முகப்பு வாயில்

 

மேல்நாட்டுத் தமிழ் அறிஞருக்கு வரவேற்பு

1958-ம் ஆண்டில் செக்கோஸ்லோவேகியா நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் 'டாக்டர் கமில் சுவலேபில்' அவர்கள் சென்னைக்கு வந்தார். அவர் தமிழ் மொழியிலும், வடமொழியிலும் ஆழ்ந்த புலமைப் பெற்றவர். மேல்நாட்டுத் தமிழ்ப் புலவர் தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தி அறிந்ததும் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், தமிழ்ப்புலவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கை நிருபர்கள் ஆகிய பலரும் அவரைக் காணச் சென்றனர்.

யானும் சென்றேன். யாங்கள் பலரும் டாக்டர் அவர்களை அகமலர்ந்து வரவேற்று அளவளாவினோம். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் என்ற முற¨யிலும், தமிழ் மொழியின் சிறப்பிற்கும், வளர்ச்சிக்கும் ஜைன அறவோர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளின் நினைவாகவும் டாக்டர் அவர்களைச் சிறப்பிக்கவும் கடமைப்பட்டவன் என்ற குறிக்கோளையும் உள்ளத்தில் கொண்டு, வந்திருந்த புலவர் பெருமக்களை நோக்கி, யான் டாக்டர் அவர்களுக்கு சிறந்த வரவேற்பு விழா நடத்த விழைகின்றேன் எனக் கூறினேன். அங்கிருந்த பலரும் கர ஒலி பரப்பி என் விருப்பத்தை வரவேற்று ஊக்குவித்தனர். யானும் அனைவர்க்கும் நன்றிகூறி விடைபெற்றுச் சென்றேன். 1958 மார்ச்சு திங்கள் இரண்டாம் நாள் திருத்தக்கதேவர் இலக்கிய மன்ற சார்பில் சென்னை கோகலெ மண்டபத்தில் வரவேற்று விழாவிற்கு ஏற்பாடு செய்தேன். இவ்வரலாற்று சிறப்புமிக்க விழாவிற்கு என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரும், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவருமாகிய டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் தலைமைத் தாங்கினார்கள். சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி 'டாக்டர் கமில் சுவலேபில்' அவர்களுக்கு திருத்தக்கதேவர் இலக்கிய மன்ற சார்பாக வரவேற்பு வாழ்த்து இதழ் வாசித்தளித்தேன். அது சமயம் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜீவகசிந்தாமணி ஓலைச்சுவடி ஒன்றையும் அன்பளிப்பாக டாக்டர் அவர்களுக்கு வழங்கினேன். அவைகளை அம்மேல்நாட்டுத் தமிழ் அறிஞர் மகிழ்ச்சிப் பொங்கப் பெற்றுக்கொண்டார். பண்டைக் காலத்து ஓலைச்சுவடியைக் கண்டதும், அதிலும் தமிழ்க் காவியங்களில் தலைசிறந்த காவியமான ஜீவகசிந்தாமணி என்பதை அறிந்ததும் புலவர் பெருமக்களும், பொது மக்களும் அளவிலா மகிழ்ச்சியால் கரவொலி பரப்பி ஆரவாரித்தனர்.

பின்னர் விழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்த அறிஞர் பெருமக்கள் பலரும் 'டாக்டர் கமில் சுவலேபில்' அவர்களின் தமிழ்ப் புலமையையும், ஆய்வாற்றலையும் பாராட்டிப் புகழ்ந்து வாழ்த்துக் கூறினர்.

