முகப்பு வாயில்

 


சீவகசிந்தாமணியும் நச்சினார்க்கினியரும்:

செந்தமிழுக்கு மணிமகுடம் புனைந்தாற்போன்று விளங்கும்; சீவகசிந்தாமணிக்கு முதன் முதல் உரை எழுதியவர் உச்சி மேற்புலவர் நச்சினார்க்கினியரே ஆவார். இவர் பழைய உரையாசிரியர்களில் ஒருவர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலியவற்றிற்கு உரை எழுதி புகழ் பெற்றவர். இலக்கணம், இலக்கியம் ஆகிய இரு துறையிலும் வல்லவர்.

"தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்
தானே யாகிய தன்மை யாளன்"

எனவரும் உரைச் சிறப்புப் பாயிரத் தொடர்களால் நச்சினார்க்கினயர் சைவ சமயத்தவர் என்பது தெளிவாகிறது. வைதீக பிரமாண குலத்தவர் என்று தக்ஷணகலாநீதி உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் பல சான்றுகளுடன் மெய்பித்துள்ளார். இவர் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இறுதி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இக்கால நிலையை வைத்து ஆராயின் உமாபதி சிவாச்சாரியான் காலத்தவராகவோ அல்லது இருபது முப்பது ஆண்டுகள் பிற்பட்டவராகவோ இருந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் சிவாச்சாரியான் கற்பனை நூலுக்குப் பிற்பட்டவர் என ஐயமறக் கூறலாம்.

நச்சினார்க்கினயர் சேக்கிழாரின் திருத்தொண்டர்புராணத்தையும், சிவாச்சாரியான் தொண்டர் புராண வரலாறு என்னும் பொய் மலிந்த சதி நூலையும் படித்திருப்பார் என்பதில் ஐயங்கொள்ள வேண்டுவதில்லை. இவ்விரண்டு நூல்களையும் படித்தறிந்த பெரும் புலவர் நச்சினார்க்கினியர் திருத்தொண்ட புராணத்திற்கு உரை எழுதாமலும், சிவாச்சாரியான் பொறாமயில் பிறந்த தொண்டர் புராண வரலாறு என்னும் நூலை மதியாமலும், சீவக சிந்தாமணிக்கு உரை எழுதினார். வைதிக பிராமணராய் இருந்தும், சைவ சமயத்தைச் சார்ந்தவராயிருந்தும், அவர் உரை எழுத ஜைன சமய் நூலாகிய சீவக சிந்தாமணியைத் தேர்ந்தெடுத்தாரெனில் அப்பெருந்தகையின் இலக்கிய மதிப்பும், நடுவு நிலைமையும் பாராட்டுதற்குரியதாகும். இதன்றோ அறிவால் நிறைந்த அறமாண்புடையோரியல்பு. நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணிக்கு உரை எழுத ஆரம்பித்த அன்றே உமாபதி சிவாச்சாரியான் சூழ்ச்சி வீழ்ச்சியடைந்ததற்கறிகுறியாகும்.


நச்சினார்க்கினியாரின் இலக்கிய நாட்டம் :

நச்சினார்க்கினியர் பேரகத்தியமும், தொல்காப்பியமும் நன்கு பயின்ற பேரறிஞர். அப்பயிற்சியின் ஆற்றலாலேயே தொல்காப்பியத்திற்கும் சில சங்க நூல்களுக்கும் உரை எழுதி புகழ் பெற்றார். தொல்காப்பியத்திற்கும் உரை எழுதிய சான்றே தம் உரையில் சீவகசிந்தாமணியை மேற்கோள் காட்டியுள்ளார். அந்நாளிலேயே சீவக சிந்தாமணியின் தனிச் சிறப்பை அறிந்து இப் பெருங் காப்பியத்திற்கும் உரை எழுத வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருக்கும். மேலும் நச்சினார்கினியருக்குச் சில ஆண்டுகள் முற்பட்ட சைவ சமயப் பெருந்தகை சிவப்பிரகாச சுவாமிகள் சீவகசிந்தாமணியை நன்கு துய்த்து அறிந்தவர். அம்பெருந்தகை இயற்றிய திருவெங்கைக் கோவை என்னும் நூலில்.

"சிந்தாமணியும் திருக்கோவையும் எழுதிக்கொளினும்
நந்தாவுரையை எழுதல் எவ்வாறு நவின்றருளே"

எனப் புகழ்ந்திருப்பதினின்றும் அக்காவியக் கடலுக்கு உரை எழுதுதல் கடினம் எனப் புலப்படுவதோடு அச்சான்றோர் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவராயிருந்தும், தம் கோவை நூலில் சிந்தாமணியை முதற்கண் வைத்துத் தம் சமய நூலாகிய திருக்கோவையைப் பின்னே வைத்துப் பாடியுள்ள நேர்மையினின்றும் சீவகசிந்தாமணியின் பெருமை நன்கு புலனாகிறது.

