முகப்பு வாயில்

 


சமணர் யார்


சமணம் என்னும் சொல் 'சிரமண' என்னும் வட சொல்லின் திரிபாகும். 'சிரமண' என்பதற்கு இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் சமத்துவமாக ஏற்பவர்; நட்பு, பகை அற்றவர், இகழ்வாரை வெகுள்வதும் புகழ்வாரை அருள்வதும் இல்லாதவர்; அன்பும், அருளும், அடக்கமும் உடையவர்; இறப்பையும் பிறப்பையும் பொருட்படுத்தாதவர்; உலகில் நல்லவற்றையே செய்ய வேண்டுமென்பதற்காக எல்லாச் சுகங்களையும் துறந்தவர்; ஐம்புலன்களைத் தன்வயப்படுத்தியவர்; 'யான்' 'எனது' என்னும் செருக்கு அறுத்தவர்; தமக்கு வரும் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொள்பவர்; எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர்; படநாகந்தோலுரித்தாற் போல் உள்ளும் புறமும் துறந்து பட்டின நோன்புடன் ஒழுக்கங்காப்பவர்; தமது ஆன்மாவிற்குத் தொடர்புடையதாக இருக்கும் உடலையும் மிகையாகக் கருதித் தவம் இயற்றுபவர் என்னும் பலபொருள்கள் உண்டு. இப் பொருள்களால் முற்றும் துறந்த முனிவர்களையே வடமொழியில் 'சிரமண' என்று அழைத்துவந்தனர் என்பது தெளிவு. இத்தூயோரையே தமிழ்மொழியில் 'துறவோர்' என்று அழைத்து வந்தனர். எனவே, சமணர் என்பதும் துறவோர் என்பதும் மொழியால் வேறுபடினும் பொருளால் ஒரே கருத்தை விளக்குவனவாகும். மேலும் இச்சொற்கள் ஒரு சமயத்தையோ மதத்தையோ சார்ந்தனவல்ல என்பதும், துறவறத்தின் இயல்பை விளக்கும் பொதுச் சொற்களே என்பது பெறப்படும்.

ஆதியில் இத்துறவற நெறியையும் இல்லற நெறியையும் வகுத்தருளியவர் பகவான் விருஷபதேவர். அவர், நம்மைப் போன்று தாய் தந்தை வயிற்றில் பிறந்து, மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்; அஹிம்ஸா தர்மத்தின் தந்தை அகரமுதலாகிய எழுத்துக்களையும்,ஒன்று முதலாகிய எண்களையும் தோற்றுவித்த முதற் பேராசிரியர்; வாள், வரைவு, உழவு, வாணிபம், கல்வி, சிற்பம், ஆகிய அறுதொழில்களையும் கற்பித்து, வாழ்வுக்கு வழிகாட்டிய வள்ளல்; மக்கள் நல மேம்பாட்டிற்குரிய இல்லறம் துறவறம் ஆகிய இரு பேரறங்களையும் வகுத்தருளிய அறவாழி அந்தணர்; தேவைக்கு மேலாகப் பொருள்களைப் பதுக்கி வைத்தல், ஐம்பெரும் பாவங்களில் ஒன்றெனக் கூறி 'மிகு பொருள் விரும்பாமை' என்னும் அரியதோர் அறம் வகுத்த முதற் பொதுவுடைமைத் தலைவர்; செய்தொழில் வேற்றுமையன்றிப் பிறப்பினால் மக்களனைவரும் ஒன்றென உரைத்த உத்தமர்; கண்கள் எவ்வாறு பிற பொருள்களைத் தெளிவாக அறிகின்றனவோ அவ்வாறே நூல் பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்தறிய வேண்டுமென்னும் பகுத்தறிவியக்கத்தின் கர்த்தர்; ஆத்மீக மேம்பாட்டிற்காகத் துறவற நெறியை மேற்கொண்டு தவ ஒழுக்கத்தால் சிறந்துயர்ந்த பரமாத்மா; கேவல ஞானம் (முழுதுணர் ஞானம்) பெற்று வீடு பேறு பெற்றவர்; பலதிறப்பட்ட இந்திய இலக்கியங்களிலும் போற்றப்பெறும் வரலாற்றுப் பெருந்தலைவர். இப்பேரறிவன் திருமொழியே உலகக் கலைகளுக்கெல்லாம் முதல் நூலாகும். இவ்வுண்மையை,

