முகப்பு வாயில்

 


நற்காட்சியெனில் 'பகுத்தறிவு' எனப் பொருள்படும். கண்கள் எவ்வாறு புற பொருள்களைக் கண்டு இன்னின்னப் பொருட்கள் என தெளிவு பெற அறிவிக்கின்றனவோ, அவ்வாறே பல்வேறு கொள்கைகளைக் கொண்ட நூல்களை நம் அறிவால் ஆய்ந்தறிந்து, நம் அறிவிற்கும் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும் பொருந்தும் மெய் நூல்களைத் தேர்ந்து தெளிவதே 'நற்காட்சி' யாகும்.

"மெய்ப் பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளும் கண்டுணர்ந் தார்" - என

அருங்கலச் செப்பு எனும் நூல் செப்புகின்றது - இப்பேருரையில் நற்காட்சியின் இயல்பும், தோற்றக் காலமும், தோற்றுவித்தவான் வரலாறும் அடங்கியுள்ளன. முதன் முதலில் இவ்வுலகிற்கு அறம் உரைத்தவர் பகவான் 'விருஷப தேவரே' எனும் வரலாற்று உண்மையை வைதீக வேதகாலம் முதலே உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. இப் புண்ணியமூர்த்தி எய்திய "கேவல ஞானம்" எனும் முழுதுணர் ஞானம் அலலது கடையிலா ஞானத்தில் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பொருட்களும் அடங்கும். அதாவது, அம்முழுதுணர் ஞானம் எல்லாப் பொருட்களையும் ஒருங்கே அறியும் அளப்பாய ஆற்றல் படைத்தது.

இப்பெறலரும் ஞானத்தை முதன் முதலில் பெற்ற விருஷபதேவரை பகவான், ஆதிபகவன், ஆதிநாதன், ஆதிமூர்த்தி என விசும்பரசன் இந்திரனும், மக்களும் போற்றினர். அம்மரபு கொண்டே 'எப்பொருளும் கண்டுணர்ந்தார்' என அருங்கலச் செப்பு ஆசிரியர் போற்றியுள்ளார். இப்பேருண்மையை எல்லா ஜைன நூல்களிலும் காணலாம். இப்பெருமகன் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டு இல்லறம், துறவறம் எனும் இருபேறரங்களை படைத்தருளினார். அப்பேரறரங்களை மக்களிடையே விளக்கி உரை நிகழ்த்தினார். பகவான் அருளுரைகளை மக்கள் பலரும் பயபக்தியுடன் செவிமடுத்துக் கேட்டனர். அப்புனித அறநெறிகளை மக்களிடையே அருளிய நிகழ்ச்சியின் இறுதியில் "மக்களே! யான் இதுவரை உரைத்த அறநெறிகள் யாவும் இயற்கையின் பாற்பட்டவை. மக்கள் அறிவிற்கும், வாழ்க்கை பண்பிற்கும் இன்றியமையாதவை. மக்களேயன்றி மன்னுயிர் அனைத்திற்கும் அரணாக அமைந்தவை. அறம், அறிவு, ஒளி அளித்து மனிதனை தவறானப் பாதையில் செல்லவொட்டாமல் தடுக்கும் ஓர் அறிவியல் தத்துவம். உலக ஒருமைப்பாட்டிற்கும், அமைதி வாழ்விற்கும் அடிகோலுபவை நட்புறவை வளர்ப்பவை! இத்தகு சிறந்த அறநெறிகளை நீங்கள் ஆர்வத்தோடு கேட்டீர்கள், யான் இந்நாட்டை ஆளும் மன்னனாக விளங்குவதாலும், நீங்கள் என்னை ஏதோ வானுலகத் தேவனாகப் போற்றும் அன்பினாலும் என் அறவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ, அச்சமோ கொண்டு மயங்காதீர்கள். என் உரைகளை உங்கள் அறிவால் சிந்தித்து ஐயம் ஏற்படின், குறையிருப்பின் துணிந்து வந்து கூறுங்கள். ஐயத்தை அடக்கி வையாதீர். உங்கள் சிந்தையில் சாயென்று தோன்றினால் ஏற்றுக்கொள்ளுங்கள்" என அறிவுக்கு சுதந்திரம் அளித்துப் பேசினார்.