இறுதியில் டாக்டர் கமில் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி ஓலைச் சுவடியைக் கையிலேந்தியவாறு சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் எந்த சான்றோர் கரங்களால் இச்சுவடி எழுதப்பட்டதோவென வியந்து போற்றினார். ஜீவகசிந்தாமணியைப் படைத்தருளிய திருத்தக்கத் தேவர் திருவடிகளையும் இந்தப் புனித ஓலைச் சுவடியை எழுதிய சான்றோரையும் வணங்குகின்றேன். இந்த அரும்பெரும் ஓலைச் சுவடியையும், இன்று நடந்தேறிய விழா நிகழ்ச்சிகளையும், அறிஞர்களின் வாழ்த்துரைகளையும் யான் என்றும் மறவேன், யான் என் நாட்டிற்குச் சென்றவுடன் இப்பழம்பெரும் ஓலைச்சுவடிக்கு ஒரு விழாவே நடத்திச் சிறப்பிப்பேன். யான் ஜீவகசிந்தாமணியை ஆழ்ந்து பயின்றுள்ளேன். பண்டைய தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் திருக்குறள் போன்ற நீதி நூல்களையும் ஆய்ந்து காணும்போது அவைகள் யாவும் ஜைன அறவோர்களாலேயே இயற்றப்பட்டனவாக உள்ளதை அறிந்தேன். அம்மரபில் தோன்றிய திருத்தக்கத் தேவர் இலக்கியமன்ற சார்பில் இவ்விழா நடந்துள்ளதை யான் பெருமையாகக் கருதுகின்றேன்.

"தமிழ்க் காப்பியங்களில் தலைசிறந்த காவியமாகப் பலராலும் போற்றப் பெறும் சிந்தாமணியை இயற்றி அருளிய திருத்தக்கதேவர் விருத்தயாப்பைக் கையானாவதிலும், உருவகம் முதலிய நயங்களிலும் தமிழ் செய்யும் வரலாற்றில் ஒப்பாறும் மிக்காறு மின்றி விளங்குகின்றார் எனப் புகழ்ந்து போற்றி அனைவரையும் மகிழ்வித்து திருத்தக்கத்தேவர் இலக்கிய மன்றத்தாருக்கும், விழாவில் கலந்துகொண்ட அறிஞர்களுக்கும் நன்றியையும் வணக்கமும் தொ˘வித்துக்கொண்டார்."

இம்மாபெரும் விழா இனிது முடிந்த மறுநாள் நம் மதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய தத்துவ சூடாமணி பேராசிரியர் உயர்திரு. A. சக்கரவர்த்தி நயினார் அவர்களை அறிமுகப்படுத்தவேண்டி 'டாக்டர் கமில்' அவர்களை பேராசிரியர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். பேராசிரியர் அவர்கள் டாக்டர் அவர்களை அன்புடன் வரவேற்று உபசா˘த்தார். 'டாக்டர் கமில்' அவர்கள் பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம் தொ˘வித்து ஜெர்மனி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் தங்கள் புகழ் தினந்தோறும் பேசப்படுகிறது என்றும், தங்கள் தத்துவ நுணுக்கங்களை மேற்கோள்காட்டாத தத்துவ ஆசிரியர்களே மேல்நாட்டில் இல்லையென்றும், அந்நூல்கள் வாயிலாகத் தங்கள் பெருமையை அறிந்துள்ளயான் இன்று தங்களை நேரே கண்டுகளிக்கும் பாக்கியம் பெற்றேன் என்றும் பாராட்டி மகிழ்ந்தார். பேராசிரியர் அவர்கள் 'டாக்டர் கமிலின்' வடமொழித் தென்மொழிப் புலமையை அறிந்து மகிழ்ந்து டாக்டர் அவர்களுக்கு நீலகேசி, பஞ்சாஸ்தி காயம் போன்ற பல நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். டாக்டர் அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு நன்றி கூறி விடைபெற்று வந்தார். டாக்டர் அவர்கள் தமிழகத்தில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். இதனிடையில் திருத்தக்கதேவர் இலக்கியமன்ற உறுப்பினர்களையும், 'டாக்டர் கமில்' அவர்களையும் அழைத்துச் சென்று பேராசிரியர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் மேற்கண்ட நிகழ்ச்சிகளையும், இப்புகைப்படத்தையும் என் மணிவிழா மலா˘ல் காணலாம்.

