முகப்பு வாயில்

 


ஆசிரியர் : ஜீவபந்து T.S. ஸ்ரீபால் அவர்கள்

பொருள் உதவி : தென்னாத்தூர் மணியம் அப்பாச்சி நயினார் அவர்கள்

வெளியிடுதல் : ஜைன இலக்கிய ஆராய்ச்சி மன்றம் (Jain Literature Research Society)
34, சுப்பிரமணிய முதலி தெரு, சென்னை - 600 001.

மூன்றாம் பதிப்பு : 1968

இந்நூல் தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில் 3-1-1968 முதல் நடைபெறும் இரண்டாவது உலகத்தமிழ்க் கருத்தரங்கு மகாநாட்டின் நினைவாக வெளியிடப்பெற்றது.

நூன்முகம்

தமிழகக் கல்வி அமைச்சரும் என் அன்புக்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் உரியவருமாகிய உயர் திரு. இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நேர்மைமிகு நினைவில் உதித்ததன் காரணமாகச் சென்னையில் 3-1-68 முதல் நடைபெறப்போகும் இரண்டாவது உலகத் தமிழ்க்கருத்தரங்கு மகாநாட்டின் பிரதிநிதிகளில் தமிழ்நாடு ஜைனசங்கத்தின் சார்பாக என்னை ஒரு பிரதிநிதியாக அம்மகாநாட்டின் அமைப்புக்குழுவினர் தேர்ந்தெடுத்துக் கடிதம் எழுதி மகிழ்வித்தார்கள். இக்கடிதத்தைக் கண்டவுடன் இறந்தவர் பிழைத்ததுபோன்ற உணர்ச்சி மேலிட்டு மகிழ்ந்தேன். என் உளம் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் அப்பொயோர்களுக்குக் கடிதம் எழுதி ஏற்றுக்கொண்டேன்.

பின்னர், மகாநாட்டின் நினைவாக ஒரு சிறப்பு மலர் வெளியிடுவதால் அவ்வரலாற்று மலருக்கு ஜைனர்கள் கண்ட மெய்ந்நெறி என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புமாறு மாநாட்டு மலர்க்குழு பெருமக்கள் பணித்தார்கள். யானும் அவ்வாறே கட்டுரை எழுதி அனுப்பி நன்றி செலுத்தியுள்ளேன்.

இந்நிலையில் யான் அப்புனித மகாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பின் கடமையையும் பயனையும் எண்ணிப் பார்த்தேன். இம்மகாநாட்டிற்கு விஜயம் செய்யும் பல்வேறு நாட்டு அறிஞர் பெருமக்களுக்கும் ஜைனசமயக் கொள்கைகளை விளக்கும் என் ஆராய்ச்சி நூல்களில் சிலவற்றை அச்சிட்டு வழங்க உள்ளம் விழைந்தது. என் விருப்பம் ஈடேறப் பொருள் வேண்டும் முயற்சியில் இறங்கினேன். எதிர்பாராத நிலையில் திண்டிவனத்தில் நடந்த அருகர் விழாவன்று யானும், தென்னாத்தூர் மணியம் உயர்திரு. அப்பாச்சி நயினார் அவர்களும், சிந்தாமணி நாவலர் திரு. N.சாந்தகுமார் ஜெயின் அவர்களும் சென்னையில் நடைபெறப்போகும் இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மகாநாட்டைப்பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் என் உள்ளக்கிடக்கையை வெளியிட்டேன். உடனே திரு. N. சாந்தகுமார் ஜெயின் அவர்கள் உயர்திரு அப்பாச்சி நயினார் அவர்களை நோக்கித் தாங்கள் ஏதாகிலும் ஒரு நூல் வெளியிட வேண்டும் என விரும்பினீர்களே நமது ஜீவபந்து அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுங்கள் என்றார். அப்பொயாரும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். யான் அப்பொயாரை எனக்கு அறிவு வந்த நாள் முதலே அறிவேன். அவர்தம் சமயப் பற்றும், இக்காலத்தில் சமயத்திற்குச் செய்யும் பணி என்றால் ஜைன சமய அறவோர்கள் இயற்றியருளிய அறிவும் அறமும் நிறைந்த நூல்களை வெளியிடுதலே சிறந்த பணி என்பதையும் நன்கறிந்தவர். அந்நல் உணர்ச்சியே அப்பொயாரை நூல் வெளியிடுதலில் ஆர்வங் காட்டி ஆதரவு நல்கிற்று. என் அருமை நண்பர் திரு. நா. சாந்தகுமார் ஜெயின் அவர்களுக்கும் இந்நூலை வெளியிடப் பொருளுதவி புரிந்தத் தென்னாத்தூர் மணியம் உயர்திரு. அப்பாச்சிநயினார் அவர்கட்கும் என் நன்றிகலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றேன்.

