முகப்பு வாயில்

 


முதியவான் நினைவுறுத்தல்


அக்குழுவினருடன் கூடிவந்த ஒரு மூதறிஞர், அவர்களை நோக்கி, "அன்பர்களே! நீங்கள் அனைவரும் சிந்தனைச் சிற்பிகளே! ஆரம்பத்திலிருந்தே உங்கள் உரையாடல்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே வந்தேன். பகவான் அருளறங்களைப் பற்றோடும், பாசத்தோடும் விளக்கிப் பேசிவரும் திறனாய்வுகள் என் இதயத்தைக் கவர்ந்தன. உங்கள் அறிவாற்றலைப் பாராட்டுகின்றேன். பகவான் அருளுரைகளின் இறுதியில், அப்பெருமகன் பணித்த பொன்மொழிகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள். அவைகளை உங்களுக்கு நினைவுறுத்தினால் நீங்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்" என்றார். உடனே, அனைவரும் ஒருவரையொருவர் வியப்புடன் நோக்கிவிட்டு வறியவன் புதையலைக் கண்டது போல, பொயவரை நோக்கி, "ஐயா! யாங்கள் மறந்து விட்ட அப்பொன்மொழியைத் தங்கள் அருளால் அறிந்து கொண்டோம்! அறிந்து கொண்டோம்!" என மகிழ்ச்சிப் பொங்கக் கூறி குதித்தனர். தாங்கள் குறிப்பிட்ட இறுதி உரைகள் என்ற சொற்றொடரைக் கேட்டவுடன் எங்கள் நினைவிற்கு வந்துவிட்டன. தங்களுக்கு எங்கள் நன்றிகலந்த வணக்கம் என்றென்றும் உரித்தாகுக. ஐயா, யாங்கள் மகிழ்ச்சி மேலீட்டாலும், ஆர்வமிகுதியாலும் எங்களை, நாங்கள் மறந்த நிலையில் பகவான் அருளிய பொன்னுரைகளை மறந்துவிட்டோம் மன்னியுங்கள். பகவான் அறிவுரையின் இறுதியில், "யான் இந்நாட்டின் மன்னனாய் விளங்குவதாலும், நீங்கள் என்னை ஏதோ வானுலக தேவனாக மதிக்கும் அன்பினாலும் யான் கூறிய அறவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எண்ணமோ அச்சமோ கொண்டு மயங்காதீர்கள்! என் உரைகளை உங்கள் சொந்த அறிவினால் ஆய்ந்து, சிந்தித்து குறைபாடுகளோ, ஐயமோ ஏற்படின் அச்சமின்றி, வந்து கூறுங்கள் எனப் பணித்தாரே, அப்பேருரையின் பெருமைதான் என்னே! என்னே" என வியந்து போற்றினர்.

அவர்கள் வியப்பினைக் கண்ட முதியவர், "அன்பர்களே! அறநெறிச் செம்மல்களே! நமக்கு வியப்பை உண்டாக்கும் பகவானின் இயல்பு அங்குதான் உள்ளது. அப்பெருமகனின் சான்றாண்மை! பெருந்தகைமை! பெருமை! அருள் உள்ளம்! ஜனநாயக மரபு அனைத்தும் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றன. நாம் பகவானை நம்நாட்டு மன்னராகவும் உலக முதல் தலைவராகவும், உலக முதல் குருவாகவும், ஏற்றிப் போற்றிவரும் கடமை உணர்வை பகவான் திருஉளம் நன்கு அறிந்திருந்தும், தம் ஆட்சிப் பொறுப்பின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் படைத்தருளிய அறநெறிகளை ஆய்வதும் தர்க்கிப்பதுமின்றி ஒவ்வொன்றையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென நமக்கு ஆணைபிறப்பித்திருக்கலாம். எவரும் எதிர்த்து பேசார். அவ்வாறு இருந்தும் நம் அறிவின் விருப்பத்திற்கு விட்டுவிட்ட பகவானின் ஜனநாயகப் பண்பினைப் பாரெலாம் போற்றும். கற்றோறெல்லாம் வியந்து வாழ்த்துவர். உலகம் உள்ள வரை உயர்ந்தோர் அனைவரும் உவந்துப் போற்றிப் புகழ்வர். இத்துணைப் பெருமையும் மகத்துவம் நிறைந்த பகவான் திருவருள் வரப்பெற்ற நாம், பகவான் திருவடிகளைப் பணிந்து எடுத்துக்கொண்ட உறுதி மொழியைக் காப்பாற்ற கடமைப் பட்டுள்ளோம். அஹிம்சா மூர்த்தியாம் அண்ணல் அருளிய அறநெறிகளை நாம் நம் உளம் கலந்து, உயிர்க் கலந்து ஊன்கலந்து உறுதியுடன் பின்பற்றிப் பிறவிப் பெரும் பயனைப் பெற்று உய்ய வேண்டும்.