கடலைக் கண்ட கனவின் பலன்

மேற்கண்ட டாக்டர் கமில் சுவலேபில் அவர்கள் தற்பொழுது ஹாலண்ட் நாட்டு 'உட்ரிச்' (UTRICH) பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். அப்பெருந்தகை எழுதி வெளியிடும் நூல்கள் சிலவற்றில் சென்னை நிகழ்ச்சி பற்றியும், என் சேவைகளைப் பற்றியும், ஆய்வு நூல்கள் பற்றியும் எழுதியுள்ளார். டாக்டர் அவர்கள் பணிபுரியும் உட்ரிச் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் ராபர்ட் J. சைமன் போஸ், ¦.A., (Ro¦ert J. Zyden¦os, ¦.A.) அவர்கள், டாக்டர் கமில் அவர்கள் என்னைப் பற்றி எழுதியுள்ள செய்திகளைப் படித்து அறிந்துள்ளார். அதனால் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு ஏற்படின் என்னைக் கண்டு அளவளாவ வேண்டுமெனும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய ஆழ்ந்த ஆவல் வெற்றிப் பெறும் வகையில் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பது ஜனவா˘ திங்கள் இந்தியா வந்து நேரே சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். ராபர்ட் அவர்கள் ஹாலண்டிலிருந்து புறப்படுமுன் டாக்டர் கமில் அவர்களிடம் என் முகவா˘யைப் பெற்றுக்கொண்டு வந்தார். எனவே, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. D. மூர்த்தி அவர்களின் துணைக்கொண்டு 25-1-1979-ம் நாள் என்னைக் காணவந்தார். எதிர்பாராத வகையில் ஐரோப்பியர் ஒருவர் என் அலுவலகத்தில் வருவதைக் கண்டதும் யான் வியப்புற்று என் இருக்கையை விட்டு எழுந்து இருவரையும் எதிர்கொண்டழைத்து இருக்கையில் அமரச்செய்தேன். D. மூர்த்தி அவர்கள் ராபர்ட் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். யான் பெருமகிழ்வு கொண்டு ராபர்ட் அவர்களோடு கை குலுக்கி நன்றி கூறினேன். அறிஞர் ராபர்ட் அவர்கள் ஆண்டில் இளையவராயினும் அறிவில் முதிர்ந்தவராகக் காணப்பட்டார். தமிழ் மொழியும், வடமொழியும் நன்கு அறிந்த மேதை. அறிஞர் ராபர்ட் அவர்கள் டாக்டர் கமில் அவர்களோடு கொண்டுள்ள தொடர்பையும் டாக்டர் வாயிலாக என் ஜைன இலக்கியப் பணிகளையும் அறிந்துள்ளதாக விளக்கிக் கூறினார். ஜைன அறவோர்கள் உலகக் கலைக்கு உதவியுள்ள அரும் பெரும் பணிகளைப் பாராட்டினார். மக்கள் சமுதாய மேம்பாட்டிற்கும், அறிவிற்கும் பொருந்தும் கொள்கைகளை ஜைனம் படைத்துள்ளதை யான் நன்கு அறிந்துகொண்டுள்ளேன் என்றும், தமிழகத்தில் ஜைன அறவோர்களின் வரலாறுகளையும், அத்தூயோர் தவம் புரிந்த பள்ளிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். யானும் ராபர்ட் அவர்கள் ஜைன சமயத்தின்பால் கொண்டுள்ள ஆர்வத்தைக் கண்டு அவர் விரும்பிய வரலாறுகளையும் இலக்கியப் பணிகளையும் விளக்கிக் கூறினேன். எல்லாவற்றையும் குறித்துவைத்துக்கொண்டார். பின்னர் அவருக்கு என் ஆய்வு நூல்களில் சிலவற்றை அளித்தேன். அவைகளில் 'ஆவி உலகப் பேச்சு' என்ற நூலைப் பார்த்ததும் வியப்போடு இது என்ன என்றார். அந்நூலின் கருத்தைக் கூறினேன்.

இதனைக் கேட்டதும் ராபர்ட் அவர்கள் தம் முகத்தை சுளித்துக்கொண்டு ஓ! கடவுளே! ஞானசம்பந்தர் கதையையும், பொ˘யபுராணக் கூற்றுக்களையும் யாங்கள் ஏற்பதில்லை என விரசமாக உரைத்தார். ராபர்ட் அவர்களின் பேச்சைக் கேட்டதும் D.மூர்த்தி அவர்களும், யானும் வியப்புற்று ராபர்ட் அவர்களின் ஆய்வறிவைப் பாராட்டி மகிழ்ந்தோம். ராபர்ட் அவர்களின் பகுத்தறிவுத் திறன் மெச்சத்தக்கதாகும். அவர் ஜைன அறநெறிகளின்பால் கொண்டுள்ள மதிப்பையும், ஆர்வத்தையும் எண்ணி யான் மகிழ்ந்தபோது எனக்கு பழமொழி நானூறில் உள்ள ஒரு அரிய வெண்பா நினைவுக்கு வந்தது.

"பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க
வரம்பில் பெருமை தருமே பரம்பூரி
என்றும் பதக்கே வரும்"

இதன் பொருள் :

பல்வேறு கொள்கைகளை உடைய சமயங்களின் நெறிகள் மீது செல்லாமல் நன்மை தரும் கொள்கைகளை நிரம்பிய காட்சியால் (பகுத்தறிவினால்) ஆராய்ந்து தெளிக. அத்தெளிவே வரம்பு இல் பெருமை தரும். கடைப்பிடித்து ஒழுகின் வீடுபேற்றை உறுதியாகத் தரும் என்பதாம்.

இவ்வெண்பா காட்டும் நிரம்பிய காட்சியுடையவராக ராபர்ட் அவர்கள் விளங்குவதை என் அகக் கண்ணால் அறிந்து உளம் பூரித்தேன். ராபர்ட் அவர்கள் அறநெறிகளைக் கடைபிடியாதவராயினும் பல்வேறு கொள்கைகளின் இயல்புகளைப் பகுத்துணரும் ஆய்வறிவாகிய நற்காட்சி நல்லொளி ராபர்ட் அவர்களிடம் சுடர்விட்டு வீசுவதைக் காண்கிறோம்.

ராபர்ட் அவர்கள் ஜைன சமய கொள்கைகள¨யும், வரலாறுகளையும் நன்கு அறிந்து போற்றும் ஆர்வத்தைக் கண்டு கடல்கடந்த நாட்டிலும் நற்காட்சியர் ஒருவர் காட்சி அளிக்கின்றார் எனில் மிகைபடக் கூறுவதன்று. அறிஞர் ராபர்ட் அவர்கள் சுமார் ஒருமணி நேரம் உரையாடிய பின்னர் நாளையும் வருவதாகக் கூறி விடைபெற்றுக்கொண்டு இருவரும் சென்றனர். அடுத்த நாள் ராபர்ட் அவர்களின் வருகையை என் நண்பர் பலருக்கும் தொ˘வித்திருந்தேன். அவ்வாறே மறுநாள் தத்துவமேதை திரு. S. கெஜபதி ஜெயின் அவர்கள், திரு. V.C. ஸ்ரீபால் அவர்கள், திரு. A. வர்த்தமான் ஜெயின் அவர்கள், திரு. V. ஸ்ரீபால் ஜெயின் அவர்கள் ஆகியோர் வந்தனர். குறித்தவாறு அறிஞர் ராபர்ட் அவர்களும் வந்து சேர்ந்தார். தத்துவ மேதை திரு. S. கஜபதி ஜெயின் அவர்களும், திரு. V.C. ஸ்ரீபால் ஜெயின் அவர்களும் மற்றவர்களும் ராபர்ட் அவர்களை அன்போடு வரவேற்று கலந்துரையாடி மகிழ்ந்தனர். இறுதியில் யாங்கள் அனைவரும் ராபர்ட் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ராபர்ட் அவர்கள் ஹாலண்ட் நாட்டு 'பால்பென்' ஒன்றை நினைவாக வைத்துக்கொள்ளுமாறு என்னிடம் அளித்தார். நானும் நன்றி செலுத்தி மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். இறுதியாக ராபர்ட் அவர்கள் அனைவர்க்கும் வணக்கம் செலுத்தி விடைபெற்றுச் சென்றார். யாங்களும் முகமலர்ச்சியோடு ராபர்ட் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி வழியனுப்பினோம். காளைக் கனவு ராபர்ட் அவர்களின் வருகையையும் அறிவித்தது போன்று பயனறித்துள்ளதை எண்ணி, எண்ணி மகிழ்ந்தேன்.