பகவான் அருளிய அருளுரைகளைக் கேட்ட மக்கள் "எம்பெருமானே! தாங்கள் மக்களிடத்தும் மன்னுயிர்பாலும் அருள் உள்ளம் கொண்டு ஆற்றிய அறநெறிகள் யாவும் அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ளன. காட்டில் காயும் நிலா போன்று யாங்கள் கண்டபடியெல்லாம் வாழ்க்கை நடத்திக் காலம் கழித்தோம். கதிரவன் தோன்றியதும் காரிருள் மறைவதுபோல, தங்கள் அறிவுரைகளைக் கேட்டதும் எங்கள் அறியாமை விடைபெற்றுக்கொண்டது. ஒவ்வொரு அறமும் பொருள் பொதிந்தது. மதிப்பிடற்காய மாண்புடையது. சிந்திக்கச் சிந்திக்க சீரிய கருத்துக்கள், சிறப்புகள் பளிச்சிடுகின்றன. எது வேண்டும், எது வேண்டாமென எண்ணுதற்கே இடமில்லை. இப்புனித அறநெறிகள் இக்கால மக்களுக்கு மட்டுமேயன்றி, வருங்கால மனிதகுலமனைத்திற்கும் அரணாக அமைந்தவை. ஆருயிர்க்கெல்லாம் அருமருந்து; அமிர்த மழை, மலால் மணம் போன்றும், மணியில் ஒலி போன்றும் எங்கள் உள்ளங்களில் ஊடுருவி விட்டன. மனித குலத்தின் முதல் ஆசிரியப் பெருமானே! யாங்கள் எங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல வகையறியாது விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் எங்களை "அஞ்சாதீர்! என அபயக்குரல் எழுப்பி கல்வி, உழவு, வாணிபம், நெசவு போன்ற பல தொழில் முறைகளைக் கற்பித்து வாழ்விற்கு வழி வகுத்தருளியது போன்றே வாழ்க்கைப் பண்பிற்கும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் பகவான் திருவாய் மலர்த்தருளிய அறநெறிகள் அனைத்தையும் முழுமையாகப் பாபூரணச் சுத்தியுடன் ஏற்றுக்கொள்ளுகின்றோம்! ஏற்றுக்கொண்டோம்! என ஆண்களும்; பெண்களும் பகவானை வணங்கி மகிழ்ச்சிப் பொங்க, உறுதிமொழி முழக்கம் செய்தனர். "பகவானே யாங்கள் இன்று முதல் எங்கள் வாழ்க்கையில் புதிய அறிவு, புதிய மார்க்கம், புதிய பண்பு, புதிய நாகாகம், புதிய வரலாறு பெற்று மறுபிறவி எடுத்துள்ளதாக உணர்கின்றோம். இனி எங்கள், வாழ்க்கை ஒளிமயமாகக் காட்சியளிக்கும், என எண்ணி, எண்ணிப் பூரிக்கின்றோம். இவ்வாறெல்லாம் எங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் மறுமலர்ச்சியையும் பெறச் செய்தருளிய தங்கள் தெய்வீகத் திருவடிகளையும், திருவறங்களையும் என்றென்றும் மறவோம்! மறவோம்! எங்கள் உள்ளங்களில் நீங்காது நிலைபெறச் செய்து வாழ்ந்து வருவோம்!" என இருகரங்களையும் கூப்பி அகமகிழ்ந்து வணங்கினர்.