"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதலநூ லாகும்"

எனத் தொல்காப்பியரும்,

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

எனத் திருக்குறள் ஆசிரியர் தேவரும்.

"ஆதிவேதம் பயந்தோய் நீ"

எனத் திருத்தக்க தேவரும்,

"ஆதியங்கடவுளை அருமறை பயந்தனை"

எனத் தோலா மொழித் தேவரும், போற்றி இருப்பதினின்றும் அறியலாம். எனவே பகவான் விருஷப தேவர் அருளிய துறவற நெறியை மேற்கொண்ட துறவிகளையே உண்மைத் தவத்தோர் என உலகம் ஏற்றுக் கொண்டது. முற்றும் துறந்த அம்முனிவர்களையே சமணர் என்றும் துறவோர் என்றும் போற்றினர்.

அறவோர்

கல்வி அறிவும் தவ ஒழுக்கமும் நிறைந்த சமண முனிவர்கள் பரத கண்டமெங்கும் பரவியிருந்தனர்; சிறப்பாகத் தமிழகத்தில் தலைசிறந்து விளங்கினர்.

இத்தமிழ் முனிவர்கள் பகவான் விருஷப தேவர் அருளிய அறம், பொருள், இன்பம், வீடு என்றும் நான்கின் அடிப்படையில் தோன்றிய தொல்காப்பியமும், திருக்குறளும் கூறும் தவவொழுக்கத்தில் சிறந்தும் பிறழாத நோன்புடையவர்கள்; அஹிம்ஸா மூர்த்திகள்; அறிவால் நிறைந்த அறமாண்புடையோர் ஆன்ம தத்துவமும் அறிவியல் தத்துவமும் அவர்கள் பாற் பொலிவுற்று விளங்கின. தர்க்க சாஸ்திரம் தத்துவவாதம், நியாயவாதம், கிரியாவாதம் முதலியன அவர்கள்பாற் சிறந்திருந்தன. இன்றைய உலகில் நிலவும் அணுத்திரள்களின் ஆற்றலை என்றோ கண்டறிந்த விஞ்ஞானிகள் இம்முனிவர்கள். இவர்கள் சென்றகாலம், வருங்கால நிகழ்ச்சிகளை அறியும் பேரறிவு படைத்தவர்கள்; வானம், நிலம் ஆகியவற்றின் இயல்புகளைத் தங்கள் ஞானத்தால் அளந்து அறிந்தவர்கள்.

"இருமை வகைதொந்து ஈண்டு அறம்பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு"

"சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்றைந்தின்
வகைதொவான் கட்டே உலகு

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"

என்னும் வாய்மொழிக்கு இலக்கணமாய் இருப்பவர் இஞ்ஞானிகள்.

