை நிலை நிறுத்தவுமே இச்சதிச் செயல் நடந்ததெனில் மிகையாகாது.

இவ்வரலாற்றைச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அந்நயினார் கோயிலின் எதிர் வீடுகளில் வசித்து வந்த முதிர்ந்தோரின் வாயிலாகக் கேட்டறிந்தேன். இச்செய்தியைத் தமிழ்ப் பொயார் திரு.வி.க. அவர்களிடத்தும் நான் தொவித்தேன். அப்பொயார் வியப்புற்று அங்கு சென்று கோயிலின் எதிர்வீட்டு வாயிற்படியில் நின்றிருந்த முதியோரை விசாரித்து உண்மையை அறிந்தார்கள். பின்னர் 1945-ஆம் ஆண்டில் இக்கட்டுரையின் தலைப்பில் உள்ளதுபோன்று திருக்குறள் ஆசிரியான் திருவடிகளைப் பாடமாக வரைந்து 'ப்ளாக்' செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1947-ம் ஆண்டு பிப்ரவா மாதம் 16-ம் நாள் மயிலாப்பூர் குயப்பேட்டை வீரப்பெருமாள் தெருவில் மயிலைத் திருவள்ளுவர் கழகத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்ப் பொயார் திரு.வி.க. அவர்களின் வற்புறுத்தலின் போல் யான் தலைமை வகித்தேன். எனது தலைமையுரையில் அக்கோயிலின் வரலாற்றைப் பேசுமாறு தமிழ்ப் பொயார் பணித்தார்கள். அவ்வாறே மேலே குறிப்பிட்ட வரலாற்றை விளக்கிப் பேசினேன். இதனைக் கேட்ட அறிஞர் பெருமக்களும், பொதுமக்களும் வியப்புற்றனர். அது மட்டுமல்ல! பண்டையக்கால மதக்காழ்ப்பின் போக்கினை எண்ணி எண்ணித் திகைத்துவிட்டார்கள். கூட்டம் முடிவடைந்ததும் அவ்விழாவில் சொற்பொழிவாற்றிய அறிஞர் பெருமக்களான தமிழ்ப் பொயார் திரு.வி.க. அவர்கள் பன்மொழிப்புலவர் டி.பி. மீனாட்சி சுந்தரனார் அவர்கள், தமிழ் அறிஞர் ரெவரெண்ட் அருள்தங்கையா அவர்கள். எஸ். லக்ஷ்மிதரன் பாரதியார் பி.ஏ.பி.எல். அவர்கள், திரு.கே. அன்பழகன், எம்.ஏ. அவர்கள் ஆகிய அறிஞர்களும், புலவர்களும் திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார்கள். யான் பொதுக்கூட்டத்தில் விளக்கியவாறே மதிற்சுவால் வைத்துள்ள திருவடிச் சின்னத்தைக் கண்ட முற்றம்; உண்மை உண்மை என உள்ளம் பூரிக்கப் பேசிக்கொண்டார்கள். அது மட்டுமல்ல; அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவ்வீதி மக்களில் ஒரு வயது முதிர்ந்த அம்மையாரை நோக்கி இது என்ன கோயில் எனக் கேட்டார்கள். உடனே அக்கிழவி நயினார் கோயில் எனப் பகர்ந்தார். எதிர்பாராத இவ்விடையைச் கேட்டதும் புலவர்களும், பொதுமக்களும் கைகொட்டி மகிழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை நோக்கித் தாங்கள் கூறியவாறு நயினார் கோயில் என்பது மறுக்கவியலாத வரலாற்று உண்மை எனப் பாராட்டினர். திருக்குறளாசிரியர் தேவர் திருவடிச் சின்னத்தை அகற்றித திருவள்ளுவர் உருவச் சிலையெனக் கற்பனையாகச் சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தும், தொன்று தொட்டுவரும் நயினார் கோயில் என்ற பெயரும், தேவர் திருவடிச் சின்னமும் அம்மக்கள் உள்ளத்தினின்றும் அகலாது நின்று நிலவுகிறது என்றும் வியந்து பேசினார்கள். இத்தகு அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் உண்மை கண்ட நாம் பண்டைய வரலாற்றுச் சின்னத்தை நிலைநாட்ட முற்படவேண்டும். இதனால் நமது ஆசிரியர்களாகிய அறவோர்கள்பால் நாம் கொண்டிருக்கும் மதிப்பயும், பக்தியையும் உலகோர் கண்டு வியப்பர். உயர்ந்தார் திருவடிகளை வணங்கும் நமது பண்பும் எந்நாளும் அழியாது வழி வழி வளரும்.

ஆகவே நமது பாரத அரசியலாரால் வெளியிடப்பட்டதும் நமது சென்னை அரசியலாரைக் கலந்து வரையாததுமாகிய திருக்குறளாசிரியான் திருவுருவப் படத்தைப் பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் ஏற்காததும் பலரும் அறிந்தே. "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்து தொழித்துவிடின்" எனத் திருக்குறளாசிரியர் எவைகளை வேண்டா என வெறுத்தாரோ அவைகளையே அவர் தலையில் வலிந்து சுமத்தியது போன்ற உணர்ச்சியே நமது உள்ளத்தில் உருவாகிறது.

இந்நிலையில் தமிழ் மக்கள் பலரும் சமய, சாதி, அரசியல் கட்சி நோக்கங்களை மறந்து, "ஒன்றாக நல்லது கொல்லாமை" என்னும் அருட்கொடியைத் தாங்கி நிற்கும் நமது தேவர் பெருமானைப் பண்டைய காலச் சான்றோர்கள் வழிநின்று அவ்வறவோரின் திருவடிகளையே சிலையாகச் செய்து வாழ்த்தி வணங்குவோமாக.
 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com