மற்றொரு புலவர் தம்மைக்குறிப்பால் இகழ்ந்துரைத்துக் கொண்ட ஒரு பழைய செய்யுளும் நச்சினார்க்கினியான் உணர்ச்சியைத் தூண்டியது எனில் மிகயன்று. அந்தப் புலவர் இலக்கியத்தில் இன்பங்கண்டவர் தமிழ்க் காப்பியங்களே ஆவலுடன் வாசித்தவர் அவருக்கு உலகமே வெறுத்து விட்டது. உலக வாழ்க்கையில் இன்பங் காணும் முயற்சியை விரும்பவில்லை. எந்தப் பொருள் எப்படிப் போனால் என்ன? சூரியன் எங்கே உதயமானால் என்ன? என்று பேசி இலக்கியத்தில் இன்பங் கண்ட அவர் அதுகூட வேண்டா மென்கிறார் எனினும் அது உடன்பாட்டையே குறிக்கும். அப்பாடலை கேளுங்கள்.

"திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர்
விருத்தக் கவித்திறமும் வேண்டே-முருத்தக்க
கொங்குவேண் மாக்கதையைக் கூறேக் குறளணுகே
மெங்கெழிலென் ஞாயி றெமக்கு"

என்பது அந்த இலக்கிய மேதையின் கூற்று. ஏதோ மனம் நைந்து இவ்வாறு கூறினாலும் அவர் தமிழ் நூல்களில் எத்துணை ஆர்வம் கொண்டுள்ளாரென்பது புலனாகிறது. சூரியன் எங்கே உதயமானாலென்ன என்று பேசும் அப் புலவான் உள்ளத்தைக் கொள்ளைக்கொண்ட நூல்களின் திருத்தக்கதேவர் அருளிய சிந்தாமணியே முதலில் நிற்கிறது.

இவ்வாறெல்லாம் இலக்கிய வரலாற்றில் சீவகசிந்தாமணி நீங்காப்புகழ்பெற்று விளங்குவதையும், சிவப்பிரகாசசுவாமிகள் வரை சீவக சிந்தாமணிக்கு யாரும் உரை எழுதவில்லை என்பதையும் தெளிவாக அறிகின்றோம். உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் சிவப்பிரகாச சுவாமிகளின் கோவையையும் அறிந்திருப்பார். சுவாமிகளின் உள்ளத்தே உதித்த குறைபாட்டை அதாவது சீவகசிந்தாமணிக்கு யாரும் உரை எழுதுதல் கடினம் என்ற கருத்துடன் எவ்வாறேனும் உரை வரவேண்டும் என்ற உணர்வையும், ஆர்வத்தையும் தாமே நிறைவு செய்து வைக்கவேண்டும் என நாச்சினார்க்கினியர் எண்ணியும் இருக்கலாம் இவைகளுக்கெலாம் மேலாக தம் அறிவாற்றலின் நிலைக்கு செய்த தவப்பயனே என மகிழ்ந்து உரை எழுத ஆர்வம்கொண்டிருக்கலாம். இவ்வாறு அறிவார்ந்த புலவர்கள் இலக்கிய உலகில் புகழீட்டும் நூல்களை தேர்ந்தெடுப்பது இயற்கையே.

"புலமிக்கவரை புலமை தொதல்
புலமிக்கவர்க்கே புலனாம்"

என்பது பழமொழியன்றோ! அப்பெரு நிலையிலேயே நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதிப் புகழ் பெற்றுயுர்ந்தார் என்பதே சால்புடைத்து.

நச்சினார்க்கினியர் கணித்த சீவக சிந்தாமணி காலம் :

அமர காவியமாகிய சீவக சிந்தாமணி தோன்றிய காலத்தை நச்சினார்கினியர் சிந்தாமணியின் கடவுள் வாழ்த்து உரையிலேயே கணித்துக் காட்டியுள்ளார். அது வருமாறு:

"இத்தொடர் நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் ஆதலானும் "முந்து நூல்கண்டு முறைப்படவெண்ணி" (தொல் - சிறப்பு) என்றதனால் அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பியமாதலானும், பிறர் கூறிய நூல்களை நிரம்பிய இலக்கணத்தன அன்மையாலும், அந்நூலிற் கூறிய விலக்கணமே இதற்கு இலக்கண மென்றுணர்க" என அறுதியிட்டு சிந்தாமணி தோன்றிய காலம் மிகப் பழமையானது எனக் குறிப்பாக விள்க்கியுள்ளார். இவ் விளக்கம் சீவக சிந்தாமணியின் இலக்கணச் செறிவினின்றும் நாட்டிய அகச் சான்றாகும். அதனாற்றான் சிந்தாமணியைப் பதிபித்த டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் சிந்தாமணியின் காலம் மிகப் பழமையானது என தெளிவாகிறது." என அவ்வுரையின் அடியொட்டி எழுதியுள்ளார்.