இம் மாசறுகாட்சியவர் தமிழ்நாடெங்கும் உள்ள மலைகளிலும், குகைகளிலும், கிராமங்களிலும், ஆகியவற்றை அமைத்து மக்கள் பண்பாட்டிற்குரிய அற நெறிகளை வளர்த்து வந்தனர். இவ்வறவோர் பல்வேறு காலங்களில் அமைத்து மூல சங்கம், சேனசங்கம், வீரசங்கம், நந்திசங்கம், முனிசங்கம், திராவிடசங்கம்,அருங்கலாவன்வயம் போன்ற பல நிலையங்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் முதலிடம் பெற்றவை. புலவூண் துறந்து பொய்யா வீரத்தையுடைய இவ்வறவோர்கள் காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் கல்விப் பொருளே செல்வப் பொருளாய்க் கொண்டு வெவ்வேறு காலங்களில் இயற்றியருளிய காவியங்களும், நீதிநூல்களும், வான நூல்களும், உயிரியல்-அறிவியல்-அரசியல்-உலகியல் நூல்களும், இலக்கண இலக்கியங்களும், கணித, சோதிட நூல்களும், இயல், இசை, நாடக நூல்களும், வைத்திய நூல்களும் கணக்கில, இந்நூல்கள் யாவும் உலகுக்கே உரியவை. இந்நூல்கள் யாவும் உலகுக்கே உரியவை. இத்தவத்தோர், ஆதிப் பெருமானாகிய பகவான் விருஷபதேவர் அருளிய திருவறத்தின் வழி நின்றவர்களாகையால் இந்நூல்களில் சமய சார்பையோ, மதச் சார்பையோ சிறிதும் காணமுடியாது. இவை,

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

எனும் பொதுமை பொலியும் பேரறமுடையன வாகும்.

பகவான் விருஷபதேவர் திரு அறம் உலகுக்கே உரியவை (Universal) என்னும் உண்மையைக் கலிங்கத்துப் பரணி இயற்றியருளிய கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார்,

"பொய்யும் கொலையும் களவும் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்வோர்"

என்றும்

"நிலைசேர் பொருளும் நிலையில் பொருளும்
நிமலன் நெறியால் உலகுக்கு உரைசெய்
தலையாகிய மாதவர்......

என்றும் புகழ்ந்துள்ள உரைகளால் அறியலாம். அதனாற்றான் அறிஞர் உலகம் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, சூளாமணி, நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, அறநெறிச்சாரம், யசோதர காவியம் போன்ற பல நூல்களைப் பொது நூல்களாகவே மதித்துப் போற்றுகின்றது. மேலும் தமிழ் மொழியின் தொன்மையையும், மாண்பினையும், கலைத்திறனையும், தமிழர் பண்பாட்டின் மேன்மையையும், போற்றுதற்குரிய பாக்கியத்தைத் தேடித் தந்தவர்கள் முன்னர்க் கூறிய சங்கங்களில் வீற்றிருந்த மாமுனிவர்களே யாவார்கள். அவர்கள் ஆதி அகத்தியர், தொல்காப்பியர், அவிநயனார், திருக்குறள் ஆசிரியர் தேவர் (குந்தகுந்தாச்சாரியார்) சமந்த பத்திராச்சாரியார், ஜினசேனாச்சாரியார், அகளங்கதேவர், தோலாமொழித் தேவர், வச்சிரணந்தி, பவணந்தி, குணசாகரர், ஜெயங்கொண்டார், வாமனமுனிவர் போன்ற பல சமண அறவோர்களே ஆவார்கள். தமிழ்மொழி, வடமொழி மற்றும் பலமொழிகளிலும், புலமைசான்ற இத் தமிழ் முனிவர்களின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ள முடியவில்லை. திருக்குறள் ஆசிரியர் தேவான் வரலாற்றை எவ்வாறு அறிய முடியவில்லையோ அது போன்று பல ஆசிரியர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வியலவில்லை. தன்னலமற்ற அத்தவத்தோர் தாங்கள் இயற்றிய நூல்களில் தங்களைப் பற்றியோ, தங்கள் வாழ்க்கையைக் குறித்தோ எங்கும் விளக்கவில்லை. மக்கள் வாழ்க்கை நலத்ததையும், பண்பினையும் வளர்க்கும் கருத்துக்களைப் பரப்ப விரும்பினரேயன்றித் தங்களைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொள்ளச் சிறிதும் ஆசைப் படவேயில்லை. இது தவத்தின் இயல்பு போலும்.

