முகப்பு வாயில்

 


கொல்லாமை எனில் எவ்வுயிரிடத்தில் அன்பு பூண்டு அவைகளுக்கு ஊறுநேராவண்ணம் வாழ்தல், தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடுதல். இக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாத சான்றோர்கள் எந்த சமயத்திலும் இல்லை. ஆகவே அஹிம்ஸை அல்லது கொல்லாமை பொது நெறியாகும். இப்புனித அறத்தை ஒரு சமய சார்புடையதாக எவரும் கருதவியலாது. இன்று அனைத்துலகும் ஏற்றுக்கொண்டுள்ள நிலைமை காண்கிறோம்.

இவ்வாறே பொய்யாமை - கள்ளாமை, பிறர்மனை நயவாமை ஆகிய அறநெறிகளை மறுப்பாறுண்டோ, மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும் - அமைதியான வாழ்க்கைக்கும் இன்றியமையாதவை என உலகமே ஒப்புக்கொள்ளும் அரியகொள்கைகள்.

மிகுபொருள் விரும்பாமை என்னும் இக்கொள்கை மனிதகுலம் அனைத்திற்கும் இன்றியமையாதது. பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்வது மனிதனை மனிதன் சுரண்டாமல் பாதுகாக்கும் அரண். மக்கள் பலரும் அமைதியாகவும் இன்பமாகவும் வாழவழிகோலும் அறநெறி தேவைக்கு மேலான பொருளைப் பதுக்கும் சமூகத் துரோகச் செயலை மாய்ப்பது பகுத்துண்டு வாழும் பண்பை வளர்ப்பது இன்றைய உலகம் ஏற்றுக் கொண்டுள்ள சோஷலிசம் அல்லது பொதுவுடமைக் கொள்கை! இது மதமா? இப்பேரறத்தை மதம் என்று ஒதுக்குபவர்கள் மக்கள் வாழ்க்கை நலத்தின் மாபெரும் பகைவர் ஆவர்.

கள் குடியாமையை - அறிவுடைய எவரும் ஏற்றுக்கொள்வார்கள். கள் குடியால் வரும் கேட்டைப் பலரும் அறிவர். எனவே கள் குடியை எவரும் ஆதாக்கமாட்டார் களாகையால் கள்ளருந்தாமை பொது நெறியே ஆகும்.

ஊனுண்ணாமை, கொல்லாமையை அல்லது உயிர்களிடத்தில் அன்பாயிருங்கள் எனக் கூறும் எந்தசமயத்தாரும் ஊனுண்ணலுக்கு உடன்பட மாட்டார்கள். இதனையும் ஒரு சமய சார்புடையதாக தள்ளிவிட முடியாது.

தேனுண்ணாமை-தேனீக்கள் சேகாத்து வைத்துள்ள தேனை எடுக்கும் முறை தேனீக்கள் உயிர்களை அழிக்கும் முறையில் அமைந்துள்ளதால் தேனருந்துதல் பாவச்செயலாகக்கூறப்பட்டுள்ளது. அருள் உள்ளம் படைத்த எவரும் இதை ஏற்றுக்கொள்வர்.

இரவுண்ணாமை-இக்கொள்கையும் மக்களுக்கு இன்றியமையாத சுகாதர விதி இந்திய வைத்திய நூல்கள் பலவும் இக்கொள்கையை வற்புறுத்துகின்றன. தற்கால டாக்டர்களும் இரவில் உணவு உண்பதை ஆதாக்கவில்லை. உண்ணும் உணவு சொப்பதற்கு 3 மணி நேரம் தேவை என்றும் ஆதலால் இரவில் உறங்கப் போகும் சமயத்தில் உணவு உண்ணல் சுகாதாரக்கேடென்றும் கூறிவருவதைக் காண்கிறோம். மேலும் கதிரவன் மறைந்ததும் எபிமிரா என்னும் கண்ணுக்கும் புலனாகாத விஷக்கிருமிகள் உற்பத்தியாகின்றனவென்றும்-விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவைகளை எல்லாம் என்றோ அறிந்த ஜைன அறவோர்கள் இரவுண்ணலைப் புகழவில்லை. இக் கொள்கையை இந்து மதத்திலும் கூறப்பட்டுள்ளது.

"அஸ்தங்கதே திவானாஸ்தே ஆபூருதிர முச்யதே
அன்ன மாம்ஸம் சமம்ப்ரோக்தம் மார்கண்டேய ரிஷிபாஷிதம்"

என மார்க்கண்டேய ரிஷியாலும் இரவுண்ணல் கடியப் பெற்றுள்ளது. இவ் உண்மைகளை ஆய்ந்தால் இரவுண்ணாமையும் பொது நெறியேயாகும்.

