முகப்பு வாயில்

 


இவ்வாறெல்லாம் அறநெறிக்கு ஊறு தேடிவரும் சமய வாதிகள் ஜைன இலக்கியங்களிலும் புகுந்து நாசமாக்கியுள்ளச் செய்தியை தமிழ் மொழியில் பற்றும், தமிழ் நூல்களில் ஆர்வமும் கொண்ட அறிஞர்கள் அறிந்தால் வருந்தாமல் இருக்க வியலாது கண்ணீரும் சிந்துவர்.

சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் ஜைன அறவோர் என்பதை அறிஞர்கள் பலரும் அறிவர். அப்பெரும்புலவர் சமயக் காழ்ப்பு சிறிதுமின்றித் தமிழகத்திலுள்ள சமயங்கள் பலவற்றையும் கடவுளர்களின் பெயர்களையும், அந்தந்த சமயக் கோட்பாடுகள் தோன்ற நிகண்டு இயற்றியுள்ளார். பொதுவாக ஜைன அறவோர்கள் பலரும் உலகுக்கு அறம் உறைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்களாகையால் அத்தூயோர்கள் நீதிநெறி தவறாது உண்மையைக் கடைப்பிடித்து இலக்கியங்களும், நீதி நூல்களும் தமிழ் மொழியின் ஆக்கத்திற்காக நிகண்டு, கணிதம், இசை நாடகம் போன்ற பல பொது நூல்களையும் இயற்றிக் கண்மணிபோல் காத்து வந்தனர். அம்மரபின் வழியிலேயே மண்டலபுருடர் தம் நிகண்டில் தமிழக வரலாறு சமயங்கள் தொழில்கள் ஆகிய பலவற்றின் சிறப்புச் செய்திகளைப் பன்னிரண்டாம் நிகண்டில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளார்.

அவ்விளக்கங்களில் பாரதநாட்டிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தத்துவ தியாக அமைந்திருந்த அறுசமயங்களைப்பற்றிப் பின்வரும் பாடலில்.

"அறுசமயங்களென்ப வான கையாயிகத்தோ
டுறையும் வைசேடிகம் மேலுள்ள லோகா
குயிலிமீமாம்ச மென்று குறித்தவை யன்றி நல்ல
நெறியுள அருகப் புத்தம் நீதியென்றோது மன்றே"

என விளக்கியுள்ளார் இவ் அறுசமயங்களையே பண்டைய இலக்கியங்கள் பலவும் கூறியுள்ளன. அதுமட்டுமல்ல சேந்தன் திவாகரத்தில் 12வது தொகுதியும் இவ் ஆறு சமயங்களே எனப்பட்டுள்ளன. இவ்வராற்றுப் பாடல் நிகண்டில் பழைய ஓலைச் சுவடிகளிலும், சூடாமணி நிகண்டை முதன் முதல் அச்சிட்ட நூலிலும் இன்றும் காணலாம்.

யாழ்ப் பாணம் திரு ஆறுமுக நாவலர் அவர்கள் பிற்காலத்தில் தோன்றியதும், தத்துவங்காணுததுமாகிய தம் சமயமாகிய சைவ சமயத்தைச் சூடாமணி நிகண்டில் நுழைக்க வேண்டி, தாம் சூடாமணி நிகண்டை அச்சிடுவதாகப் பறைசாற்றிக் கலைக் கொலைக் செய்துள்ளக் கோரச் செயலை நேர்மை உள்ளம்படைத்த எந்தத்தமிழரும் வருந்தாமலிருக்கமாட்டார். அவர் செயலை பாருங்கள்.

நாம் மேலே கண்ட அறு சமய விளக்கப் பாடலை நீக்கி விட்டு கீழே காணும் இரு பாடல்களைத் தாமே இயற்றிச் சேர்ந்து சூடாமணி நிகண்டை வெளியிட்டுள்ளார்.

