முகப்பு வாயில்

 


"கொல்லா விரதங் குவலயமெல்லாப் ஓங்க
எல்லார்க்குஞ் சொல்லுவது என்னிச்சை"

பட்டினத்துச் சிறுவன் பட்டிக்காட்டிற் கண்ட
பொன்னுலக நாதனின் பூவுலகத்தொண்டர்கள்


கருணாகரன் என்ற பட்டினத்துச் சிறுவனுக்கும் அவன்
தாய்க்கும் கிராமத்தில் நடந்த சம்பாஷணை

கருணாகரன்: அம்மா! அம்மா! என்னை விட்டு விட்டு எங்கே போய்விட்டாய்? இருளாயிருக்கிதே! என்னமோ கூ! கூ! வென்று கூவுகிறதே! பயமாயிருக்கிறதம்மா.

தாயார்: பயப்படாதே அப்பா! அது நம்முடைய கோழிதான். இதோ சாணந் தெளித்துவிட்டு வருகிறேன். இன்னும் பொழுது விடியவில்லை, நீ தூங்கு.

கருணாகரன்: கோழியா கூவினது? அதற்குத் தூக்கம் வரவில்லையா? பொழுது விடிவதற்கு முன்பே எழுந்து கூக்குரலிட்டு நம்முடைய தூக்கத்தைக் கெடுக்கின்றதே. அதைத் துரத்திவிடம்மா.

தாயார்: குழந்தாய்! அதை அவ்வளவு அலட்சியமாக எண்ணிவிடாதே. கோழி ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொயாரைப் போன்றது. எவ்வாறெனில் கடவுளைத் தியானஞ்செய்யும் பக்திமான்களுக்கும், வேதாகமங்களைப் பாராயணஞ் செய்யும் பரம வேதாந்திகளுக்கும், வித்தை கற்கும் மாணவர்களுக்கும், வெளியூர் களுக்கும் போகவேண்டிய பிரயாணிகளுக்கும், வேளாண்மை முதலிய தொழில்களைச் செய்யும் தொழிலாளர்களுக்கும், தங்கள் கணவன்மார்கள் காலைக்கடனுக்கு வெளியே போகுமுன் சாணந் தெளிக்கவும், "சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி" என்ற பழிவராது காலையிலேயே சமையலறையைப் புகவும் வேண்டிய பெண்களுக்கும் விடியற்காலமே தகுந்ததும் செளகர்யமுள்ளதுமான காலமாகையால் அவ்வேளையின் மேற்கண்டவர்களை அயர்ந்த சித்திரையில் ஆழ்ந்து விடாதபடி எழுப்பிக் காலைக்கடனை முடித்துக்கொண்டு வெயிலுக்கு முன் அவரவர்கள் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறுவன போன்றே கோழிகள் தங்கள் இனிய குரலின் ஓசையான இசையுடன் கூ! கூ! வெனக் கொக்காத்து எழுப்புகின்றன.

கருணாகரன்: அம்மா! அவைகள் நம்மைப்போல் அயர்ந்து தூங்கிவிடாவா?

தாயார்: கருணா! நன்றாய்க் கேட்டாய். (சிரித்துக் கொண்டே கட்டி முத்தங் கொடுக்கிறாள்.) நம்முடைய ஊரில் கால அளவைக் காட்ட மாலை நான்கு மணிக்குக் குண்டு போடுகிறார்களே தொயுமா?

கருணாகரன்: ஆம், தொயும்.

சிறிய தாயார்: அதனால்தானா 'தண்டசோற்று மாமா, குண்டு போட்டு வாடா' என்று வழங்குகிறது!

தாயார்: ஆமாம்! ஆமாம்! அம்மாதிரியே கடவுள் கோழிகளை இயற்கைக் குண்டுகளாக அமைத்திருக்கிறார். குண்டு போடுகிறவர்கள் பத்து நிமிஷம் தவறிப்போட்டாலும் போடுவார்கள். ஆனால் சூரியனும் சந்திரனும் மற்றக் கோள்களும் இயற்கைச் சக்தியினால் தங்களுக்குரிய வேளையில் உதயமாகி ஒளியினால் எவ்வாறு உலகுக்கு உபகாரம் புரிகின்றனவோ அவ்வாறே கோழிகளும் ஒரு நிமிஷங்கூடத் தவறாது ஏவுவாரின்றியே உலக நன்மைக்காக விடிய ஜாமத்திற்கு எழுந்து கூவும் இயற்கைச்சக்தி அமைந்துள்ளன. அதனாற்றான் மற்றப் பறவைகளைப்போல் பறக்கும் சக்தியும் படைத்ததில்லை. ஆகையால் அவைகள் உம்மைப்போல் அயர்ந்து தூங்கவே தூங்கா.