சீவக சிந்தாமணியின் கால வரலாற்றை நேர்மையின் வழிநின்று ஆராய்ந்து உண்மை கண்ட வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய 'Beginning of South Indian History' என்ற ஆங்கில ஆராய்ச்சி நூலில், சிலப்பதிகாரம் தோன்றிய காலத்திற்குப் பின் சுமார் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்குள்ளாகவே சீவக சிந்தாமணி தோன்றிவிட்டது. என வரையறுத்துக் காட்டியுள்ளார். இப் பெருந்தகையின் காலக்கணிப்பு நச்சினார்க்கினியர் கொள்கைக்கு அரண் செய்வது போன்று உறுதிப் படுகின்றது.

இவ்வாறு இருபேரறிஞர்கள் சீவகசிந்தாமணி தோன்றிய காலத்தை அகச்சான்று புறச்சான்றுகளுடன் அறுதியிட்டுக் கூறியிருந்தும் இக்காலத்துப் புலவர்கள் சிலர் சீவக சிந்தாமணியின் காலம் கி.பி. 10 நூற்றாண்டென எத்தகு ஆதாரமுமின்றி வலிந்து எழுதியுள்ளனர். இவர்கள் குறிக்கோளை நன்கறிந்த நடுநிலைமைத் தவறாத பெரும் புலவர்கள் பலர் அப்பர் தேவாரத்திலுள்ள.

"எரிபெருக்குவர் அவ்வொ ஈசன
துருவருக்கு மதாவ துணர்விலார்
அரியற்கா யானைய யர்ந்துப்போய்
நாவிருத்தம தாகுவர் நாடரே"

என்ற பாடலைச் சுட்டிக்காட்டி, நாவிருத்தம் இயற்றிய திருத்தக்கதேவர், இவர் தேவாரக் காலத்திற்கு முற்பட்டவர். என்பது தெளிவாகிறது என்றும், இத் தேவார காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுடையதாகையால் சீவக சிந்தாமணியின் காலம் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டுடையதாக இருக்க வேண்டுமென தக்க ஆதாரங்களுடன் மெய்ப்பித்துள்ளனர். மேலும் சில சிந்தனைச் செல்வர்கள் சீவக சிந்தாமணியில் விளங்கும் தெய்வங்களைத் தேடினர். அங்கே சிவபெருமானைக் கண்டனர். உமாதேவியும், கங்கையும் காட்சி அளித்தனர் பாற்கடலிலே திருமால் விளங்கினார் நப்பின்னையைக் கண்டனர். கண்ணன், இராமர், நாள்முகன், முருகன், வள்ளி, இந்திரன் மன்மதன் போன்ற பல தெய்வங்கள் தங்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றோடு காட்சி அளித்தனர். சைவ வைணவ சமயக் கடவுள்கள் அனைத்தையும் தேவர் பெருந்தகை தம் காவியப் பூங்காவில் உலவ விட்டவர் ஒரு வரை மட்டும் மறந்து விட்டாரே எனத் திகைத்தனர்.

திருத்தக்க தேவர் சமய சார்பற்ற அறநெறிச் செல்வரன்றோ! சிந்தாமணியை எழுத்தெண்ணிப் படித்த நம்முடைய கண்களில் புலப்படாமல் போயிற்றோ என ஐயங்கொண்டு தங்கள் நினைவாற்றலால் சிந்தாமணிக் காவியப் பூங்கா முழுவதும் ஊடுருவிப் பார்த்தனர். எங்கும் தங்கள் எண்ணத்தில் உதித்தக் கடவுளைக் காணோம். இவர்கள் ஐயம் தொல்காப்பியத்தை நாடிச்சென்றது. சங்கள நூல்களனைத்திலும் தேடினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சூளாமணி, பெருங்கதை முதலிய அரும்பெருங் காவியங்களிலெல்லாம் அலைந்தும் காணப்படவில்லை திடீரெனத் தேவாரங்களைப் புரட்டினர். அந்நூல்களில்தான் யானைமுகக் கடவுள் அமர்ந்திருக்கக் கண்டனர். உண்மை புலப்பட்டது. இத்தெய்வம் தமிழகத்திற்குப் புதிது போலும், அதனாற்றான் சீவக சிந்தாமணியில் விநாயகர் இடம்பெறவில்லை என்ற உண்மையைக் கண்டனர். விநாயகர் தேவாரக் காலத்தே தமிழகத்தில் குடியேறிய புதிய தெய்வம் என்ற வரலாற்றை கணித்துக் கொண்டனர். சீவக சிந்தாமணியின் காலம் மாசற்ற கண்ணாடி போன்று பளிச்சிட்டது. தமிழகத்தில் புதிதாகப் புகுந்து வினாயகர் காலத்திற்கு முற்பட்டது சிந்தாமணி எனத் தெள்ளத் தெளிவாக அறிந்து மகிழ்ச்சியிலாழ்ந்தனர் இச்சீரிய சிந்தனைச் சிற்பிகள்.

