முகப்பு வாயில்

 


பகவான் விருஷபதேவர் வகுத்தருளிய அறநெறிகளினின்றே மற்ற சமயங்கள் தங்கள் கொள்கைகளோடு சிலவற்றைப் புகுத்திக் கொண்டார்கள் என்ற உண்மையை மேலே பல அறிஞர்கள் கூறியுள்ளத்தைக் கண்டோம்.

அறம் என்ற பெயரால் அமைந்த நற் கொள்கைகளை சமய வாதிகள், தங்கள் தங்கள் சமயக் கொள்கைகளோடு பொருத்திக்கொண்டாலும் அப்புனித நெறிகள் அங்கே முழுபொலிவு பெறவில்லை. சொல்லளவில்தான் அங்கு உள்ளனவேயன்றி கொள்கை அளவில் நிலைகுலைந்தே நிற்கின்றன.

அறநெறிகளில் சிலவற்றை அமைத்துக் கொண்டது போலவே ஜைன அறவோர்கள் சூட்டியுள்ள அருகன் திருநாமங்களில் சிலவற்றைத் தங்கள் தங்கள் கடவுள்களுக்குப் பொருத்தியுள்ளார்கள். பொருத்தமில்லாவிடினும் சூட்டிக் கொண்டார்கள். இவ்வரலாற்றுச் செயலை 1500 ஆண்டுகட்கு முற்பட்ட நீலகேசி ஆசிரியர் நன்கு காட்டியுள்ளார்கள். அவைகளைக் காண்போம்.

"பூர்ப்பப் பயந்தான் புகன்ற சுதக்கடலுள்
சார்த்திப் பிறவாத்தவ நெறிகள் தாமுனவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிகள் தம்மேபோல்
தீர்த்தன் திருநாமங் கொள்ளாதே தேவுளவோ"

விளக்கம்: "பூர்வாகமத்தைத் (முதல் நூல்) திருவாய் மலர்ந்தருளிய அருகக் கடவுள் கூறிய கடல் போன்ற விரிந்த ஆகமங்களிலே உள்ள நல்லொழுக்கங்களைத் தழுவி தோன்றாத பிற சமயத்தார் உண்டோ? அதுபோன்று எம் அருகனுடைய அழகிய பொருத்தமுடைய பெயரைத் தம்முடையவனாக மேற்கொள்ளாத பிற சமயக் கடவுளரும் உளரோ இலர் என்பதாகும்."

அருகப் பெருமானுடைய திருப் பெயர்களை சூட்டியே ஏனைய தெய்வங்களுஞ் சிறப்புப் பெற்றன வென்பதைக் கீழ்க்கண்ட அத்திருப் பெயர்களை முதன் முதல் தமிழில் உலகுக்கு அருளிச் செய்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காண்போம்.

"அறிவ னறவோ னறிவு வரம் பிகந்தோன்
செறிவன் சினேந்தரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் றலைவன் றருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் றேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தி லொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பொயவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவனியல் குண னெங்கோன்
குறைவில் புகழோன் குணப் பெருங்கோமான்
சங்கரன் ஈசன் சுயம்பு சதுமுக
னங்கம் பயந்தோ னருக னருண்முனி
பண்ணவ னெண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன்."

அருகப் பெருமானின் திருப் பெயர்களையும், ஒழுக்க நெறிகளையும், பிற சமயத்தார் மேற்கொண்டது போன்றே பகிராகமத்திலுள்ள அதாவது புறக் கேள்வியைத் தழுவியே என்பதை நீலகேசி ஆசிரியர்.

"புலவனுரைத்த புறக்கேள்வி சாரா
துலகு நவின்றுரைக்கு மோத்தெங்குளதோ
உலக கவின்றுரைக்கு மோத்தேயுமன்றி
பலவும் பகர்வரப் பயந்தனவேயன்றோ"

கலங்கரை விளக்கம்போல் காட்டியுள்ளார். இவ்விளக்கத்தால் ஜைன அறவோர் வகுத்தருளிய மூல நூல் அதாவது முதல் நூலின்றே பிற்பல சமயத்தாரும் தங்கள் சமயக் கொள்கைகளை சீரமைப்புச் செய்துக் கொண்டனர் என்பதை எவரும் மறுக்க வியலாது.

இவ் வரலாற்றை ஆராய்ந்தறிந்த கிருஸ்தவசமய சிந்தனையாளர் மகா வித்துவான் திரு. H.A. கிருஷ்ணப் பிள்ளை அவர்கள் 1808ம் ஆண்டில் தாம் எழுதிய இரக்ஷணீய சமய் நிர்ணயம்" என்னும் சமய் நூலின் 6ம் அத்தியாத்தில் ஆருகதமதம் என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆராய்ச்சியில், இந்து தேசத்தில் தற்காலத்தில் பிரபல்யமடைந்திருக்கின்ற சைவ வைணவ மென்ற மதங்கள் உற்பத்தியாவதற்கு வெகு காலத்துக்கு முன் ஆரம்ப காலத்திலேயே இந்த சமணம் என்ற அருக மதம் உற்பத்தியாயிருக்கிறதென்று இங்கிலீஷ் சிந்தனையாளர்கள் நிருபித்திருக்கின்றார்கள்.

