முகப்பு வாயில்

 

ரந்தை திருப்பறம்பூர் முனிகிரி ஆலயத்தில் பகவான் பாஸ்வநாதர் திருமேனி மேற்றிசை நோக்கி காட்சி அளிக்கிறது. திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் எனப்போற்றும் பகவான் பாஸ்வநாதர் திருமேனியும் மேற்றிசை நோக்கியே அமைந்திருக்கிறது. இருபெருந்தலங்களும் பண்டைய மாமுனிவர்களால் போற்றிப்பாடப்பெற்றவை. அத்தூயோர் பாடல்களில் திருப்பறம்பூர் பகவான் பாஸ்வநாதரை திருமேற்றிசையான் எனப்போற்றும் 'திருமேற்றிசைப் பத்து' எனும் பதிகங்கள் இருக்கின்றன. திருநறுங்கொண்டை அப்பாண்டை நாதரைப் போற்றும் அப்பாண்டைநாதர் உலாவும், 'திருமேற்றிசை அந்தாதியும்' திருநறுங்கொண்டை பாஸ்வநாதரைத் 'திருமேற்றிசையான்' என்றே பாடிப்போற்றப்பட்டுள்ளன. என்னே விந்தை! நற்காட்சி நோன்பு ஆரம்பமானதும் திருப்பறம்பூர் கரந்தை பாஸ்வநாதர் திருத்தலம், நிறைவு விழாவும் அப்பெருமகன் திருக்கோயில்! இம்மாண்புமிகு ஒற்றுமைகளை எண்ணுந்தோறும், எண்ணுந்தோறும் எல்லையில்லா இன்பம் பயக்குகிறது. இவை மட்டுமா? பண்டைய காலத்தில் திருப்பறம்பூர் - முனிகிரி பகுதி வாதகேசரி அகளங்க மாமுனிவர், அபிநந்தனபட்டாரர், அரிமண்டல பட்டாரர், கனகநந்திபட்டாரர், புஷ்பசேனர், யோகித்தீரர் போன்ற பல மாமுனிவர்களின் தபோவனமாகக் காட்சியளித்தது. திருநறுங்கொண்டை மகாபுராணத்தின் பிற்பகுதியாகிய இருபத்திமூன்று தீர்த்தங்கரர்களின் வரலாறுகளை இயற்றி முடித்த குணபத்திராச்சாரியாருடன் வீரநந்தி அடிகள், மண்டலபுருடர், சம்பந்த மாமுனிவர், அப்பர்முனிவர் ஆகிய மாமுனிகளின் தவப்பள்ளியாகத் திகழ்ந்துள்ளது.

இவ்வாறு இருமாபெரும் திருத்தலங்களின் வரலாற்று ஒற்றுமை அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். எதிர்பாராது இயங்கும் இப்பேரமைப்பு தெய்வீகப் பொருத்தமாகும். நற்காட்சி நோன்பினர் தங்கள் நிறைவு விழாவைத் திருநறுங்கொண்டை திருத்தலத்தில் தைத்திங்கள் இருபதாம் நாளன்று அமைத்துள்ளனர். இந்நான்னாள் பகவான் பாஸ்வநாதர் பிறந்த புண்ணியமாதமாகும். இப்புனித நாளும் எதிர்பாராது ஏற்பட்டதேயாகும்.

இப்பெற்றிய மகிமைபொங்க மலர்ந்துள்ள இத்தைத்திங்கள் மற்றொரு அற்புத வரலாற்றையும் படைத்துகொண்டுள்ளது. திருநறுங்கொண்டை பகவான் பாஸ்வநாதருக்கு ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் ஐந்து நாட்கள் பெருவிழா (மகோற்சவம்) நடைபெற்று வருவதை ஜெயின உலகம் நன்கு அறியும். இம்மகத்தான விழா போன்றே தைமாதத்தில் ஒருநாள் பகவான் பாஸ்வநாதரை எழுந்தருளப் பண்ணி உலா வரவேண்டுமென ஆர்வம் கொண்டது ஒரு தவத்தாளான் பேருள்ளம். அத்தவத்தர் தன் ஆர்வத்தை ராஜாக்கணாயன் என்பார்க்குச் சொன்னார். அவ்வாறே ராஜாக்கணாயன் திருநறுங்கொண்டை நாயனாரின் இறையிலி நிலத்துப் பயிரேறாமல் கிடந்த நிலங்களைப் பயிர் செய்து அவ்வருவாயைக் கொண்டு ராஜாக்கணாயன் திருநாள் என ஆண்டுதோறும் தைமாதத்தில் திருவிழா எழுத்தருள வகைசெய்தார். இப்பெருந்தகையின் தார்மீக உள்ளத்தையும், கைங்காயத்தையும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கல் சொல்லும் வரலாற்றைப் படித்து இன்புறுவோம்.