பகவான் வாழ்த்துரை

மக்களின் உணர்ச்சியையும், ஆர்வத்தையும் கண்டுகளிப்புற்ற பகவான் "மக்களே! ஆழ்கடலில் மரக்கலத்தை இயக்கும் மாலுமி, தான் செல்ல வேண்டிய வழியைத் தானே ஆய்ந்து துணிவது போன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையெனும் மரக்கலத்தைச் செலுத்தும் வழியாகிய அறநெறிகளின் மாண்பினை நீங்களே ஆய்ந்து உறுதியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். அறமல்லது துணையில்லை என்பதை நன்கு உணர்ந்தீர்கள். இதுவரை மாக்களாக வாழ்ந்த நீங்கள் மக்களானீர். பகுத்தறிவுப் பாதையைக் கண்ணாடி போல் கண்டுவிட்டீர்கள். பாமரக் காட்டைக் கடந்து மெய்ப்பொருள் கண்ட மேதைகளாகக் காட்சியளிக்கின்றீர்கள். உங்கள் உள்ளார்ந்த உறுதியையும், உணர்வையும் பாராட்டுகின்றேன். இந்நன்னாள் முதல் உங்களை 'நற்காட்சியர்' என அழைத்து வாழ்த்துகின்றேன். நற்காட்சி மாட்சிபெற்ற நீங்கள் அறநெறிகளைத் தெளிதல், அறிதல், அவ்வழி நடத்தல் ஆகிய மூன்று பண்பு நெறிகளை மேற்கொள்ளுங்கள். இம்மூன்று தத்துவக் கோட்பாடுகளும் முறையே நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் எனப்பெயர் பெறும். நம் உலகியல் வாழ்க்கைக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் கலங்கரை விளக்கம் போன்றதே மும்மணிகள். இம்மாமணிகள் நம்மை தூய்மையுறச் செய்து இப்பிறவிக் கடலினின்றும் கரையேற்றிப் பிறவா நிலையாகிய மெய்க்காட்சியெனும் வீடுபேற்றை அளிக்கும் அறிவியல் தத்துவம். எனவே, இம்மும்மணிகள் (இரத்தித் திரையம்) நம் ஆன்மாக்களின் புனித அணிகலன்களாகும். ஒப்பிடற்காய இம்மாமணிகள் நம் உள்ளங்களில் பதித்துவைத்துக் காக்கவேண்டிய அரும்பெரும் மணிகள்.

பகவான் அறிவுரை

நற்காட்சிச் செல்வியர் செல்வர்களே! எங்கும் நற்காட்சி நன்மணம் கமழட்டும்! நல்லறம் பரவட்டும்! உள்ளம் நலமானால் வாழ்க்கை வளமாகும்! நீங்கள் பெற்ற அறநெறிகளை அனைவர்க்கும் போதியுங்கள்! நீங்கள் அடையும் இன்பத்தைப் பலரும் பெற்று உய்யட்டும். ஆங்காங்கு அறநெறிச் சங்கங்களை அமையுங்கள்! நம்முடைய கொள்கைகளின் பொதுப்பெயர் அறம் எனப்படும். அறத்தினை மேற்கொண்டோரனைவரும் அறத்தினர். அறத்தினராகிய நீங்கள் அனைவரும் உடன் பிறந்தாரென்ற உணர்வுடன் ஒன்றி வாழுங்கள்! அறநெறிக் கூட்டங்கள் நடத்துங்கள்! யான் முன்னர் பணித்தது போன்று அறநெறிகளின் மாட்சியைப் பலருக்கும் விளக்கிப் பிரச்சாரம் செய்யுங்கள். அறநெறிப் பிரச்சார அமைப்பிற்குக் கொடி இன்றியமையாதது. அறத்தின் சின்னம் காளை! காளைக்கொடியே அறநெறியின் புனிதப்பதாகை! நம் இலட்சிய விளக்கப் பதாகை! காளைக்கு மறுபெயர் நந்தி! எனவே, காளைக்கொடி அல்லது நந்திக்கொடி என அழைத்துப் போற்றுங்கள்! இப்புனிதக் கொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கட்டும். சங்கங்களின் கட்டிடங்களிலும், பொது இடங்களிலும், கூடுமானால் இல்லங்கள் தோறும் பறக்கவிடுங்கள். அறநெறிக் கூட்டங்கள் ஆரம்பிக்கு முன்னர் காளைக் கொடியேற்றி, கொடியேற்று விழா நடத்திக் கொண்டாடுங்கள்.