இந்து தேசத்தில் வழங்குகின்ற கணக்கு சாஸ்திரம். இலக்கண சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், இலக்கியங்கள், நிகண்டு, திவாகரம், அமரம், நீதி நூல்கள் ஆகிய எல்லாம் ஜைன சமயத்தவர்களாயிருந்தப் பூர்விக மகாவித்துவான்களாலேயே படைக்கப்பட்ட நூல்களாகும். இந்து தேசத்தில் வழங்கும் சமஸ்கிருதம் முதலிய எல்லாபஷைகளிலும் உண்டாக்கப்பட்டிருக்கின்ற நூல்கள் முழுவதும் சமண சமய வித்துவான்களாலேயே அமைக்கப்பட்டவையென்பது சந்தேகிக்கத்தக்க விஷயமல்ல. ஏனெனில் சைவவைணவ ஏனைய சமயங்கள் தோன்றுமுன் ஆரியாவர்த்தவாசிகளாயிருந்தவர்கள் சமண முனிவர், தவசிகள், இராஜ பரம்பரைகள்,பிரஜைகள் யbவரும் அருக சமயத்தவராகவே யிருந்தனர். காலம் செல்லச் செல்ல அருக சமய ஆசாரங்கள், விரதங்கள், நோன்புகள், கொல்லாமை, ஊனுண்ணாமை முதலிய கொள்கைகள் இவ்வகையாக உள்ள நிர்பந்தங்கள் ஆகியவற்றைக் கடைபிடிக்க வியலாதவர்கள் திருகிக்கொண்டு தங்கள் தங்கள் இஷ்டம்போலப் பல்வேறு சமயங்களை உண்டாக்கினர். இச்சமயத்தவர் கொள்கைகள் அருக சமயக் கொள்கைகள் போன்று திட்பநுட்பமாய் காணப்படவில்லை. அருக சமயத்தார் அனுசாத்து வந்த ஒழுக்க வழக்கங்களின் சிதைவுகளேயன்றி வேறில்லை.

இவ்வாறே அறநெறிகளைச் சமயவாதிகள் ஏற்றுக்கொள்வதை ஜைனம் வரவேற்கின்றது. ஆனால், தங்கள் சமயக்கொள்கைகளோடு அறநெறிகளைக் கடைபிடிக்கையில் அவ்வறம் தன் தனித்தன்மையை இழந்து விடுகிறது. இந்நிலையைக் கண்கூடாகக் காணலாம் இவ்வுண்மையை அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே நாம் மேலே கண்டதிரு H.A. கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் நன்கு அறிந்து பிறசமயத்தவர் மேற்கொண்டவைகள் சிதைவுகளேயன்றி முழுமைப் பெறவில்லை யென்றார். அறியாமை இருளில் அழுந்திடாத மக்களை அறிவொளியில் கொணரும் கொல்லாமையை அடிப்படையாகக் கொண்ட அறநெறிகளின் இயல்பு மாய்ந்து தவறான பொருளில் செல்வதைக் கண்டுதான் ஜைன அறவோர்கள் அப்புனித அறத்தின் இயற்பெயரோடு நல்லறம், திருவறம், பேரறம் எனப்பெயரிட்டு அழைக்கலாயினர் இவ்வாறு அறத்தை நல்லறம் என முதன்முதல் பெயாடப்பட்டவர் இளங்கோவடிகளே யாவர்.

"நண்ணுமிருவினையும் நண்ணு மின்கள் நல்லறம்
கண்ணதென் கேள்வன் காரணத்தான் மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை."

எனும் வென்பாவில் நல்லறம் என விளித்து அறத்திற்கு ஒரு மாற்றம் அளித்து விள்க்கியுள்ளார். இதன் பின்னர் வந்து ஜைன இலக்கியங்கள் அனைத்திலும் அறமும் நல்லறமும் திருவறமு, பேரறமும் காட்சியளிக்கின்றன.

சீவக சிந்தாமணியாகிய கடலின் சிற்றகப்பை மொண்டு கொண்டே யான் இராம காதையை இயற்றி வெற்றி பெற்றே எனக் கூறிய கம்பர் பெருந்தகையும் இப்புது முறையைக் கையாண்டுள்ள காட்சியைக் காண்போம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் தேவாரக் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதை யாரும் அறிவர். தேவார ஆசிரியர்கள் தங்களுக்கு முன்னர் வளர்ந்தோங்கி வந்த நெறிக் கொள்கைகளுக்கு மாறாகப் பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டிக் கடவுள் பக்தியே முக்தி மார்க்கத்திற்குத் தக்கதோர்வழியெனும் கொள்கையை வற்புறுத்த தேவாரப் பாடல்களை இயற்றி அறநெறியை மறைத்து வந்தனர். அறம் சாய்ந்து பக்தி மார்க்கம் வளர்ந்து மக்கள் பண்பாடு குலைந்து வருவதை நுண்ணிதின் அறிந்த கம்பர் பெருந்தகை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பங்காண விழைந்தே இராமாயணத்தை இயற்ற முனைந்தார்.

