முகப்பு வாயில்

 

திருவறம் வளர்க

நமது தமிழ் மறையாகிய திருக்குறள் போற்றும் ஆதிபகவன் கண்கண்ட கடவுளா? காணாத கடவுளா? என்பதைப்பற்றிப் புலவர்களிடையே கருத்து வேற்றுமைகள் வளர்ந்து வருகின்றன. திருக்குறளுக்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர். அவர்களில் பெரும்பாலோர் முதற் குறளுக்கு உரை எழுதிய காலை மற்ற ஒன்பது குறட்பாக்களில் காணும் உட்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே உரை எழுதிப் புகழ் பெற்றுள்ளனர். வேறு சிலர் மற்ற ஒன்பது குறட்பாக்களை மறந்து தங்கள் தங்கள் சமயக் கொள்கைக்கேற்ப உரை எழுதிப் போந்தனர். இவ்விருசார் புலவர்களும் அறிவான் மிக்கவர்கள். ஆராய்ச்சி வல்லுனர். எனினும் தங்களுக்குள் மாறுபடுகின்றனர், இதனால் திருக்குறளாசிரியரின் கடவுட்கொள்கை மக்களிடையே மயக்கத்தை அளிக்கின்றது. உண்மை காணவியலாமல் தவிக்கின்றனர். எனவே இந்நிலையை வளரவிடாமல் இருசாரான் கொள்கைகளையும் நடு நின்றாய்ந்து உண்மை காண்பதே இந்நூலின் நோக்கமாகும்.

திருக்குறளாசிரியர் இறைவனை வாழ்த்தும் பத்துக் குறட்பாக்களிலே ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், வேண்டுதல் வேண்டாமையிலான், தனக்குவமையில்லாதான், பொறிவாயில் ஐந்தவித்தான், இறைவன் என்னும் சொற்பொருள்களால் போற்றிப் புகழ்கின்றார். இச்சிறப்புப் பெயர்களிலே ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. பொருள் செறிவும் நுட்பமும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே முதற்குறளை ஆராய்வோம்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

இக்குறட்பாவுக்கு எழுத்துக்கள் யாவும் அகரத்தை முதலாக உடையன. உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என்பதே நேரான பொருளாகும். இக்கருத்தை அடிப்படையாகக்கொண்டே பண்டைய உரையாசிரியர்களில் பெரும்பாலோர் உரை எழுதியுள்ளனர். குறிப்பாக மணக்குடவர், 'எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தை தமக்கு முதலாக உடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடையது' எனவும், கவிராஜ பண்டிதர், 'எழுத்துக்களெல்லாம் அகர எழுத்து முதலாய் இருப்பது போன்று, உலகத்துக்கெல்லாம் சருவக்ஞனான சுவாமியே (ஆதிபகவன்) முதல் என்றவாறு' எனவும் எழுதியுள்ளார்கள். இனி பிற்கால உரையாசிரியராகிய பாமேலழகரைக் காண்போம். 'எழுத்துக்கள் அகரமாகிய முதலையுடையன. அதுபோலவே உலகம் ஆதிபகவானாகிய முதலையுடைத்து' என்பதாகும். இவ்வுரையை நோக்கின் மேலே கூறிய இருஉரைகளின் கருத்துக்கள் போலவே காணினும், பாமேலழகர் தமது விளக்க உரையில் மாறுபடுகின்றார். அதையும் காண்போம்.

இது தலைமைப்பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானன்றி நாத மாத்திரையாகிய இயற்பாற் பிறத்தலானும், ஆதி பகவற்குத் தலைமை செயற் உணர்வானன்றி இயற்கை உணர்வான முற்றும் உணர்தலானுங் கொள்க. தமிழ் எழுத்திற்கே யன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி எழுத்தெல்லாம் என்றார். ஆதி பகவன் இருபெயரொட்டுப் பண்புத்தொகை, வடநூலின் முடிபு. உலகென்றது ஈண்டு உயிர் கண்மேன் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ஆதிபகவன் முதற்றே என்று உலகின் மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது.'

இவ்விளக்க உரையை நுணுக்கமாக ஆராயின் பாமேலழகான் குழப்பநிலை வெளியாகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஒரு சமயச் சார்புடையதாகக் கொள்ளவேண்டி, அவர் அறிவு படும்பாடு, அப்பப்பா! அளவிடற்பாலதன்று. 'விகாரத்தானன்றி', 'நாதமாத்திரை'. 'இயற்பாற் பிறந்தது', 'செயற்கை உணர்வு', 'காணப்பட்ட உலகம், காணப்படாத கடவுள்', 'கூறினாரேனும்', 'கருத்தாக் கொள்க', 'முதற்கடவுள் உண்மை' ஆகியவை போன்ற சொற்களாகிய மயக்க மருந்தால் நமது அறிவைச் சுழற்றுகின்றார் பாமேலழகர். அம்மருந்தை அருந்தி மயக்க முற்றோர் பலருண்டு. அச்சமயவாத மருந்து நமக்கு வேண்டா.

'சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல்கூறி
பொருள் இதுவென்ற வள்ளுவர்'

எனத் திருக்குறளாசிரியான் கடவுட் கொள்கையைக் களங்கமறக் கண்ட கல்லாடனார் கருத்து வழிநின்று ஆராய்வோம்.

'அகர முதல' என்பதில் 'முதல' எனும் பன்மைச் சொல் முதல் எனும் ஒருமையினின்றே பிறந்தது. முதல் எனும் சொல்லிற்குப் பல பொருள்கள் உண்டெனினும் இங்கே எண் வாசையைக் கொண்டு விளங்குகிறது. இக்கருத்தின்படி எழுத்துக்களெல்லாம் அகரத்தைத் தமக்கு முதலாக அல்லது தலைமையாக உடையன. அவ்வண்ணமே உலகம் ஆதி பகவனைத் தனக்கு முதலாக அல்லது தலைவராக உடையது என்னும் பொருளிலேயே அமைகின்றது. எனவே தலைமைப்பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை என்பது தெளிவாகிறது. என்னே தேவர் பெருமானின் பேரறிவு! தாமே முழுதுணர்ந்த தனி அறிவு! உவமையின் வாயிலாக இறைவன் வாழ்த்து! உவமையின் வாயிலாக வரலாற்று உண்மை! உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமை! உவமையின் வாயிலாக உலகுக்கு அறிவுரை! உவமையின் வாயிலாக மெய்ப்பொருள் விளக்கம்! இவ்வாறு உவமையின் பெருமையைப் பேசிக்கொண்டே போகலாம். இனி, 'பகவன்' என்னும் சிறப்புப் பெயான் பொருளை ஆராய்வோம்.

'பகவன்' என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் சர்வக்ஞன், கேவலஞானி என்றெல்லாம் அழைப்பர். பகவன் எனில் கேவலஞானி எனச்சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் எழுதிய உரையாலும் காணலாம். தமிழ் மொழியிலே வாலறிவன், முழுதுணர்ந்தோன், கடையிலாஞானி, அறிவன், அறிவு வரம்பிகந்தோன் எனப் பல பொருள்களுண்டு. கேவல ஞானம் எனும் சொல் பண்டைய தமிழ் இலக்கியங்களில் விரவிக் காணப்படுகின்றன. எனவே பகவன் எனில் வாலறிவன் அல்லது கேவலஞானி என்பதை அறிந்தோம். கேவலஞானம் என்பது ஞானங்களிலே தலைசிறந்தது. ஞானம் ஐந்து வகைப்படும். இயற்கை அறிவு (மதிஞானம்) நூல் அறிவு (சுருதஞானம்) தன்னுடைய முற்பிறப்பை அறியும் அறிவு (அவதிக் ஞானம்) பிறருடைய உள்ளங்களையும் அவர்கள் முற்பிறப்பையும் அறியும் அறிவு (மனப்பார்யை ஞானம்) மூவுலகங்களையும் ஒருங்கே அறியும் அறிவு (கேவல ஞானம்) என்பவைகளாம். இவற்றில் இயற்கை அறிவும் கல்வி அறிவும் அவரவர் பண்பாட்டிற்கும் கல்வி அறிவிற்கும் ஏற்றவாறு அமையும். மற்ற மூன்று ஞானங்களும் செயற்காய செய்தவத்தால் அமைவது. ஐம்பொறிகளையும் தம்வயப்படுத்திப் பற்றற்ற நிலையை எய்தும் முனிவர்களுக்கே அம்மூன்று ஞானங்களும் முறையே வளர்ந்து கேவலஞானம் எனும் கடையிலா ஞானம் விரிவடைகின்றது.

இவ்விரிந்த ஞானம் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் நுண் பூதங்களையும், அவற்றின் வழி விரிந்த நீர், நிலம், தீ, வான், வளி என்னும் ஐம்பூதங்களையும் அவற்றின் வழி விரிந்து நடப்பன, பறப்பன, நீந்துவன போன்ற பல்லுயிர்களையும், இவ்வுயிர்கள் வாழும் எல்லா உலகங்களையும் ஒருங்கே அறியும் இயல்புடையதாகிறது.