சீவக சிந்தாமணியின் காலத்தைப் பற்றிக்கூறும் பலர் கொள்கைகளோடு தங்கள் சொந்த சிந்தனையைக் கொண்டு ஆய்ந்து கண்ட இப்புலவர்கள் சீவக சிந்தாமணியின் காலம் நச்சினார்க்கினியர் கணித்தது போன்று சிலப்பதிக்கார காலத்தையொட்டி சில ஆண்டுகள் பிற்பட்டதே எனத் துணிந்தனர். எவ்வாறாயினும் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்ததே எனப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று சிந்தாமணியின் தொன்மையை விளக்கும் அரிய வரலாற்றுச் சிறப்பையுங் காண்போம். சீவக சிந்தாமணியாகத் தீந்தமிழ்க் காவியத்தைப் படித்துப் படித்து இன்புற்றுப் பல்வேறு கலையறிவு பெற்று பலப் பலக் கருத்துக்களை நுகர்ந்து பொருளழகையும் சொல்லழகையும் பருகி மகிழ்ந்த புலவர் பெருமக்கள் தமிழகத்திலுள்ளப் பலகிராம நகரங்களுக்கு சிந்தாமணி எனப் பெயர்சூட்டி நினைவுச் சின்னமாகக் அமைத்துள்ளனர். திருச்சி, மதுரை, தென்னாற்காடு, வடஆற்காடு, திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் சிந்தாமணி என்றும் ஜின சிந்தாமணி என்றும் பெயர்கள் வழங்கி வருவதை இன்றும் காணலாம்.

மக்கள் காவியமாக விளங்கி மக்களின் அறிவுக்கண் திறந்து மக்களை அறநெறியில் செலுத்தி தமிழக நாகாக பண்பை தரைஎலாம் அறியச் செய்துள்ள சீவகசிந்தாமணியின் கால வரலாற்றை உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியர் குறிப்பாக காட்டியுள்ள காலத்தையும், டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் கணித்துள்ள வரலாற்றையும் 'எரிபெருக்குவர்' என்ற அப்பர் தேவாரப் பாடலைக் கொண்டு உறுதிப்படுத்தியுள்ள அகச்சான்றையும், தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய வினாயகர் காலத்தை கொண்டு தெளிவாக்கிய உண்மையும் தமிழகத்தில் பலபாகங்களில் சிந்தாமணியின் பெயரால் அமைந்துள்ள பல கிராம நகரங்களின் வரலாற்றும் சான்றுகளையும் கருத்திற்கொள்ளாமல், சில புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தாங்கள் மேற்கொண்டுள்ள சமய நூல்களுக்குப் பிற்பட்டதாகக் காட்டவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சிக் கொண்டு சீவகசிந்தாமணியின் காலத்தை கி.பி. பத்தாம் நூற்றாண்டையதென திரித்துக்கூறி திசை மாற்றிவருக்கின்றனர். இவர்கள் வீசியுள்ள காழ்ப்பு வலையில் விழாமல் தமிழ் மொழியின் சிறைப்பையும் தொண்மையையும் பரப்ப முயலும் புலவர்களோ, ஆராய்ச்சி நூல் எழுதுபவர்களோ, தங்கள் சொந்த சிந்தனைக்கு இடமளித்து எவருக்கும் அஞ்சாமல் உண்மையைக் கடைபிடிக்குமாறு வேண்டுகிறேன். "பொய்மை விரைவில் பரவும். அதேபோன்று நீண்ட நாட்கள் நிலைக்காமல் தளர்ந்து அழிந்துவிடும். உண்மையோ மெல்ல மெல்ல உடன் முறையாகப் பரவி நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்" என்ற மேல்நாட்டு அறிஞர்கள் அறிவுரையை இந்நற்சமயத்தில் ஆய்வுரை எழுதும் அறிஞர்களுக்கும் புலவர்களுக்கும் நினைவுறுத்துகிறேன். இனியேனும் சீவக சிந்தாமணியின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்ற உண்மையை உறுதியுடன் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
 

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com