இந்நூல் இன்றைய உலகுக்கு இன்றியமையாதது. மக்கள் ஒருமைப்பாடு, பொருளாதார சமத்துவம், பகுத்துண்டு வாழும் பண்பு, பசியும் பகையும் நீங்கிய அமைதி வாழ்க்கை. மக்கள் வாழ்க்கைப் பண்பு ஆகிய நல்வாழ்வை வளர்க்கும் அரிய ஆராய்ச்சி நூல். எனவே நமது தமிழ்நாடு அரசியலார் உள்துறை முன்னாள் அமைச்சர் உயர்திரு. எம்.பக்தவச்சலம் அவர்களும், நிதி அமைச்சர் உயர்திரு. சி. சுப்ரமணியம் அவர்களும், மாஸ்கோ நகால் தமிழ்ப்பணியாற்றிய உயர்திரு. பண்டிட், இராமமீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும், தமிழ் ஆராய்ச்சிப் பேரறிஞர் உயர்திரு. பி.ஸ்ரீ. ஆச்சாரியார் அவர்களும், ஜெக்கோஸ்லோவேகியா தமிழ் அறிஞர் டாக்டர் கமில் சுவலேபில் அவர்களும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் பல்வேறு துறைகளில் அரும்பெரும் ஆராய்ச்சி நூல்களை இயற்றிப் புகழ் பெற்றவருமாகிய உயர்திரு. அ.மு. பரமசிவானந்தம் எம்.ஏ.எம்.லிட். அவர்களும், சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் திங்கள் இதழ் பாரதி ஆசிரியரும், இந்நூலைப்பற்றிய தங்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கி என்னை ஊக்குவித்திருப்பதினின்றும் இந்நூலின் பெருமை விளங்குகிறது. இறுதியாக அமொக்க நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் நரேந்திரகுமார் செத்தி என்ற பேரறிஞர் அவர்களின் பாராட்டுப் பேருரைகளையும் இணைத்துள்ளேன். பெறலரும் தவச்செல்வர்களாகிய இச் சான்றோர்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றேன். இந்நூலை அழகுபெற அச்சிட்டு வழங்கிய குமரன் அச்சகம் உரிமையாளர் அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக.

இந்நூல் அச்சிடப் பொருள் பற்றாக்குறைக்கு சென்னை மார்வார், குஜராத் ஜைனர்களில் விரிந்த மனப்பான்மையும் பரந்த நோக்கமும் கொண்ட சிலர் அளித்த பொருளுதவியாலும் அச்சிடப்பெற்றது.

அன்பன்,
T.S. ஸ்ரீபால்

சென்னை
1-1-68


Introduction by

Dr. KAMIL ZVELEBIL,
Professor of Dravidian Studies
Oriental Institute, Praha,
CZECHOSLOVAKIA.

My esteemed and honourable friend Jeevabandu T.S. Sripal, has succeeded to prove on a few pages of this tiny yet very important book that the message of India has to say to the world would be lame and imcomplete if it did not include the fundamental principles of Jainism. T.S. Sripal has shown that these two fundamental principles are democratism and humanism, he has demonstrated by a series of comparisons with the teaching of Gandhi, Lenin and Marx, how modern adaptable to the needs of our modern world are some of the essential truths of Jaina Philosophy.