குரவரை இகழாமை-இக்கொள்கையை எவரும் ஏற்றுக்கொள்வர்.

இல்லறத்தார் அறங்களாக ஜைன அறவோர்கள் வகுத்தருளிய கொள்கைகள், உலக மக்களின் நலத்திற்குரியவையேயன்றி ஜைன சமயத்தாருக்கு மட்டுமல்ல என்பது தெளிவு.

இப்பேருண்மையை நன்கு உணர்ந்தவர் தமிழகத்தில் ஒருவர் உண்டென்றால் என் வணக்கத்திற்கும் மதிப்புக்கும் உரிய பொயார் காலஞ்சென்ற திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் அவர்களே. அப்பொயாரின் தமிழ்ப் புலமையும் தமிழ்தொண்டும் இத்தமிழகம் நன்கு அறியும். தமிழ்தென்றல் எனத் தமிழ் மக்களால் போற்றிப்புகழும் திரு.வி.க அவர்கள் தாம் அறிந்த உண்மையை உரைகளால் கூறிவந்ததோடு எழுத்திலும் வடித்துக் காட்டியுள்ளார். அப்பெருமகனார் இயற்றிய பொருளும் அருளும் என்ற புகழ் பொதிந்த நூலில் ஜைன அறவோர்களின் இல்லற நெறிகளைத் தாம் ஆழ்ந்த கண்ட உண்மையை உடன்பாட்டு உணர்வோடு பின்வருமாறு பாடியுள்ளார்.


ஜைனம் எது?

"அந்நெறி எதுவோ? செந்தண் ஜைனம்
ஜைனம் ஒரு மதச் சார்பின தன்று
ஜைனம் எதுவெனச் சாற்றுவன் இங்கே
ஐம்புலன் வெல்லும் செம்மை ஜைனம்
ஒழுக்கம் காக்கும் விழுப்பம் ஜைனம்
கொலைகள வொழிக்கும் நிலைபெறல் ஜைனம்
கள்பொய் காமம் தள்ளல் ஜைனம்
ஊனுண்ணாத மேனிலை ஜைனம்
வெறிஆவேசம் முறியிடம் ஜைனம்
சாந்த அமுதம் மாந்தல் ஜைனம்
நல்லெண்ணம் நன்மொழி நற்பணி ஜைனம்
பிறர்க்கென வாழும் திறத்துறை ஜைனம்
தேவை அளவை மேவல் ஜைனம்
அகிம்சா தர்மம் அனைத்தும் ஜைனம்
இந்த ஜைனம் எந்த மதமோ?
மக்கட்குரிய தக்க பொதுமை"

இப்பெருந்தகையார் போன்று தமிழகப் புலவர் பெருமக்கள் ஜைன அறவோர்கள் உலகுக்கு வழங்கிய அறநெறி நூல்களை ஆழ்ந்து படித்து உண்மை காணுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு உண்மை காணாது சிலர் தாங்கள் மேற்கொண்டுள்ள சமயக்கண்கொண்டு ஜைன அறவோர்களின் நூல்களைப் படித்துவிட்டு அவைகளை ஒரு சமய நூல்கள் என எழுதியும் பேசியும் வருவது வருந்தத்தக்கது. இதனால் அவை மக்கள் வாழ்க்கைப்பண்பு நூல்கள் என்ற பேருண்மை மறைந்து மயக்கத்தை அளிக்கும். அதுமட்டுமல்ல! தமிழ் மொழியில் உலகப் பொதுநூல்கள் பல இருக்கின்றன. என்ற பெருமையும் அனைத்தும் அறநெறிகளைக் கொண்ட பொது நூல்களேயன்றி சமய நூல்கள் அல்ல என்பதை உலகுக்கு உணரச் செய்வது புலவர்கள் கடமையாகும்.


துறவறம்:

இல்லறம் உலகியலுக்கு எவ்வளவு இன்றியமையாததோ அவ்வாறே துறவறம் ஆன்மீக வளர்ச்சிக்கும் வீடுபேற்றிருக்கும் இன்றியமையாதது. மானிடப் பிறவியை அருமையில் பெற்ற ஒவ்வொருவரும் இனிப் பிறவா நிலையாகிய வீடுபேற்றையே குறிக்கோளாகக் கொண்டு இல்லற இன்பத்தைத் துய்த்துத் துறவு பூண்டு தவமியற்றி வினைகளை வென்றாலன்றி வீடுபேறடைதல் இயலாதென்பது ஜைன அறவோர் கண்ட உண்மை. எனவே இவ் அறிவியல் தத்துவக் கொள்கைப்படி மக்கள் பலரும் துறவறமேற்று வீடுபேறடைய முயற்சியெடுக்கக் கடப்பாடுடையவர்கள் ஆவர்.