மேலும் இப்பேரறங்களை தழுவிய முதல் தலைமுறையினர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் படைத்துக்கொண்ட நாம் அவ்வரலாற்றை மெய்பித்துக் காட்டவேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால மக்கள் பலரும் நம் அறிவாற்றலைப் பின்பற்றி ஆர்வமோடு அறநெறிகளை மேற்கொண்டு வாழ்வர். அது மட்டுமல்ல பகவான் காலப் பிணைப்புக்கொண்ட நம் வரலாற்றைப் படித்துப் பாராட்டி அத்தகைய முதல் தலைமுறையினான் வழித்தோன்றல்கள் யாம் எனத் தலைநிமிர்ந்து தங்களைப் பெருமையோடுக் கூறிக் களிப்பர். எனவே நாம் எத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பிற்கால மக்களும் வரலாற்றுத் துறையினரும் கற்றோரும் கவிஞர்களும் புகழ்ந்து போற்றர்குரிய பொறுப்பு நம் பொறுப்பு.

வானுலக மலரும் - ஒளியும்

இத்துணை மகத்தான பொறுப்பினை மனத்தில்கொண்டு நீண்டகாலப் புகழுக்கும் வரலாற்றுக்கும் வழிகாட்டிகளாக விளங்கி நம் கடமையை ஆற்றுவோம் என முகமலர்ச்சியுடன் நற்காட்சி! நற்காட்சி! என அனைவருக்கும் வணக்கம் செலுத்தினார். மூதறிஞான் அறிவுரையை செவிமடுத்த அனைவரும் ஆனந்த மேலீட்டால் 'பகவான் விருஷப தேவர் வாழ்க!' அறம் ஓங்குக! நற்காட்சி மலர்க! என கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். அக்கணமே வானின்றும் ஜோதி உண்டாகி நகரெங்கும் ஒளிவீசிற்று. மக்கள் பலரும் வியப்புற்று நற்காட்சி ஜோதி! நற்காட்சி ஜோதி! என ஆரவாரித்து களிக்கும் வேளையில் விண்ணுலகினின்றும் மலர்மாரி சொரிந்தது. இவ்வற்புதப் புதிய காட்சியைக் கண்டதும் அறமழை பொழிகிறது! அறமழை பொழிகிறது! என மாந்தரும் மகளிரும், சிறுவர் சிறுமியர்களும் அம்மலர்களைத் தாவியும் ஓடிப்பிடித்தும் ஆவலோடு அம்மலர்களின் மணத்தை முகந்து முகந்து மகிழ்ந்து ஆடிய காட்சி கண்கொள்ளாக்காட்சியாக விளங்கிற்று. மாளிகைகளில் இருந்தோரும் அங்கு வீழ்ந்த மலர்களைக் கரங்களில் ஏந்தியும் முகந்துக் களித்தும் ஆரவாரித்தனர். மங்களகரமான இவ்விரு அற்புதகாட்சிகளும் பகவான் அருள்வாக்கை நாம் தவறாமல் மேற்கொண்ட மகிமையை அறிந்து வானுலக தேவகணங்கள் நம்மை வாழ்த்திப் பாராட்டும் காட்சிகளாகும். அமரேந்திரர் வாழ்த்துக்களும் பெற்ற நம் புண்ணியமே! புண்ணியம். வானுலகோர் பொழிந்த பூமாரியும் ஒளிக்காட்சியும் அறநெறி மேற்கொண்ட நம் ஆர்வத்தையும், பற்றையும், ஒழுக்க மேம்பாட்டையும், பண்புநெறிப்பாசத்தையும், நற்காட்சியின் நாட்டத்தையும் பன்மடங்காக உயர்த்திவிட்டன. அவ்வானுலக தேவர்களை நம் மனம், மொழி, மெய்களால் வணங்கி வாழ்த்துவோமாக என அனைவரும் ஒளி உமிழும் வானை நோக்கி வணங்கி ஆரவாரித்தனர்.