Dated 12-9-62 (Sd). KAMIL ZVELEBIL.

மொழி பெயர்ப்பு

என் நன்மதிப்புக்குரிய நண்பர் ஜீவபந்து T.S. ஸ்ரீபால் அவர்கள் இச்சிறு நூலினை எழுதியிருக்கிறார். நூல் சிறியதாயினும் பொதும் முக்யத்வம் வாய்ந்தது. எவ்வாறெனில் இந்நூலின் ஒரு சில பக்கங்களில் ஓர் உண்மையை நிலை நாட்டுவதில் அவர்வெற்றிபெற்றிருக்கிறார். ஜைன சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அடங்கவில்லையானால், பாரதநாடு உலகினுக்குத்தரும் செய்தி நிறைவுடையதாகாது என்பதே அவ்வுண்மையாகும்.

ஜனநாயகமும் மக்கள் வாழ்க்கைப் பண்புமே இவ்விரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் என்பதைத் திரு. ஸ்ரீபால் அவர்கள் காட்டியுள்ளார். மகாத்மா காந்தியடிகள், லெனின், மார்க்ஸ் ஆகியோரின் அறிவுரைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி ஜைன சமயத் தத்துவத்தின் முக்கியமான உண்மைகள் நமது இன்றைய உலகத் தேவைகளுக்கு எப்படி பொருந்துகின்றன என்பதை அவ்வொப்புமைகளின் மூலம் அவர் நன்கெடுத்துக்காட்டியுள்ளார்.

(ஒப்பம்) டாக்டர் கமில் சுவலெபில்
திராவிடமொழி ஆராய்ச்சிப் பேராசிரியர் ப்ராஹா, ஜெக்கோஸ்லோவேகியா.

முன்னாள் உள்துறை அமைச்சர்
உயர்திரு. M. பக்தவத்சலம் அவர்கள் வழங்கிய
அணிந்துரை

ஆசிரியர் ஜீவபந்து ஸ்ரீபால் தமிழ் அறிவையும் தமிழ் அன்பையும் நன்கு பெற்றவர். "நில உடைமை உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகாகமே" என்ற இந்நூலை அவர் வெளியிட்டிருப்பதை நான் பாராட்டுகிறேன். தமிழ் மக்கள் பண்டைக் காலத்தொட்டுப் பரந்த நோக்கம் கொண்டவர்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உயர்ந்த கோட்பாட்டை உடையவர்கள். நிலச் சொந்தக்காரர்களுக்கு நஷ்ட ஈடும் கொடுத்து, நிலத்தைப் பகிர்ந்து கொள்ளுவது நம் தர்மத்துக்கு விரோதம் என்று கூறும் சில அறிஞர்களுக்கு இந்நூல் தகுந்த விளக்கத்தை அளிக்கும்.

M. பக்தவச்சலம்

மயிலை
6-2-1961.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்
உயர்திரு. C. சுப்பிரமணியம் அவர்கள்
வழங்கிய சிறப்புரை

குடியரசாட்சியில் உரிமைக்கு உள்ள உயர்ந்த இடம் கடமைக்கும் உண்டு. தனியொருவான் உரிமைக்குப் பாதுகாப்பு உண்டு. அதற்கு அரசியல் சட்டமும் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆயின், அவரது உரிமையின் பெருக்கம் அடுத்தவருக்கு அல்லது சமுதாயத்திற்கு ஊறுவிளைவிக்க முயலும்போதுதான், மக்கள் அரசாங்கள் குறுக்கிட வேண்டியுள்ளது. ஏனெனில், ஒரு சிலருக்காக அவர்கள் மிக உயர்ந்தவர்களாக இருந்தாலும் சாயே - நாட்டின் தேசீய நலன் குன்றுமாறு விட்டுவிடுவது சோஷலிச அரசாங்கக் கடமையாகாது.