ஆருயிர்க்கெலாம் அன்பு செயும் இப்பேரறங்களைப் பரப்ப உங்கள் உள்ளங்களில் தோன்றியவாறெலாம் விழாக்கோலம் கண்டு வளருங்கள். எங்கு நோக்கினும் இமிலேற்றின்பதாகை காட்சியளிக்கட்டும்.

இந்நாள் வரை நீங்கள் கேட்டும், கண்டுமிராத இப்புனித இயக்கத்தின் முதல் தலைமுறையினராகிய நீங்கள் பெரும் பாக்கியவான்களே! புண்ணிய சீலர்கள்! அறநெறிகளை உறுதியுடன் கடைப்பிடித்தொழுக வந்த உத்தமர்கள்! உலகுக்கு வழிகாட்டிகள்! மனிதகுல மாட்சிமைக்குப் பயனுள்ள முதல் அத்தியாயத்தைப் படைத்தவர்கள்.

உங்களை உவகைப் பொங்க பாராட்டி வாழ்த்துகின்றேன். அறநெறிச் செல்வர்களாகிய நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் இன்புற்று வாழ்வீர்களாக! ஆன்மீக மேம்பாட்டில் நீங்காத உணர்வுடன் நீடுழி வாழ்க! என அகமும் முகமும் மலர வாழ்த்துரை வழங்கி அமைந்தார்.

மக்கள் உணர்வு

பகவானின் அன்பு கலந்த வாழ்த்துரைகளைப் பெற்ற மக்கள் உணர்ச்சியும், எழுச்சியும் பொங்க, ஆர்வமும் அன்பும் பெருக்கெடுக்க இருகரங்களையும் தலைக்கு மேல் கூப்பி நின்று வணங்கிய கோலத்துடன் பகவான் வாழ்க! வாழ்வுக்கு வழி ஒளி காட்டியருளிய வள்ளல் வாழ்க! பண்பு நெறிக்குப் பாதை வகுத்த பரமகுருவே வாழ்க! வாழ்க! என வானதிர குரலெழுப்பி வாழ்த்திக் கொண்டேயிருந்தனர். பகவானைப் பிரிய மனமில்லாதவராய் பகவானை நோக்கிய கண்கள் இமையா வண்ணம் பகவானை நோக்கி வாழ்த்திக்கொண்டே நின்றனர்.

பகவான் மக்களின் அக உணர்வையும், புற உணர்வையும் அறிந்து மகிழ்ந்து அனைவரையும் செல்லுமாறு கையசைத்து வாழ்த்திப் பணித்தார். மக்கள் பகவானின் அன்புக் கட்டளையை ஏற்றுப் புறப்பட்டனர். ஆண்களும், பெண்களும் ஆனந்தப் பரவசத்துடன் அறநெறி வளர்க! நற்காட்சி மலர்க! நற்காட்சி ஓங்குக! என முழங்கிக் கொண்டே திரும்பினர். அவர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து சென்று கொண்டிருந்தனர். வழிநெடுக பகவானின் திருவுருவ நினைவுடன், அப்பெருமான் அருளிய அறநெறிகளின் மாண்பினை அவரவர்கள் உள்ளங்களில் தோன்றியவாறு பாமாறிக்கொண்டே நடந்தனர்.