'குழுவன பிரிவன குறைவில நிலையின
எழுவன விழுவன இறுதியிலியல்பின
வழுவில பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணரும்எம் முனைவரனறிவே'

'நிறைபொறி உளவவை அறிதலி நெறிமைய
முறைபொரு ணிகழினு முரைபடு மறிவிலன்
மறை பொருளுளவவ னறிவினை மறையல
இறை பொருள் முழுவதும் அறிதிறமிதுவே'

எனவரும் நீலகேசிச் செய்யுட்களாலும் கேவல ஞானத்தின் தன்மை விளங்கும்.

இப்பெறலரும் பேரறிவு வரப்பெற்று வினைகளை வென்றுயர்ந்தோரையே 'பகவான்! பகவான்!' எனப் புலவர் பெருமக்கள் போற்றி வணங்கினர். மக்கள் மட்டுமா? ஆயிரங்கண்ணுடைய இந்திரனும் இக்கேவல ஞானிகளின் பேராற்றலைக்கண்டு வியப்புற்றுப் பகவான் என வாழ்த்தி அடிபணிந்து செல்வான்.

மனிதனின் ஆற்றல்

இந்நிகழ்ச்சிகளினின்றும் ஆன்மீக முன்னேற்றங்களால் மனிதனிடத்து நிறைந்து கிடக்கும் ஆற்றல்கள் வெளியாகின்றன. அவ்வாற்றல்கள் அதியற்புதமான தெய்வீக அதிசயங்களைக் கொண்டு விளங்கும் நிலையையும் காண்கின்றோம். மனிதனிடத்தே புதைந்துள்ள இப்பேராற்றலின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே, 'நீத்தார் பெருமை' எனும் அதிகாரத்தின் வாயிலாகக் குணம் எனும் குன்றேறி நின்ற அறவோர்களை, செயற்காய செய்யும் செம்மல்களை, ஒழுக்கத்தாலுயர்ந்த உத்தமர்களை, இருமை வகை தொந்து ஈண்டறம் பூண்ட இருடிகளை, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் முனிபுங்கவர்களை, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தின் வகை தொந்த அறிவர்களை, உரனென்னுந் தோட்டியால் ஓரைந்துங் காக்கும் ஒப்பற்ற ஞானிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் நம் பொய்யாமொழித் தேவர். அதுமட்டுமா! பொறிவாயிலைந் தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறியாம் அறனை வலியுறுத்துகின்றார் அடுத்த அதிகாரத்திலே! எனவே திருக்குறளாசிரியர் மனித வாழ்க்கைக்குப் போலக்கியமாய் விளங்கும் அருளறத்தை முதன்முதல் உலகுக்கு வழங்கிய ஓர் அறிவனையே அக்கால மக்கள் நன்கறிந்து போற்றிய ஆதிபகவன் என்னும் ஆட்சிச் சொல்லால் முதற் குறளிலேயும் வாலறிவன் எனத் தமிழ் மொழியால் இரண்டாம் குறளிலேயும் போற்றியுள்ளார் என்பது கலங்கரை விளக்கம்போல் காட்சியளிக்கின்றது. நமது பாரதநாட்டு ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தாம் எழுதிய இந்தியத் தத்துவங்கள் (Indian Philosophy) என்னும் ஆங்கில நூலில் 'கி.மு. முதல் நூற்றாண்டிலேயே முதல் தீர்த்தங்கரர் பகவான் விருஷபதேவரை மக்கள் வழிபட்டு வந்தனர் என்பதைக் காட்ட ஆதாரங்கள் இருக்கின்றன' என எழுதியுள்ள வரலாற்றுச் செய்தியாலும் நமது கருத்து உறுதிப்படுகின்றது.

இது போன்று மற்ற குறட்பாக்களில் வரும் 'எண்குணத்தான்', 'தனக்குவமையில்லாதான்' 'பொறிவாயிலைந்தவித்தான்', 'வேண்டுதல் வேண்டாமையிலான்' போன்ற சிறப்புப் பெயர்கள் அனைத்தும் தவ ஒழுக்கத்தால் வளர்ந்த தனிப்பெரும் பண்புகளாகும். 'அறவாழி அந்தணன்' எனப் போற்றியது பகவான் உலகுக்கு அறவுரை பகர்வதையே பெரும்பணியாகக் கொண்ட சிறப்பியலில் அமைந்த திருப்பெயராகும். இனி 'மலர் மிசை ஏகினான்' என இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளதை நினைவு கூர்தல் வேண்டும். நாம் இந்திரனைப் பற்றி இலக்கிய வாயிலாக அறிந்திருக்கின்றோம். அவன் ஆயிரங்கண்ணுடையவன், பேரறிவாளன், அருளறத்தின் வழி நின்றவன், நற்பண்பும், நற்பணியும் மேற்கொண்டவன். முக்காலமும் உணர்ந்த கேவல ஞானிகளை அடிபணிந்து போற்றும் அன்பும் ஆர்வமும் உடையவன். அது மட்டுமல்ல. அத்தூயோர்களின் திருவடிகளிலே தாமரை மலர்களால் பூஜித்து, அறவுரை மண்டபம் (சமவசரணம்) அமைத்து வழிபாடு செய்பவன். இத்தகு சிறப்புக்களைப் பெறும் பேராற்றலை உலகுக்கு அறிவிக்கவே நமது திருக்குறளாசிரியர் தேவர்,

'ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கா'

என இந்திரனின் திருப்பணியைச் சான்றாக அமைத்துக் காட்டுகின்றார். இந்திரன் வழிபாடு இயற்றிய தாமரை மலாலே பகவான் தமது திருவடிகள் பதியாது நடந்து செல்வார்.

'பாரணையா அடிதாங்கச் செந்
தாமரைப் பாரித்ததே'

என்னும் திருநூற்றந்தாதியாலும்,

'கானிலந்தோயாக் கடவுளை' என்னும் நாலடியார் கடவுள் வாழ்த்து வெண்பாவாலும் அறியலாம். இவ்வரலாற்றையே 'மலர்மிசை ஏகினான்' என இறந்தகால நிகழ்ச்சியாகப் போற்றியுள்ளார். இனி விசும்பரசனின் அரும்பெரும் செயலை மெய்ப்பிக்கும் மற்றைத் தமிழ் இலக்கியங்களைக் காண்போம்.

இந்திரன் வழிபடுதல்

'வெந்துயர் அருவினை வீட்டிய அண்ணலை
இந்திர உலகம் எதிர் கொண்டாங்கு'
- பெருங்கதை 15வது வா

'வானோர்த முலகுடைய மாநில வண்ணன்
மகிழந்திறைஞ்சு மாலையணி மணி முடிமேல் வைகா
ஊனாரும் அறவாழி யோடமால் யானை*
யுடையான்றன் ஒளிமுடியின் மேலுரையே நிற்கத்
தேனாரும் அரவிந்தஞ் சென்றேந்தும்போழ்து
திருவடிகள் செந்தோடு தீண்டாவேயாகில்
ஆனாவிம் மூவுலகும் ஆளுடைய பெம்மான்
அடியறு வாரின்மைதா மறிவுண்டதன்றே'
- சூளாமணி 1909

* மால்யானையுடையான் - இந்திரன்

'களியானை நாற்கோட்டத் தொன்றுடைய செல்வன்
கண்ணொராயிர முடையான் கண்விளக்க மெய்தும்
ஒளியானை..'
- சூளாமணி 1907

அந்தரஅகடு தொட்டணவு நீள்புகழ்
வெந்தொ பசும் பொனின் விழைவும் வெல்லொளி
மந்திர வாய்மொழி மறுவின் மாதவர்
இந்திரர் தொழுமடி இனிதி னெய்தினான்.
- சீவகசிந்தாமணி 1239

'காமாதி..............
.....................
.............. தேவர் கோமான்

'தாமாதி யணிந்துபணிந் தெழுந்ததுவும்
தத்துவமென் தகவோ வென்ன'
- மேருமந்தரபுராணம்

'புரந்தரரும் வானவரும் புகழ்ந்தடியேங்
குற்றேவல் கொள் கென்றேத்தி
நிரந்தரம் வந்தனை செய்ய இருந்தருளும்
அருந்தவரே'
- திருக்கலம்பகம் 23

'அரிய வாயின செய்திட்டு அமரர்துந்துபி அறைந்து
புரிய பூமழைப் பொழிய பொன்னெயில் மண்டிலம்
புதைந்த' - நீலகேசி 156

'.................
பதநூ புரத்தின் அளகேசன்
நாடித் தேடிப் பாடஎயில்
பரமாமுனி நாயகர் தமக்கும்
பாரில் மனித ரனைவோர்க்கும்
முதனூலுரைத்தக் கனிவாயால்
முத்தந்தருக முத்தமே'
- ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் 43

'கேவலமுற்பத்தி யாமளவே கிளர்பூசனைக் கென்று
ஏவலியற்றுமவ் விந்திரனுக்கு முன்னெண் குணத்தெம்
காவலனைக் கவிப்பார் வளைப்பார் முளைப்பார்களைப் போல்
மூவுலகத்துள்ள நால்வகைத்தேவர் முன்னுவரே'
- திருநூற்றந்தாதி

என்னும் பாக்களால் இந்திரன் பண்பும் பணிவும் அன்பும் ஆர்வமும் வெளியாகின்றன. அவைகளுடன் ஆயிரங்கண்களை உடையவன் என்பதையும் அறிகின்றோம்.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com