முகப்பு வாயில்

 


தமிழ் இலக்கியங்களில் இந்திரன் :


ஐந்தவித்துயர்ந்த பகவான் விருஷபதேவரை இந்திரன் வழிபடுங் காட்சியை,

"களியானை நாற்கோட்டத்
தொன்றுடைய செல்வன்
கண்ணோயிரமுடையான்
கண்விளக்கமெய்தும் ஒளியானை"-சூளாமணி
"காமாதி கடந்ததுவும்.....
... .... ... ....
...... .... தேவர் கோமான்
தாமாதியணிந்து பணிந்தெழுந்ததுவும்
தத்துவமென்றகவோ வென்ன"
-மேருமந்தர புராணம்
"வெந்துயர் அருவினை வீட்டிய அண்ணலை
இந்திர உலகம் எதிர் கொண்டாங்கு" பெருங்கதை இவைபோன்று பல்வேறு ஜைன நூல்களில் காணலாம்.


ஆயிரங் கண்களின் வரலாறு :

பகவான் அடைந்த கேவல ஞானப் பேரொளியைக் கண்டு களிக்கும் இந்திரன், ஆனந்த மேலீட்டால் பகவானைக்காண இருகண்களும் போதாவென எண்ணுகின்றான். ஆயிரங்கண்களால் கண்டுகளிக்க வேண்டுமென விழைகின்றான். எண்ணிய எண்ணியவாறு எய்தும் தனக்குரிய வைக்கிரம சாரத்தின் ஆற்றலால் (உருவை மாற்றிக்கொள்ளும் ஆற்றல்) இந்திரன் தன் உடலெங்கும் கண்களை உண்டாக்கிக்கொண்டு பகவானைப்போற்றி மகிழ்கின்றான். இக்காட்சியைக் கண்ட புலவர் பெருமக்கள் இந்திரனை ஆயிரங்கண்ணுடையோன் எனப் புகழ்ந்து வாழ்த்தினர்.

இவ்வரலாற்று நிகழ்ச்சியை ஆதிபுராணம் என்னும் வடமொழி நூலில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

"தவரூபஸ்ய செளந்தர்யம் திருஷ்டியா திருப்திம் ஆனாயி வான்
உயக்ஷ: சஹஸ்க்ஷ: பபூப பஹவிஸ்வமய:"

(இ-ள்) இறைவனே! தத்துவத்தாலுயர்ந்து ஞான ஒளி வீசும் நினது பேரழகினைத் தனது இரு கண்களால் பருகியும் திருப்தியடையாத இந்திரன், பலரும் வியக்கத்தக்க முறையில் ஆயிரங்கண்களை உண்டாக்கிக் கொண்டு உன்னைப்போற்றி வழிபடுகின்றான்" என்பதாகும்.

இவ்வாறே தமிழ் நூலாகிய தோத்திரத்திரட்டில்.

"இன்றே யருளென இந்திர
ரெண்ணில வாய்க் கண்கொண்டு

நின்றே துதித்துப் பெறவரும்
பேற்றினை நீயுமென்ன

நன்றேயென் நெஞ்சமே பாகை
யின் முக்குடை நாயகன்றன்

குன்றே குணத்தன்பின் சாதுக்
கடாற்றலை கொள்ளுதியே"

என வாழ்த்தப் பெற்றுள்ளது. இதனால் இந்திரன் ஆயிரங்கண்களைத் தற்காலிகமாகப் பெற்றான் என அறிகின்றோம். இத்தகுசிறப்பமைந்த உண்மை நிகழ்ச்சியை மறைத்து இந்திரன் கெளதம முனிவான் சாபத்திற்குள்ளாகி உடலெல்லாம் சொல்லொணாக் குறிகளையுடையவனானான் என வைதீக சமய நூல்கள் கூறுகின்றன. இக்கொள்கையை பாமேலழகரும், தற்கால உரையாசிரியர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளது வருந்தத்தக்க செய்தியாகும்.