இல்லற நெறிகளை முன்னரே கண்டோம். துறவறநெறிகளைத் திருக்குறளில் காணும் துறவு தவம் என்ற இரு அதிகாரங்களின் வாயிலாக அறியலாம். சுருக்கமாக விளங்குவதாயின் நாம் முன்னர் கண்ட இல்லற நெறிகளாகிய பத்து அறங்களோடு பொருளாசையை அறவே நீக்கி உலக வாழ்க்கையைத் துறந்து ஐம்புலனடக்கத்தோடு, பற்றற்றுத் தவம்புரிவதாகும். இவ்விரு நல்லறங்களையும் முறையே அணுவிரதமென்றும் மகாவிரதமென்றும் அழைக்கப்பெற்றன.

இவ்விரு அறநெறிகளும் மக்கள் சமுதாய இன்ப வாழ்வுக்கும், நன்மை இது, தீமை இது, என உணர்ந்து செயல்படவும், மனப்பூர்வமாக அனைத்துயிர்களையும் தன்னுயிர்போல்கருதி அவைகள்பால் அன்பு பூண்டு வாழவும். பிறவி இன்பத் துன்பங்களில் பங்குகொண்டு உடன்பிறந்தார் போன்று மக்களனைவரும் அமைதியாக வாழ்ந்து வளரவும் வழி செய்கிறது.


காளை சின்னம்:

இம் மகத்தான அறநெறிகளுக்குப் பகவான் விருஷபதேவர் காளையை சின்னமாகப் படைத்தார். இப்படைப்பால் அறம் எனில் எருது, எருது எனில் அறம் என்பதாகும். இச்சின்னத்தை மக்கள் வரவேற்றுப் போற்றினர். பகவான் விருஷபதேவான் உள்ளக் கிடக்கையைக் கண்டு உவந்தனர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுநெறி வகுத்த அப்பெருந்தகை அந்நெறிகளுக்கு அறம் என்ற பொதுப் பெயரையே அளித்ததும், அவ் அறத்திற்கு எருதைச் சின்னமாகப் படைத்ததும் அவர்தம் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என வியந்து அப்பெருமகனை உலகக் குருவாகப் போற்றினர். அறத்தின் சின்னமாகிய எருதை நந்தியென அழைத்து அறத்தை வழிபடலாயினர்.

பின்னர் பகவான் விருஷபதேவர் கைலாசகிரியில் வீடு பேறடைந்தும் அப் பெருமகனைக் கடவுள் என்றும் உலகக் குருவென்றும், கைலாசநாதர் என்றும், அருள் நந்திதேவர் போற்றி வணங்கினர். அதுமட்டுமின்றி அக்கால அறவோர்களும் கற்றிந்தோர்களும், பொதுமக்களும். பகவான் விருஷபதேவர் திருவுருவைச் சமைத்து அப்பெருமகன் திருவடிப் பீடத்தில் எருதுச் சின்னத்தையும் பொறித்துப் பகவானையும் அறத்தையும் ஒருங்கே போற்றி வழிபாடியற்றி போற்றி வந்தனர். அன்றமுதலே பகவானும் அவர் வகுத்தருளிய அறமும் உலகெங்குமுள்ள பகவான் விருஷப தேவர் திருமேனிச் சிலையில் காட்சியளிக்கின்றன. இதன் உட்கருத்து பகவானின் திருவடிகளைப் போற்றுமுகத்தான் அறத்தின்பால் சிந்தை கொள்ளவேண்டும் என்பதை உணர்த்துவதேயாகும். இவ்வெருதுச் சின்னத்தைப்பகவான் விருஷபதேவர் ஆலயங்களின் மதிற் சுவர்களிலும் அமைத்து அறத்தை நினைவுறுத்தினர்.

இனி இவ்வரலாற்றுச் சிறப்புகளை தமிழ் இலக்கியங்களினின்றும் காண்போம், தலைசிறந்த தமிழ்க் காவியமாகிய சீவக சிந்தாமணியில்,

"மணியினுக் கொளி அகமலர்க்கு மல்கிய
அணியாமை யங்குளிர் வாசம் அல்லாதூஉம்
திணியயில் ஏற்றினுக் கொதுக்கஞ் செல்வதின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே."