இவ்வாறெல்லாம் மெய்மறந்து கொண்டாடிக் களித்த மக்கள் பெருமைமிக்க இவ்வரலாற்றுப் புனித நாளின் நினைவாக ஆண்டுதோறும் நற்காட்சித் திருநாளாகக் கொண்டாடி வரவேண்டுமென ஒருமுகமாகத் தீர்மானித்தனர். உலகம் போற்றும்; இம்மாண்புறு முடிவை பலரும் வரவேற்றுக் கரவொலிப் பரப்பிப் போற்றினர். அனைவரும் ஆனந்தமெய்தி அடங்கா ஆர்வத்தால் புது நெறிக்காட்டிய புண்ணிய மூர்த்தி பகவான் வாழ்க! அறிவும் அறமும் அருளிய அண்ணல் பெருமான் வாழ்க! கல்வியும் தொழிலும் கற்பித்த கருணாமூர்த்தி வாழ்க! உலக முதற் குருவே வாழ்க! என கோஷங்களை எழுப்பிச் சென்ற காட்சி, பொங்குகின்ற கடலின் பேரொலி போன்று நகரெங்கும் ஒலித்தது. அயோத்தி மாநகரம் எழிலும் பொலிவும் பெற்று அமரருலகமோ என மயங்குறும் வண்ணம் விளங்கிற்று.

எங்கும் விழாக்கோலம் எங்கும் வாத்திய முழக்கம், எங்கும் ஆனந்த நடனம் எங்கும் மங்கல வாழ்த்து, எங்கும் நற்காட்சி மாட்சி!

சமவ சரண காட்சி

நற்காட்சி மாட்சியையும் அதன் வரலாற்றுச் சிறப்பையும் நன்கு அறிந்தோம். பகவான் விருஷபதேவர் துறவறம் மேற்கொண்டு மாசற்ற தவமேம்பாட்டால் கேவலஞ்ஞானப் பேரொளியைப் பெற்றுயர்ந்தார். அச்சீரிய சிறப்பை அறிந்த இந்திரன் சமவசரணம் எனும் அற்புதமான அறவுரை மண்டபம் அமைத்தான். பகவான் அம் மாமண்டபத்தில் அமர்ந்து அறவுரைகளையும் தத்துவக்கலைகளையும் உலகியல் இயல்புகளையும் விளக்கி திருவாய் மலர்ந்தருளினார். பகவான் திவ்யத்தொனியை கணதரர் விளக்கிக் கூற இந்திரர்களும், மன்னர்களும், மக்களும் வெள்ளம் போன்று திரண்டு வந்து கேட்டு மகிழ்வுற்று வந்தனர்.

இவ்வாறு அறமழை பொழிந்து வருகையில் பகவான் தீர்க்க தர்சனத்துடன் வருங்கால நிலையையும் வெளியிட்டார். அவ்வெதிர்கால நிகழ்ச்சி வரலாற்று உண்மையைக் கொண்டது. அப்பேருரை வருமாறு :