கருணாகரன்: அம்மா! சூரியன், சந்திரன், கோள்கள், கோழிகள் ஆகிய இவைகள் ஒரே தன்மையினவா! ஆ! ஹா! அம்மா! மனிதர்களுக்கும் இல்லாத மகிமை கோழிகளிடத்தி லிருப்பதை இன்றுதான் அறிந்தேன். சூரிய சந்திரரைப்போலக் கோழிகளை ஜனங்கள் கும்பிடுகிறார்களா?

தாயார்: ஆ! ஹா! தினந்தோறும் கும்பிடுகிறார்கள். சுப்பிரமணிய கடவுள் கோழியின் உண்மைத் தொண்டைக் கண்டு வியப்புற்று அதனைத் தன் கொடியிலமைத்துக்கொண்டார். அதனாற்றான் அவருக்குச் 'சேவலங் கொடியோன்' என்ற பெயருண்டாயிற்று. ஜனங்கள் முருகக் கடவுளை வணங்கும்போதெல்லாம் சேவலையும் கும்பிடுகிறார்கள்.

கருணாகரன்: என்ன ஆச்சர்யம்! ஏவா உபகாரம், இவ்வுலகில் ஏவாம்மா செய்வார்கள்? இந்த ஒரு சிறிய ஜீவனிடத்தில் இத்தகைய பெருந்தன்மை அமைந்துள்ள தன்றோ! நானும் கோழிகளைக் கடவுளாகக் கும்பிடுகிறேன்.

அம்மா! வெளிக்கு எங்கே போகவேண்டும்?

தாயார்: அதோ தொகிறதே, அந்தத் தோட்டத்தில் போ.

கருணாகரன்: அம்மா நீயும் வா எனக்குப் பயமாயிருக்கிறது.

தாயார்: வருகிறேன் வா.

கருணாகரன்: அம்மா! இதோ பாரம்மா, இந்தப் பன்றி என்னைக் கடிக்க உறுமிக்கொண்டே பின்னால் வருகிறது. கல்லையெடுத்து அடியம்மா.

தாயார்: என் செல்வமே, அது உன்னைக் கடிக்காது. அவ்விடத்தை விட்டுச் சற்றுத் தூர உட்காரு. அது மலத்தைத் தின்றுவிட்டுப் போய்விடும்.

கருணாகரன்: அது ஏனம்மா? நம்முடைய மலத்தைத் தின்கின்றது.

தாயார்: கண்ணே! நம்முடைய ஊரில் கக்கூசிலிருக்கும் மலத்தைத் தினமும் எடுத்துச் சுத்தஞ்செய்யத் தோட்டிகளை எப்படி ஏற்படுத்தி யிருக்கின்றார்களோ, அம்மாதிரியே உலக ஆரம்பத்திலிருந்தே கடவுள் இயற்கைக் தோட்டிகளாகப் பன்றிகளைப் படைத்துள்ளார். மனிதர்களில்; உயர்வு தாழ்வைக் கடவுள் கற்பிக்கவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மலமெடுக்கும் வேலையில் பலர் ஈடுபடுகிறார்கள். ஆனால் கடவுள் பன்றியைத்தான் சுத்தஞ்செய்யப் படைத்தார். ஆகையால் அவ்விடத்தைச் சுத்தஞ் செய்யவே அது உறுமிக் கொண்டு ஓடிவருகிறது.

கருணாகரன்: ஏனம்மா, சுத்தஞ் செய்யாவிட்டால் என்ன?

தாயார்: அவ்வப்போது சுத்தஞ் செய்யாவிட்டால் மலங்கள் குவியல் குவியலாகச் சேர்ந்து துர்நாற்றமெடுக்கும். அத் துர்நாற்றத்தால் காற்றுக் கெடும். அக்கெட்ட காற்றை நாம் சுவாசித்தால் பலவித வியாதிகள் சம்பவிக்கும். ஆகையால் அடிக்கடி சுத்தஞ்செய்துவிட்டால் சுகாதாரக் கேடின்றி நோயற்ற வாழ்வு வாழலாம்.

கருணாகரன்: அம்மா! கடவுள் மனிதர்களின் வாழ்க்கைக்குத் துணையாக எவ்வளவு நன்மைகள் செய்திருக்கின்றார் பார்த்தீர்களா? ஆ ஹா! பன்றிகளைக் கடவுளுடைய தோட்டிகளென்றே சொல்லவேண்டும் இவைகளை வணங்குவது உண்டா?

தாயார்: உண்டு. மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பன்றியாகவும் ஓர் அவதாரம் எடுத்திருக்கின்றார். ஆகையால் மஹா விஷ்ணுவை வணங்குபவர்களெல்லாம் பன்றியையும் வணங்கி வருகிறார்கள்.

கருணாகரன்: தாயே! அவை தெய்வ உருவா! அதிசயம்! அதிசயம்! இதோ மும்முறை வணங்குகின்றேன்.

தாயார்: இதோ தண்ணீர் இருக்கிறது. சுத்தம் செய்துகொண்டு வா. குளத்திற்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வரலாம்.

கருணாகரன்: அம்மா, இதோ வந்துவிட்டேன்.