இராமயாணத்தின் ஒவ்வொரு காண்டத்திலும் பண்டைய அறநெறி மறுமலர்ச்சியுற்று ஒளிவிட்டு வீசுமாறு தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது வசந்த பருவத்தின் முதல் மாதம் தனது இனிய மணத்தை வழக்கம் போன்று உலகெங்கும் பரப்பும் காட்சி போன்றது எனில் மிகையாகாது. அறம் ஒன்றே மக்கள் வாழ்க்கைச் சிறப்பிற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையாகும் என்ற உண்மையை அறிந்த கவிச்சக்கரவர்த்தி தாம் இயற்றிய இராமாயணத்தில் அமைந்துள்ள அறநெறிப் பாடல்கள் பலவற்றில் இங்கு சில கண்டு களிப்போம்.

கொல்லா விரதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஜைன சமயத்தவரே என்னும் வரலாற்றை உலகுக்கு அறிவிக்க வேண்டி இந்திரஜித்தன் போரில் மாய்ந்ததைக் கண்டு தேவர்கள் ஆராவாரம் புரிந்து காட்சியை :

"வில்லான ரானார்க் கெல்லாம் மேலவன் வினிதலோடும்
செல்லாதவ் விலங்கை வேந்தர்க்கர செனக் களித்த தேவர்
எல்லாருந் தூசுநீக்கி யேறிட வார்த்த போது
கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்ட மொத்தார்"

என ஜைன முனிவர்களை உவமைக் காட்டி உணரச் செய்துள்ளார். இவ்வாறே இக்கொல்லா விரதமாகிய நல்லறம் வைதிக சமய வேதங்களுக்கும் முற்பட்டத் தொன்மை வாய்ந்தது எனும் வரலாற்றை வாலி வாயிலாக,

"இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க் காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலின்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்ததென்னா நகைவா நாண் உட்கொண்டான்"

இக் கவியில் தொல்லை நல்லறம் அதாவது தொன்மை வாய்ந்த நல்லறம் என்றே பாடியுள்ளார். இது சீவகசிந்தாமணி கடவுள் வாழ்த்தின் மூன்றாவது பாட்டில் காணும் தொன்மாண்பமைந்த நல்லறம் எனும் வரலாற்றைக் கம்பர் வலியுறுத்திக் காட்டியுள்ளார். மேலும் வெறும் பக்தியைவிட அறநெறியை மக்களின் நல்வாழ்வை மலரச்செய்யும் எனும் உண்ணாமையை இராமபிரான் திருவாய் மொழியாக.

"சிந்தை நல்லறத்தின்வழி சேர்தலால்
பைந்தொடித்திரு வின்பிரிவு ஆற்றுவான்
வெந்தொழில் திறல் வீடுபெற் றெய்திய
எந்தை யும்எருவைக்கர சல்லனோ"

"பொறியின் யாக்கைய தோபுலன் நோக்கிய
அறிவின் மேலதன்றோ அறத்தாறுதான்
நெறியும் நீர்மையும் நேர்நின்றுணர்ந்தநீ
பெறுதி யோபிழை உற்றுற பேற்றிதான்."

இவ்விரு கவிகளாலேயே கம்பர் பெருமானின் புரட்சிக் குறிக்கோள் புரிகிறதல்லவா?

இப்பரந்த நோக்கத்தைச் சேக்கிழார் சதிச் செயலாகக் கணித்துக் கொண்டார். கம்பர் பக்தி மார்க்கத்தின் பகைவன் என முடிவு செய்து கொண்டு, எழுத்தாணியையும் ஓலைகளையும் எடுத்துக் கொண்டார். தேவராப் பாடல்களுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் தொண்டர் புராணம் என எழுதினார். இதனைப் பிற்காலத்தில் பொய புராணம் என அழைக்கலாயினர். இறைவனிடம் பக்தி கொண்டு அதன் காரணமாகச் செய்யும் செயல்கள் தீமையாயினும் இறைவன் அருள் கிடைக்கும் எனப் பல கதைகளைப் படைத்தப் புராணம் பாடிவைத்தார். இதற்கு எடுத்துக்காட்டாகப் பொய புராணத்திலுள்ள,

" சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் புகழும் ... ... ... ...
என்ற ஒரு பாடலே சாலும்.

"திருமறுமார்வி நாவாயினும் திருமல்லை"
இவ் இலக்கியப் போட்டி இயக்கத்தின் வரலாற்றைத் தொல்காப்பியத்தினின்றும் வளர்ந்து வந்துள்ள இலக்கியங்களை வாசைப்படுத்தி ஆராய்ந்து காணின் நன்கு புலனாகும்.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com