எனப்பகவான் விருஷபதேவரைப் போற்றுகையில், அப்பெருமகன் இணையடிகள், ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் உயிர்களுக்கு ஒளியையும், அவ்வுயிர்களின் உள்ளங்களுக்கு அழகமைந்த கருணை என்னும் மணத்தையும், அதுவுமன்றி அங்கே எக்காலும்; அறம் (திணியிமிலேறு) தங்கி உறைவதற்குரிய நிலையையும் அளித்தன எனும் அரிய கருத்தினின்றும் அறம் எனில் எருது என்பது தெளிவாகிறது.

அறத்தின் சின்னமாகிய காளையைப் பகவான் விருஷப தேவர் திருவுருவச் சிலையின் பீடத்திலும், அப்பகவான் காட்சியளிக்கும் கோயில் மதில்களிலும், கோயிலின் முன்பும்அமைத்துப் போற்றியது போன்றே, காளையைப் பொறித்தக் கொடியையே அறநெறிக்குரிய கொடியாக அமைத்துப் பரவச் செய்துள்ளார்கள். இவ்வுண்மைக் காட்சியை ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் அரிய நூலில்,

"படித்தார் பாடிப்புக ழோதும்
பரமாகத்தின் வழியெல்லாந்
தொடுத்தார் அமருல கெய்தச்
சொல்லும் பொருளின் தனியேற்றின்
கொடித்தானுடைய பெருமானே
குளிர்மாமதி முக்குடையோய்நீ
அடித்தாமைரையின் முத்துரைப்ப
அடியோஞ்சிற்றி லழியோமே."

எனக் கொடியின் மாண்பினைக் காணவைத்துள்ளார்
நீலகேசியில்,

"அந்தணரும் அல்லவரும் ஆகியுடனாய
மந்தமறு நால்வருண மாட்சியினராகித்
தந்தநெறியில் திரிதல் தானுயிலராகி
நந்திமிசை சேறலுடை நன்மையத நாடே"

என வலியுறுத்தியுள்ளார். அரசர், அந்தணர், வணிகர் வேளாளர் ஆகிய நான்கு வருணத்தாரும் அவரவர்களுக்குரிய தொழிலில் பிறழாது: செயல்படுவதோடு நந்திமிசை அதாவது அறத்தின் பால் செறிவுடையராகவும் விளங்கிய நன்மைபொருந்திய நாடு என்றார். இவ்வாய பாடலின் கருத்தால் அறம் அனைவர்க்கும் பொதுவுடமைய தென்பதைத் தொந்துகொள்ளலாம்.

மேலும் சூளாமணி ஆசிரியர் தோலா மொழித் தேவர் அருகர் கோயிலை அறம் செறிந்த கோயில் எனப் போற்றும்முகத்தான் நந்தி முகம் என வருணித்துள்ள வரலாற்றையும் காண்போம்.

"நடைமாலை நடந்தது நந்திமுகம்
புடைமாலை புகுந்தனர் புண்ணியநீர்
இடைமாலை நிகழ்ந்தோ வேத்தரவம்
கடைமாலை நிகழ்த்து காப்பணியே"

எனும் இவ் அரிய பாடல் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு நல்விருந்தாகும்


நந்தியோடிணைந்த திருப்பெயர்கள்:

இலக்கியங்களில் கண்ட நந்தியைக் கல்வெட்டுச்செய்திகளிலே கண்டு மகிழ்வோம். கடந்த கட்டுரையில் குறித்துள்ள முனிவர்களின் பெயர்களில் வஜ்ரநந்தி, கனகநந்தி, பவணந்தி, தருமநந்தி, அச்சணந்தி, வீரநந்தி எனப்பல முனிவர்கள் வாயிலாக அறிந்தோம். நந்தி எனில் அறம் என்பதைக் கொண்டே அமைகிறது. இவ் அகச்சான்றை மெய்ப்பிக்கும் வகையில் பண்டைய காலத்திலிருந்தே நந்தி சங்கங்கள் பல தோன்றி இலக்கிய பணிகள் புரிந்து தமிழ்மொழியை வளர்த்து வந்துள்ளன. இவைகளுக்கெல்லாம் மேலாக நந்தியம்பாக்கம், நந்திமங்களம், நந்திபுரம், நந்தீஸ்வரம், நந்திமலை போன்ற பெயர்களைத்தாங்கிய பல கிராமங்களும், மலைகளும் இன்றும் காட்சி யளிக்கின்றன. இவ்வாறே ஜைனமடங்கள் பல நந்திதேவர் பெயரால் விளங்கிவந்துள்ளன.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com