பகவான் விருஷப தேவர் அருளிய இல்லறம், துறவறம் ஆகிய இரு பேரறங்களை உடையோரை முறையே சாவகர் என்றும், சமணர் என்றும் அழைப்பர். சாவகர் என்போர் இல்லற விரதம் குன்றாதவர்கள். சமணர் என்போர் நாம் இதுவரை கூறிவந்த மெய்த் துறவிகள். இம்முழுதுணர் ஞானிகள் தமிழகம் எங்கும் பரவி இருப்பினும் சிறப்பாகப் பாண்டிய நாட்டில் மிகுதியாகக் காட்சியளித்தனர். இவ்வறவோர்களை மதுரைக் காஞ்சி ஆசிரியர் மாங்குடி மருதனார் :

"வண்டு படப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்,
இன்றிவட் டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணரும்.
சான்ற கொள்கைக் சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொலிந் தள்ள விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண்டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்க விசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
அச்சமு மவலமு மார்வமு நீக்கிச்
செற்றமு உவகையுஞ் செய்யாது காத்த
ஞெமன்கோ வன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை யறங்கூ றவையமும்"

எனச் சிறப்பித்துப் புகழ்கிறார். துறவோர்களில் பெண் துறவிகளும் அறப்பணியாற்றி வந்தனர். இது போன்ற தமிழகத்தின் தனிபெருக்காவியமும், வரலாற்று இலக்கியமுமாகிய சிலப்பதிக்காரச் செந்தமிழ்க் காவியத்தை அருளிய இளங்கோவடிகள், கவுந்தியடிகள் என்னும் பெண்துறிவியார் வாயிலாக மதுரை மூதூரில் கோயில் கொண்டுள்ள அருகப் பெருமானையும் அறவுரை பகரும் அறவோர்களையும் அறிமுகப் படுத்தும் அழகிய பகுதிகளைக் காண்போம்.

ஜைன மும்மணிகள்

ஒரு நாள் நள்ளிரவு கடையாமத் துவக்கம். கோவலனும் கண்ணகியும் தங்கள் இல்லத்தைவிட்டு வெளியேறுகின்றனர். ஊழ்வினை உந்துகிறது! கடை கழிந்தறியாக் காரிகையைப் பல காவதம் நடத்திச் செல்லத் துணிந்து விட்டான் கோவலன். மதுரை அண்மையிலா இருக்கிறது? ஆறைங்காதம் செல்லல் வேண்டும். பாவம்! கண்ணகி, தன் கணவன் புறப்படலாம் என்றவுடன் புறப்பட்டுவிட்டாள். பல ஆண்டுகளில் மாதவியின் மயக்கத்தால் தன்னைப் பிரிந்திருந்தவர், மறந்திருந்தவர் என்பதையும் எண்ண வில்லை! புன் முறுவலுடன் கணவனைத் தொடர்ந்தாள் பொழுது புலர்வதற்குள் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் பல காதங்கள் செல்ல வேண்டுமென்பது அவர்கள் திட்டம். ஆகவே வேகமாக நடக்கின்றனர். வீதிகளில் அருகர் கோயில், புத்தர் கோயில், திருமால் கோயில் முதலியவை காணப் படுகின்றன. தங்கள் அவசரமான பிராயணத்தையும் மறந்து தாங்கள் வழிபடும் அருகர் கோயிலை அடைந்து.

"புலவூண் டுறந்து பொய்யா விரதத்
தவல நீத்தறிந் தடக்கிய கொள்கை
மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய
வைவகை நின்ற வருகத் தானத்துச்
சந்தியைந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்க வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலங்கினர் கொழுநிழல்
நீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉத் தகுதி உண்டாமென
உலக நோன்பிகள் ஒருங்குட னிட்ட
விலகொளி சிவாதவந் தொழுது வலங்கொண்டு" சென்றனர்.

1  2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com