"திருநறுங்கொண்டை நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளித் தானத்தாற்குத் தங்களுர் நாயனார் அப்பாண்டார்க்கு முன்பிலாண்டு எழுந்தருளுகிற வைகாசித் திருநாளுடனே நம் பேராலேயும் ஒரு திருநாள் எழுந்தருள வேணுமென்று இருங்கொளப்பாடி நாட்டுத் தவத்தாளன் தேவர் சொல்லுகையில் இதுக்கு உடலாக இவ்வூரில் நான்கெல்லைக்கு உட்பட்ட எல்லைக்குள் முன்பு இந்நாயனார்க்கு இறையிலியான நிலத்தில் பயிரேறாமற் கிடந்த நிலமும் குடுத்துப் பயிர் செய்து கொல்லி ஏந்தல் உட்பட புறவுடன் முன்பு நாலாவது கண்டு கொண்டு ஆறாவது முதல் நம் பேராலே இராசாக்கணாயன் திருநாளென்று தைம்மாதத்து அத்தத்திலே தித்தமாகத் திருநாள் எழுந்தருளுவிப்பதாச் சொன்னோம்,."

உத்தமர் ராஜக்கணாயன் நடத்திவந்த தைத்திங்கள் விழா நாமறிந்து நடக்கக் காண்கிலோம். பல ஆண்டுகட்கு முன்பே அவ்விழாவை நடத்துவாறின்றி நின்றுவிட்டிருக்கலாம். எதிர்பாராதவிதமாய் இப்பொழுது அதே தைத்திங்களில் பகவான் பாஸ்வநாதர் விழாவினைக் கண்டுகளிக்கப் போகின்றோம். நாம் மட்டுமல்ல, தைத் திங்கள் விழாவாக முன்னர் நடத்தி வந்த உத்தமர் இராஜாக்கணாயன் ஆவியும் இன்று ஆன்தமடையும். இப்புனித நற்காட்சி நோப்பு திருநறுங்கொண்டை தம் பண்டைய வரலாற்றோடு புதியதொரு வரலாற்றையும் படைத்துக்கொண்டு பொலிவுபெற்று விளங்குகிறது.

நற்காட்சி நோன்பினர் வருகையும், விழாவும்

நற்காட்சி நோன்பினர் பலரும் 2-2-79 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கே காவி உடையுடன் திருநறுங்கொண்டை வந்தடைந்தனர். தமிழக ஜெயினப் பெருமக்கள் பெரும்பாலோர் தனி பஸ்களிலும், லாரிகளிலும், கார்களிலும் ஏராளமாக வந்துகொண்டேயிருந்தனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட சிராவகர்களும், சிராவிகளும், இளைஞர்களும் திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதரை வழிபடவும், நற்காட்சி நோன்பினான் புனித விழாவைக் காணவும் வந்து கூடினர்.

காலை பத்துமணிக்கு நற்காட்சி நோன்பினர் பலரும் ஒருங்கிணைந்து காளைக்கொடி ஏந்தி பகவான் பாஸ்வநாதரைப் போற்றும் துதிப்பாடல்களையும், திருநறுங்கொண்டை மகிமையை விளக்கும் தோத்திரப் பாக்களையும், அறநெறிகளின் கொள்கை விளக்கப் பாடல்களையும், நற்காட்சியின் மாட்சி நிறைந்த இசைப்பாக்களையும் பாடிக்கொண்டு, ஊர்வலமாக வீதிகள் தோறும் உலா வந்தனர். வாத்திய முழக்கங்களும், இசைக்கருவிகளின் ஓசைகளும் வானைப் பிளந்தன. இவ்வாறு நற்காட்சி நோன்பினரும் ஆயிரக்கணக்கான மக்களும் திருத்தலம் காட்சி அளிக்கும் மலையேறும் திருப்படியின் அடிவாரத்தில் வந்து சேர்ந்தனர். திருப்படி விழா ஆரம்பமாயிற்று. நற்காட்சி நோன்பினர் நாம் மேலே கண்ட துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டும், நடனங்கள் ஆடியும் ஒவ்வொரு படியாக ஏறினர். இம்மாபெரும் விழாக்கோலத்தைக் கண்டு மக்கள் அனைவரும் ஆனந்த மேலீட்டால் பகவான் பாஸ்வநாதருக்கு ஜே! என ஜெய கோஷங்கள் செய்துகொண்டு நற்காட்சி நோன்பினரோடு கலந்துசென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகப் பாணமித்தது.

பகவான் பாஸ்வநாதர் கோயில் கொண்டுள்ள இயற்கைக் குகைப்பள்ளி (அக்கிருத்திம சைத்தியாலயம்) சென்று பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர். பகவான் பாஸ்வநாதருக்கும், பகவான் சந்திரநாத தீர்த்தங்கரருக்கும், பகவான் விருஷபதேவருக்கும் அபிஷேகங்கள் செய்து வணங்கி வாழ்த்தினர். இவ்வாறு பல்வேறு சிறப்புப் பூஜைகள் செய்து பகவானை வழிபட்டு நற்காட்சி நோன்பினர் தங்கள் நிறைவு விழாவைச் சிறப்பாக நடத்தி மகிழ்ந்தனர்.

இப்புனித விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் சென்னை உயர்திரு. G. சாமிநாத ஜெயின் அவர்கள் நல்விருந்து அளித்து மகிழ்வித்தார்.

காஞ்சீபுரம் உயர்திரு. சுயங்கர நயினார் அவர்கள் எலுமிச்சம்பழம் சாதம், தயிர்சாதம் கொண்ட பொட்டலங்களை பலருக்கும் வழங்கி அரிய விருந்தளித்தார். இவ்வாறு விழா இனிது முடிந்தது.

எல்லா மக்களும், நற்காட்சி நோன்பினரும் அன்று மாலை அவரவர்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.
 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com