இத்தகைய காரணங்களினால்தான் தமிழ் நாட்டு அரசாங்கமும், "நில உச்சவரம்புச் சட்டம்" கொண்டுவர முடிவு செய்து உள்ளது. இதில் தனியார் உரிமைக்குப் பாதுகாப்பு இல்லை என்ற சிக்கலுக்கே இடமில்லை. நாட்டின் தேசீய நலனை முன்னிட்டுத் தனியொருவான் உரிமைக்கு ஒரு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லாரும் இன்புற்றிருக்கும் ஒரு சமதர்மக் குடியரசை அமைக்க நம்மால் இயலும். அத்துடன் உச்ச அளவுக்கு மேலுள்ள நிலம் பறிக்கப்பட்டு விடுவதும் இல்லை. அதற்குத் தகுந்த நஷ்ட ஈடும் தரப்படும்.

பிறர் நலத்தையும் பேணி வாழும் இவ்வித அறவாழ்க்கைமுறை தமிழர்களுக்குப் புதியதன்று. முடியாட்சி நிலவிய பண்டைக் காலத்திலும், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புத"லைத் தலையாய அறமாக அவர்கள் போற்றி வந்துள்ளார்கள். மிகுபொருள் குவித்துக் கொள்வதை அறஞ்சாராக் கொடுமையாகக் கடிந்துள்ளார்கள். இவற்றுக்கான சான்றுகள் திருக்குறள், சிந்தாமணி முதலான செந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து விளக்கும் இச்சிறு நூல், "நில உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகாகமே" என்பதை நன்கு நிலைநாட்டியுள்ளது.

ஏற்ற தருணத்தில் எளிய தமிழ் நடையில் எழுதியுள்ள திரு. ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள் சிறந்த தொண்டாற்றியுள்ளார் என்றே நம்புகிறேன். இந்நூலுக்கு தமிழ்ப் பெருமக்களின் நல்லாதரவு கிடைக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சி. சுப்பிரமணியம்

சென்னை
30-3-1961.

ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் பண்பாட்டு அமைச்சரகத்தில் (Ministry of Culture U.S.S.R.)
தமிழ்ப்பணியாற்றிப் புகழ்பெற்ற திரு. பண்டிட். P.R.M. பிள்ளை, M.A., அவர்கள் வழங்கிய

மதிப்புரை


"சுவைத்தற்குரியது காவியம்" - இங்ஙனம் இயம்பி வாயாரப் படித்தும், நெட்டுருச் செய்தும், பலகாற் கக்கியும் காலம் போக்குவோர் நுனிப்புல் மேய்வோரே. இலக்கியப் பரவையுள் குள்ளக்குடைந்து ஆழ உள்புக்கு அரிய முத்துக்கள் வெளிக்கொணர்வோர் ஒரு சிலரே.

"காவியம் காலக்கண்ணாடி. அவ்வந்த நூற்றாண்டில் நிலையறிதல் மட்டுமே கருவியாகும்" என்று வரம்பிட்டுக்கொண்டு காலங்கடந்து நின்று ஒளிகாலும் உயர்ந்த அறிவு மணிகளை ஆய்ந்து தேடாது சோம்புவோரும் ஒரு சிலர் உள்ளனர்.

இந்நிலையில் தோற்றக் காலம் இன்னதென்றறிய கில்லாத் தொன்னூல் திருக்குறள். சிலப்பதிகாரம், சிந்தாமணி, நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், மேருமந்தர புராணம், கலிங்கத்துப்பரணி முதலிய பல்வேறு இலக்கியங்களையும் தீரக்கற்றாய்ந்து இவற்றுள் வலியுறுத்தப்படும் உண்மையை வெளிக்கொணர்ந்து 'உயிர்க்கூறு செய்யாமல், எங்கும், இரங்குள்ளத்தாராய். அருள் ஒழுகப் பொதுமை அறப்பொற்புணர்வு மீதூர, எல்லாமும் எவர்க்கும் எய்திடும் ஏமநெறி காட்டிப் பகுத்துண்டு வாழும் பெற்றியே பண்டு ஆதி அருகர் விருஷபதேவர் வகுத்த அறம்' என்று நிறுவியுள்ளார் அன்பர் ஜீவபந்து ஸ்ரீபால்.


 

1   2   3   4   5   6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com