அறநெறிகள்

கொல்லாமையின் மாட்சி! பொய்யாமையின் சிறப்பு! கள்ளாமையின் பயன்! பிறர்மனை நயவாமையின் பெருமை! மிகுபொருள் விரும்பாமையின் பொருளாதாரத் தத்துவம்! ஊன் உண்ணாமையின் உயர்வு! கள்ளுண்ணாமை! பொயோரை இகழாமை, பகுத்துண்டு வாழ்தல், அடக்கமுடைமை, அருளுடைமை, அன்புடைமை, பொறையுடைமை, அழுக்காறின்மை, கோபம், கர்வம், மயக்கம் போன்றவைகளை அகற்றுதல், துறவின் மேன்மை, தவத்தின் ஆற்றல் ஆகியவைகளின் பயன்களையும், மேன்மைகளையும் விரிவாக விளக்கிக் கலந்துரையாடிக்கொண்டே களிப்புடன் சென்று கொண்டிருந்தனர்.

கருத்துப் பாமாற்றம்

அவர்களில் ஓர் அறிஞர், "இந் நல்லொழுக்கங்களை உலக மக்கள் அனைவரும் மேற்கொண்டு ஒழுகிவான் மனித சமுதாயம் எவ்வாறு விளங்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என்றார். அவர் கருத்துரையைக் கேட்ட மற்றவர்கள், "ஆஹா! அமைதியும் ஆனந்தமும் பொங்கி வழியுமே என்றார்கள்.

மற்றொருவர், "பகவான் அருள்மொழியை ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்றக் கடமைப் பட்டவன். அப்பொழுதுதான் சமுதாயம் முழுமையும் மேன்மையுறும். இவ்வுண்மையை அறிவிக்கும் முகத்தான் பகவான் நம் அனைவரையும் அறநெறி மேற்கொண்ட முதல் தலைமுறையினர் எனப் போற்றி நினைவுறுத்தினார். இந்நினைவுறுத்தல் வரலாற்று சிறப்பமைந்தது. எவ்வாறெனின் அறநெறிகளை உருவாக்கிப் படைத்த பகவான் விருஷப தேவர் முதல் ஆசிரியர்! அறநெறிகள் யாவும் முதல் படைப்புக்கள்! அம்முதற் படைப்புக் கொள்கைகளை பற்றுள்ளப் பாங்குடன் பற்றிக் கொண்டுள்ள நாமனைவரும் முதல் சமுதாயம்! என வருணித்தார். உடனே மற்றொருவர், "வியப்புக்குரிய இம்மூன்று அமைப்புகளையும் ஆழ்ந்து சிந்தித்துக் காணின் நம்மையறியாமலே நம் உள்ளங்களில் இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பகவான்! அறம்! நாம்! என்னே விந்தை! கற்பகத் தருக்கள் மறைந்ததும், பகவான் அவதாத்த காட்சியும், அறம் மலர்ந்த மாட்சியும், ஒன்றிப் பளிச்சிடும் காலக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம் எனும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். இப்பெறலரும் பேற்றைப் பெற்றுள்ள நம் வாழ்க்கைச் சிறப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் பகவான் அருளிய நல்வினைப் பயனின் பெருமை வெளிப்படுகிறது. நம்பிறவியே பிறவி! நம் முற்பவத் தவமே, தவம்! எனவே, நல்வினைத் தீவினைகளின் விளைவுகளை நன்கு ஆய்ந்து நல்வினைகளையே நாடுதல் வேண்டும் என்ற தத்துவக்கலையின் உண்மையை நம் பிறவியே நிலைநாட்டி உள்ளது" என்றார்.

கருத்துக் கருவூலமாய் விளங்கும் அவர் உரைகளைக் கேட்டு பலரும் கைகொட்டி ஆரவாரித்தனர். நம்முடைய முற்பிறப்பின் மேன்மையையும், இப்பிறப்பின் மாண்பினையும், படம் பிடித்துக்காட்டி விட்டீர் எனப் பாராட்டினர்.

 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com