ஐந்தவித்தோரின் மாண்பு

வைதீக சமயக்கூற்றால் ஐந்தவித்துயர்ந்தோரின் தூய தவநெறியும் அத்தகு அறிவோரைப் போற்றும் இயல்புடைய இந்திரனின் எழில் நிலையும் மாசடைகின்றன. ஐந்தவித்தானெனில் ஐம்புலன்களால் ஏற்படும் உலகியல் ஆசைகளை அறவே அகற்றி, ஐம்புலன்களைத் தன் வயப்படுத்தியவன் என்பதை முன்னரே அறிந்தோம். இப்பெறலருந்தவத்தோரையே ஐந்தவித்தான் ஆற்றல் எனத் தேவர் போற்றினார். இவ்வரலாற்றின் மேன்மையை உலகோர் அறியவே "பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வாழ்வார்" என்னும் கடவுள் வாழ்த்தின் வாயிலாக முற்றுந் துறந்த முனிவர்களின் தவநெறியின் மாண்பையும் அவரே கடவுள் அல்லது இறைவன் எனும் கருத்தையும் அப்பெருமகன் அருளிய குற்றமற்ற ஒழுக்க நெறிகளின் உயர்வையும் அறியவைத்துள்ளார். இங்கே வைதீக சமயத்துறவுக்கு இடமில்லை. அத்துறவு கோலத்தைக்கொண்டு குறளில் காணும் ஐந்தவித்தோரைக் காதல் வாழ்க்கையில் சித்தாத்துக் காட்டுவது ஐந்தவித்தான் எனும் பண்பிற்கு முரணானது.

ஐந்தவித்தானுக்கு அதாவது ஐம்புலன்களை வென்றவனுக்கு மனைவி இருக்கலாமா? தம் மனைவியை வேறொருவர் காதலித்துக் கற்பழித்தார் என்பதற்காக கோபம் கொள்ளலாமா? அக்கோபக் கனலின் வயப்பட்டு அவரை சபிக்கலாமா? எனும் கேள்விகளுக்கு இடமுண்டாகிறது. அறிவியலுக்கு பொருந்தாத இக் கதையைத் திருக்குறளில் காணும் ஐந்தவித்துயர்ந்த அறவோர்களுக்குக் காட்டியது பொருத்தமற்ற செயல் மட்டுமல்ல சிந்தனையற்ற செயலுமாகும்.

வைதீக சமயத்து இந்திரன் கதையைத் திருக்குறளில் காணும் ஜைன முனிவர்களின் தூய தவ வாழ்க்கையில் முதன் முதல் பொருத்திக் காட்டியவர் பாமேலழகரேயாவார். இப்பொருந்தாக் கூற்றைப் புகுத்திய பாமேலழகர் இன்று காணும் திரு. தெய்வ நாயகமே எனில் மிகையாகாது.

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மால் பாமேலழகர் இறுதியானவர். இவர் திருக்குறள் இயற்றிய ஆசிரியர் ஜைன அறவோர் என்பதையும் திருக்குறளில் காணும் அறநெறிகள் யாவும் பகவான் விருஷப தேவரால் அருளப்பெற்ற நல்லறங்களே என்பதையும் நன்குணர்ந்தவர். அது மட்டுமல்ல-திருக்குறளின் முதல் உரையாசிரியராகிய தருமர் உரையை ஆழ்ந்து கண்டவர். இவ்வுண்மையைப் பாமேலழகர் தம் உரையிலேயே சுட்டிக் செல்வதை அறியலாம். இவர் உரையில் மேற்கோள் காட்டும் நூல்களில் பெரும்பாலும் ஜைன இலக்கியங்களேயாகும்.

பாமேலழகரைப் போன்றே திரு. தெய்வநாயகமும் திருக்குறளாசிரியர் ஜைன அறவோரே என்பதை நன்கு உணர்ந்தவர் எனும் உண்மையைத் தாம் எழுதிய 'திருவள்ளுவர் கிறித்தவரா' என்ற நூலின் 70ம் பக்கத்தில் "திருவள்ளுவர் வற்புறுத்தும் புலால் மறுத்தல், கொல்லாமை முதலியன தமிழகத்திலுள்ள மற்ற சமயங்களுடன் இருந்த தொடர்பை விட சமண சமயத்துடன் அதிகத் தொடர்பை புலப்படுத்துகின்றன. இவர் பிறப்பில் சமணராயிருந்திருத்தல் வேண்டும் என்றும் இவர் இறப்பில் சமணர் அல்லர்" எனவும் எழுதியுள்ள தினின்றும் அறியலாம்.

1  2  3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com