நற்காட்சியின் பொற்காலம்


தமிழக ஜைன கிராமங்களில் திருப்பறம்பூர் கிராமம் வரலாற்றுச் சிறப்புடையது. பண்டைய காலத்தில், கி.பி. 5 அல்லது 6-ம் நூற்றாண்டில் இக்கிராமத்தில் அண்டையில் பல முனிவர்கள் தவம் புரிந்து, அறநெறிகளையும், இலக்கியங்களையும் வளர்த்து வந்தனர். இம்முனிவர்கள் வடமொழி, தமிழ் மொழிகளில் புலமைப் பெற்றவர்களாக விளங்கினார்கள். பலர் கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். இப்புனிதப் பகுதிக்கு முனிகிரி எனப் பெயர் வழங்கிற்று. இம்முனிகிரியில் சோழ மன்னர்கள் பலர் கோயில்கள் அமைத்தனர். இக்கோயில்களின் கல்வெட்டுச் செய்திகள் மேற்கண்ட வரலாற்றுக் காட்சிகளை கண்ணாடி போலக் காட்டுகின்றன. கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாதகேசா˘ அகளங்க தேவர் வடநாட்டில் பல சமயங்களோடு வாதம் புரிந்துவெற்றி வாகைச் சூடி, தமிழகம் விஜயம் செய்தார். ஜினகாஞ்சியில் மகேந்திர பல்லவ மன்னன் ஆதரவில் பல நாட்கள் தங்கி, அங்குள்ள பல ஜினாலயங்களைத் தா˘சித்துக்கொண்டும், ஆங்காங்கு அறவுரை பகர்ந்து கொண்டும், திருப்பறம்பூர் முனகிரி ஜினாலயம் வந்தடைந்து தவம் புரிந்து வந்தார். அதுசமயம் திருப்பறம்பூர் கிராமத்திற்கு அண்மையிலுள்ள அறவழித் தாங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஹிமசீதள மன்னன் வேண்டுகோளையேற்று அறவழிதாங்கியில் வாழ்ந்திருந்த புத்த சமயத்தாரோடு வாதம் புரிந்து வெற்றி கண்டார். பாரத வரலாற்றிலும், குறிப்பாகத் தமிழக வரலாற்றிலும் இது சிறந்ததோர் பெருமை மிக்க நிகழ்ச்சியாகும். அதுமட்டுமல்ல! திருப்பறம்பூர் முனகிரி ஜினாலயத்தில் அகளங்க தேவர் அறவுரையாற்றும் பாவனையில் அப்பெருமகன் திருவுருவச் சிலை கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அகளங்கர் தவம் புரிந்து சமாதி அடைந்த பாறையின் மேல், அவர் திருவடி பொறித்த நினைவு மண்டபமும் இக்கிராமத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அக்காலம் முதல் இக்கிராமத்திற்கு அகளங்க பஸ்தி எனப் பெயர் வழங்கலாயிற்று. இத்தகு வரலாற்றுப் புகழ் படைத்த முனகிரி பிற்காலத்தில் முனிவர்கள் அருகிவிட்டதால் அப்பகுதியில் அண்டை கிராமங்களினின்றும் பல ஜைன குடும்பத்தினர் குடியேறினர். தற்சமயம் அப்பகுதி "கரந்தை" எனும் பெயரால் தனி கிராமமாக விளங்குகிறது. இரண்டு கிராமங்களுக்கும் இடையில் குடிநீரளிக்கும் ஒரு குளம் தான் எல்லை. இந்த 20-ம் நூற்றாண்டிலும் அம்மாமுனிவர்களின் பாரம்பா˘யம் தொடர்ந்து வருவதுபோன்று, இவ்விருபதாம் நூற்றாண்டில் திறப்பறம் பூரின்கண் தரும சாகர முனிவரும், சுதர்ம சாகர முனிவரும் தோன்றினர். இம்மாமுனிவர்கள் தூய தவ ஒழுக்கத்தான் உயர் பதவி அடைந்தார்கள். இவ்விரு தவத்தவர்களின் நினைவாகத் திருப்பறம்பூர் ஜினாலயத்தில் அம்மாமுனிவர்களின் திருவடிகள் பொறித்த மண்டபமும் அமைத்து போற்றி வருகின்றனர்.
 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com