"என் காலத்திற்குப்பின் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து இப்பேரறங்களுக்கு முரணான பல்வேறு கொள்கைகளை உருவாக்குபவர் தோன்றுவர். அவர்கள் மாறுபட்ட கொள்கையுடையவராயினும் நம் அறநெறிகளைப் பாராட்டுவர். ஏன்எனில் மனித அறிவு படைத்த எவரும் இப்பேரறங்களைக் குறை கூறவியலாது. அவைகள் என்றும் வாழும் அறங்களாகும். உலகியலுக்கு இன்றியமையாதவை. தனித்தன்மை வாய்ந்தவை. தன்னலங் கருதா தகைமை சான்றோர் எவரும் தலைவணங்கி ஏற்கும் தகுதி பெற்றவை. சுய நலவாதிகளுக்கு இப்பேரறங்கள் பெரும் தடையாகத் தோன்றும் எனவே இப்புனித அறநெறிகளைக் கடைப்பிடித்தொழுக மனமிலாதாராய் தங்களுக்கு ஏற்ற வெவ்வேறு கொள்கைகளைப் படைத்துக்கொள்வர். அப்படைப்புக்களில் புதிதாக ஒன்றையும் காணவியலாமல் நம் அறநெறிகள், தத்துவங்கள் ஆகிய சிலவற்றின் அடிப்படையிலேயே தங்கள் புதிய கொள்கைகளை உருவாக்குவர். இப்புதிய நெறிகளுக்கு சமயம் என்ற பெயரை அமைத்து மக்களை மயங்கி திசை திருப்பிவிடுவார்கள். அவர்களால் படைக்கப்பட்ட சமயக்கொள்கை அனைத்தும் அறிவுக்குப் பொருந்திவராது. அகிம்ஸை போன்ற அறநெறிகளின் அறிவியல் நுணுக்கங்களை ஆழ்ந்து அறியாததால் அவைகளை விதிவிலக்கு எனும் பெயரால் அறிவியல் மாண்பினை சிதைந்து விடுவர். அதனால் அறநெறிகளின் தனித்தன்மை மாய்ந்து எங்கும் மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடும். இந்நிலை மிகமிகப் பிற்காலத்தில் நிகழும். இத்தகு தீய சூழ்நிலையிலும் நம் புனித அறநெறிகளில் ஆழ்ந்த பற்றுடையவர்கள் எங்கும் காட்சியளிப்பர். பாலில் கலந்த நீரைப் பிரித்து பாலைமட்டும் அருந்தும் அன்னப் பறவை போன்ற அறிவுடையோர் நற்காட்சியாகிய அறிவுச் செல்வத்தின் துணைக்கொண்டு போலிக்கொள்கைகளைப் பிரித்து ஆய்ந்து மெய்ப்பொருள்களைத் தேர்ந்து தெளிந்து ஏற்பர். இப்பெற்றிய நற்காட்சி மாட்சி உடைய சான்றோர் பலர் இவ்வுலகம் உள்ளவரை எங்கும் உலா வருவர். இத்தூய அறிவுடையோரால் அறம் என்றும் எக்காலத்தும், எவ்விடத்தும் நிலைத்து நிற்கும்" எனப் பகர்ந்தார்.

மகாவீரர் காலம்


எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அருளிய பகவான் திருமொழிகளின் உண்மைகளை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். நம் பாரத நாட்டின் வரலாற்றில் கடந்த சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக அவ்வப்போது நிலவிவரும் சமயங்களின் கொள்கைகளே சான்றுகளாகும். பகவான் விருஷப தேவருக்குப் பின் அவ்வப்போது தோன்றிய 22 தீர்த்தங்கரர்கள் காலம்வரை பகவான் விருஷபதேவர் அறநெறிகள் எங்கும் பரவி நிலைப்பெற்று விளங்கின. 24-ஆம் தீர்த்தங்கரர் பகவான் மகாவீரருக்கு முன்னர்தான் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட பல குழுவினர் உருவாகி, அவர்கள் சமயம் என்ற பெயரால் பண்டைய அறநெறிகளுக்கு முரணாகக் கொள்கைகளை நாட்டில் பரவச் செய்தனர். இவர்கள் கொள்கைகளால் மக்கள் சமுதாயம், ஜாதி சமய வேறுபாடுகளால் சிதறுண்டு போயின. தெய்வத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், பல மூடநம்பிக்கைகளில் மூழ்கி மயங்கினர். அதர்மம் தலைவிரிதாடியது. இத்தகைய சூழ்நிலையில்தான் பகவான் மகாவீரர் தோன்றினார். இயற்கையின் ஆற்றல் வாளாயிருக்குமா? எனவே மகாவீரரைத் தோற்றுவித்தது. பகவான் விருஷபதேவர் காலம் அறம் என்ற பெயரையே கேட்டறியாத மக்கள் வாழ்ந்த காலம். அதனால் பகவான் அறநெறிகளைப் புதிதாகப் படைத்து போதித்தபோது மக்கள் அனைவரும் அறநெறிகளின் பெருமையையும், ஆற்றலையும் அறிந்து உளம் மகிழ்ந்து ஏற்றுக்கடைப்பிடித்தனர். மகாவீரர் காலமோ அத்தகையதன்று. நாம் முன்னர் கூறியபடி பண்டைய அறநெறிகளுக்கு மாறான பலசமயங்கள் மலிந்தகாலம். எனவே, பகவான் மகாவீரான் தோற்றம் இன்றியமையாதது. பகவான் மகாவீரருடைய பொறுப்பும், கடமையும் அதிகாத்துவிட்டன.