(இருவரும் குளத்திற்குப் போய்க் குளிக்கிறார்கள்)

தாயார்: கருணா! ஆழத்தில் போகாதே: இங்கேயே குளி.

கருணாகரன்: ஐயையோ! அம்மா, மீன்கள் காலகலைக் குத்துகின்றனவே. இவை ஏனம்மா என்னைத் தொந்தரவு செய்கின்றன?

தாயார்: அவைகள் உன் கால்களிலுள்ள அழுக்கை எடுக்கின்றன. இவைகளும் கடவுளால் படைக்கப்பட்ட தண்ணீர் தோட்டிகள். சுத்த காற்று, சுத்த ஜலம், சுத்த உடை, சுத்த ஆகாரம் ஆகியவைகளே நோயற்ற வாழ்க்கைக்கு இன்றியமையாதன வாகும். ஆகையால் பூமியைச் சுத்தஞ் செய்து காற்றைச் சுத்தமாக்க எப்படிப் பன்றியைக் கடவுள் படைத்தாரோ, அப்படியே ஜலத்தில் குளிப்பவர்களின் சார அழுக்குகளையும், சா ரத்திலிருக்கும் புண்களின் துர்நீரையும், துணிகளைத் துவைப்பதனா லுண்டாகும் அழுக்குகளையும் இன்னும் ஜலத்தில் சேரும் பலவித அழுக்குகளையும் நீக்கி ஜலத்தைச் சுத்தஞ் செய்யவே இந்த எளிய மீன்களைப் படைத்துள்ளார்.

கருணாகரன்: அம்மா! என்ன விந்தை! ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் இவைகளின் பரோபகாரத்தை அளவிட்டுச் சொல்லமுடியாதென்றால் ஒரு நாவு படைத்த நம்மால் என்ன சொல்லக்கூடும்! நல்ல தொண்டர்கள். அம் மீன்களை வணங்குபவருண்டா?

தாயார்: ஆ!ஹா! மஹாவிஷ்ணு மச்சமாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். தவிர மன்மதன் மீனினுடைய பளபளப்பையும் மினுமினுப்பையுங் கண்டு அதனைத் தன் கொடியில் பதித்துக்கொண்டான் அதனாலேயே மன்மதனுக்கு 'மீன் கொடியன்' என்ற பெயரும் உண்டாயிற்று. இவர்களை வணங்குபவர்க ளெல்லாம் மீன்களையும் பக்தியுடன வணங்கியே வருகிறார்கள்.

கருணாகரன்: அம்மா எல்லாம் தெய்வ அம்ஸாகவே இருக்கின்றன. இந்த அழகிய சிறிய மீன்களை ஆயிரம் மடங்கு நமஸ்காக்கின்றேன்.

தாயார்: சா, வா, போவோம்; நாழிகையாய்விட்டது. இனிமேல் போய்ச் சமையல் செய்யவேண்டும்

(இருவரும் வீட்டிற்குச் சென்றார்கள்)

கருணாகரன்: அம்மா! காபி.

தாயார்: கண்ணா! கிராமாந்தரங்களில் காபி கிடைக்காது. பால் இருக்கிறது. நேற்று மதராஸில் வாங்கிவந்த ரொட்டியைத் தின்றுவிட்டுப் பாலைக் குடித்துவிடு.

கருணாகரன்: இவர்கள் வீட்டில் பசுவோ எருமையோ ஒன்றையுங் காணோமே. பால் விலைக்கு வாங்கிவந்தீர்களா?

தாயார்: இல்லை, இல்லை. இவர்கள் வீட்டில் ஆடுகள் அநேகம் இருக்கின்றன. அவகைளின் பாலைத்தான் உனக்குக் கொடுப்பார்கள். அதோ பால் கறக்கிறார். வா, போவோம்.

கருணாகரன்: அம்மா, ஆட்டின் பால் நல்லதா? குடிக்கலாமா?

தாயார்: எவ்வளவோ நல்லது. ஆடுகள் பலவித தழைகளைத் தின்கின்றன. ஆகையால் அதன் பால் பல மூலிகைகளின் சத்தாகவே யிருக்கும். அதனால்தான் ஆட்டின் பால் தேகத்துக்கு மிகவும் மேலான சத்தை அளிக்கிறதென்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

கருணாகரன்: அம்மா! அதன் குட்டிகளுக்குப் பால் வேண்டாமா? அவைகளை ஏமாற்றி நாம் சாப்பிடலாமா?

தாயார்: உண்மைதான், ஆயினும் பசு, எருமை, ஆடு முதலிய ஜீவராசிகளும் நம்மோடு வாழ்ந்து உழைத்து நாம் பிரதியுபகாரமாகக் கொடுக்கும் புல், தழை, பிண்ணுக்கு முதலிய உணவுகளே உண்டு களிக்கின்றன. கன்றுகளுக்குப் பால் கொடாமல் பாலைக் கறப்பவர் படு நரகஞ் சேர்வாரகள்.
 

1  2


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com