முகப்பு வாயில்

 

 

அணிந்துரை

மு. கருணாநிதி, முதலமைச்சர்.
23-12-1974


அன்பு நெறியின் மறுபெயர் சமண சமயம்; சமணம், ஜைனம் என்றும் அழைக்கப் பெறுகிறது.


கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியப் பெருநாட்டில் தோன்றிய சமயம்-தொன்மைமிகு சமயம்-சமணம் ஆகும். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் தோன்றித் தழைத்திருந்தது சமணம்.

சமண அறவோர்கள்-தமிழ் அன்னைக்கு அணிவித்த நூலணிகள் ஏராளம்-ஏராளம்; சுருங்கச் சொன்னால் சமணர் தமிழுக்குத் தந்திட்ட நூல்களை மட்டும் அப்புறப்படுத்திப் பார்த்தால் தமிழ் இலக்கிய உலகமே வெறிச்சோடிக் கிடக்கும். அந்த அளவுக்கு அரும்பெரும் நூல்களை-சமணத் தமிழ்ப் புலவர்கள் ஆக்கித் தந்துள்ளனர். அந்நாள் தமிழ் மன்னர்களும் அந்த அரும்பணிக்கு ஊக்கம் தந்துள்ளனர்.

தமிழகத்தில் சமண நெறியைத் தழுவிய புலவர்கள் ஏராளமாக வாழ்ந்திருக்கின்றனர். ஒரு காலத்தில் சமணம், தமிழகத்தில் மிகமிகப் பரவியிருந்திருக்கிறது. "உலகம் எவராலும் படைக்கப்பட்டதல்ல" என்ற உயர் கொள்கையைக் கொண்டிட்ட சமண சமயத்தைப் பலர் விரும்பி ஏற்றிருக்கின்றனர்.

தமிழகத்திலே சமணம் தோன்றிட்ட வரலாறு, வளர்ந்திட்ட கதை, இலக்கியங்களில் இடம் பெற்றிட்ட நிலை இவற்றை எல்லாம் நன்கு ஆய்ந்து, "தமிழகத்தில் ஜைனம்" என்னும் அரியதொரு நூலை ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார்கள். அவர்களின் ஆய்வு, மிகச் சிறந்த முறையில் அமைந்திருக்கிறது. நூலாசிரியர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜைனத்தைப் பாராட்டியுள்ளார் என்று யாரும் என்னிடத் தேவையில்லை. ஜைனம் போற்றுதலுக்குரியது என்பதை, மேனாட்டு அறிஞர்களும், நம்நாட்டு அறிஞர் பெருமக்களும் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்கள்.

நோபெல் பாசு பெற்ற, இந்திய விஞ்ஞானி டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ், ஜெர்மன் நாட்டுப் பேராசிரியர் ஜி.புஹ்லர், செக்கோஸ்லோவேகிய நாட்டு அறிஞர் டாக்டர் கமில் சுவலேபில் போன்றவர்களும், நமது தமிழகத்தைச் சார்ந்த சர்.ஆர்.கே. சண்முகம், தமிழ்த் தென்றல் திரு.வி.க. திரு. எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆகிய பெருமக்களும் சமணத்தைப் போற்றிக்கூறியுள்ளவற்றை நூலாசிரியர் ஆங்காங்கே எடுத்துக்காட்டியிருப்பது சிறப்புடையதாகும். இருந்தாலும் ஓர் ஏக்கம் என் இதயத்தில் எழுகிறது - சமண சமயத்தையும் அதன் நெறிகளையும் பாராட்டிப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியுள்ள வாசகங்கள் இடம் பெறவில்லையே என்ற ஏக்கம்தான் அது; அடுத்த தொகுப்பில் ஆசிரியர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் எனது ஏக்கத்தைப் போக்குவார்கள் என்று நம்புகின்றேன்.

மொத்தத்தில்,

"தமிழகத்தில் ஜைனம்" என்னும் இந்த நூல் மிகச் சிறந்த ஆய்வு நூல் மட்டுமல்ல-தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் இடம்பெறுவதற்குரிய தகுதி படைத்துள்ள அரிய நூல் என்று குறிப்பிடலாம்.

நூலாசிரியர் திறம் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

மு. கருணாநிதி
முதலமைச்சர்.
23-12-1974


திரு. டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள்,
தமிழ்நாடு ஜைன சங்கம்,
திகம்பர் பகவான் மகாவீரர் 2500-ஆம் பாநிர்வாண பெருவிழா கமிட்டி,
சென்னை-600 001.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com