எனினும் பகவான் மகாவீரர், அறத்தை நிலைநாட்டும் குறிக்கோளுடன் எவ்வித எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது பண்டைய அறநெறிகளை நாடெங்கும் பரப்பி வந்தார். அப்பெருமான் அறவுரைகளைக் கேட்க மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. பகவான் மகாவீரர் சமயவாதிகளின் செவிகளில் அறநெறிகளின் இயல்புகளைப் புகுத்தி உரையாற்றினார். அறநெறிகளுக்கெல்லாம் தலையாய அஹிம்சை நம் ஆன்மாவோடு ஒன்றி உறைவது. அதனாற்றான் ஆருயிர் யாதேனும் இடருற்று துன்புறின் நம்முயிர் ஓருயிர் போன்று உருகி துன்புறுகிறது. இவ் அறிவியல் உண்மையை உணர்ந்தோர் அஹிம்ஸை வழி நிற்பர். இப்பேரறத்தைப் போன்று சமயங்களோ சாதிகளோ நம் ஆன்மாவோடு பிறந்தவை யல்ல. பெற்றோர் வழி சேர்ந்தவை. ஆடை அணிகலன்கள் போன்றவை எனும் இயற்கையை விளக்கி நற்காட்சியை முன் நிறுத்தி பேசினார். சமய வாதிகளும் மற்ற மக்களும் சிந்தனையில் ஆழ்ந்தனர். சீரிய உண்மைகள் கண்ணாடி போல் பளிச்சிட்டன. அறிவும், மனமும் ஒன்றிக் கலந்தன. பகவான் மகாவீரர் அருளிய திருமொழியில் சிந்தை செலுத்தினர். எவ்வுயிர்களிடத்தும் அன்பாயிருங்கள், எவ்வுயிரும் வாழ வழிவிடுங்கள். எல்லாரும் உடன்பிறந்தார் போன்று ஒன்றி வாழுங்கள் எனும் அறவுரைகளின் மேன்மையை அறியாது கொலையை அறம் எனக்கூறும் சமயக் கொள்கைகளை நம்பிக் காலம் கழித்தோமே! பேய்ச்சுரைக்கு நீர் இரைத்துப் பொதாயப் பிழைசெய்தோமே! கானல் நீரை நீர் என்றே எண்ணி பின்னோக்கித் திரிந்து பித்தரானோமே! என்றெல்லாம் எண்ணி, எண்ணி மக்கள் ஏங்கினர்.

நம் இன்பத்திற்கும், துன்பத்திற்கும், பெருமைக்கும், சிறுமைக்கும் நம் செயல்களேயன்றி வேறெந்த சக்தியும் அல்ல எனும் அறிவியல் அறநெறிகளில் உளம் கொண்டனர். எல்லாம் ஆண்டவன் செயல் என்ற மாயக்கொள்கைகளின் மயக்கம் தெளிந்தது. நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளே நம் ஆன்ம விடுதலைக்கு நற்பாதை எனும் தத்துவக் கோட்பாட்டை வரவேற்று பெரும்பாலான சமயவாதிகளும், பொதுமக்களும் பகவான் மகாவீரரை உள்ளத்தால் வணங்கி அப்பெருமகன் அறநெறிகளைச் சரணடைந்தனர். பகவான் மகாவீரான் வீர உரைகள் வெற்றிப்பெற்றன. அறநெறிகளும் மறுமலர்ச்சியுற்றன. இவ்வாறு வரலாறு திரும்பிற்று. அறம் வளர்ந்தது. மறம் சாய்ந்தது. பாரத நாடெங்கும் அறம், அறம் என்ற ஓசையே ஒலித்துக்கொண்டிருந்தது.

 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com