"அரியவுட் சமயமாறே யாவன சைவந் தூய்மை
பெருக பாசுபத்தோடு பிறங்கு மாவிரமற்றும்
கருதிய வீடுபேறு காட்டு களா முகந்தான்
மருளயவால மிக்க வைரவம்என் னலாகும்"

"அறுபுறச் சமயந்தானே யறையும்லோ காயதம்பின்
உறைதரு பெளத்தமேயோ ருகதமீமாம்சமோடு
குறிபெறு ம்யாவாதங் கூறிய பஞ்சராதரம்
நெறிபேறு மிவையே யென்ன நிகழ்த்துவர்நூல்
வல்லோரே"

பண்டைய காலந்தொடர்ந்து அறுசமயம் எனப்போற்றிவரும் வரலாற்றுக்கு மாறாக உட்சமயம் புறச்சமயம் எனப்பிரித்துப் போலிப் பாடல்களை இயற்றி வரலாற்றையே பாழாக்கியுள்ளார். வரலாறு மட்டுமின்றி நிகண்டின் மூலத்தையும் மறைத்துள்ளார். இச்செயல் தமிழ்த்தாயின் உருவத்தையே சிதைத்தற்கொப்பாகும் எனில் மிகையன்று. நாவலர் செய்த சூழ்ச்சி அவருக்கே இழுக்கை தேடிவிட்டது. தம் சமயத்தின் உட்சமயங்களாக இணைத்துக்கொண்ட சமயங்கள் இன்று பெயருக்கேனும் காணமுடியாது மறைந்து மாய்ந்து போனவை. பாசுபதம், மாலிரதம் (கபாலிகம்) காளாமுகம், வாமம் ஆகிய ஐந்துமாம். இவைகளின் கொள்கைகளையும், வேடங்களையும், எலும்பு மாலைகளையும், மண்டையோடிகளையும், ஊனையும், கள்ளையும் பற்றி மகேந்திரபல்லவ மன்னர் எழுதிய மத்த விலாசபிரஹசனம் என்ற நாடகத்தில் காணலாம் இத்தகையாரை நாவலர் தம் சைவ சமயக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டதை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால் கூடா நட்புஎன உரைத்து விடலாம். தன்வினையே தன்னைசுடும் என்ற பழமொழிக்கு இலக்காகிவிட்டார் நாவலர் அவர்கள் நிகண்டாசிரியர் மேலே கண்ட ஐந்து சமயங்களும் சைவத்தின் உட்சமயங்கள் எனப் பாடிவிட்டிருந்தால் சைவ உலகம் கண்டனக்குரல் எழுப்பி இருக்கும். நாவலர் இயற்றிப் புகுத்தியதால் ஒன்றும் பேசாது ஏற்றுக் கொண்டு அச்சிட்டு வெளியிட்டும் வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் தம் சமயத்திற்கு ஊறு தேடிக்கொண்ட நாவலர் அவர்கள் கடவுள் இலக்கணத்திலும் தம் காழ்ப்பைக் காட்டியுள்ளார். நிகண்டாசிரியர் மண்டல புருடர் கடவுளின் இலக்கணத்தை.

"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம்
இடையுறு நாமமின்மை விதித்தக் கோத்திரங் களின்மை
அடைவிலா ஆயுவின்மை அந்தராயங் களின்மை
உடையவன் யாவன் மற்றில் வுலகினுக் கிறைவனாமே"

எனக் கடவுளின் இயல்பைக் கூறி இத்தகைய இலக்கணத்தையுடையவரே உலகுக்கு இறைவனாவான் எனப் பாடியுள்ளார். இப்போலக்கணத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத நாவலர் மேலே உள்ள பாடலின் கடைசி வாயை மாற்றி உடையவன் இறைவனென்று உரைக்கும் ஆருகத நூலே' எனத்திருத்தி வெளியிட்டுவிட்டார். இச்செயல் கடவுளைத் தூய்மையுடையதாகத் கொள்ளாது தம் சமயக் கடவுளாகிய ருத்ரன் போல் இருக்க வேண்டுமென்பதையே காட்டுகிறதல்லவா? இக்கொடுஞ்செயலைத் தமிழை வளர்கிறோம் எனப் பேசி வரும் எந்த அறிஞரும் கண்டிக்கவில்லை. அதற்கு மாறாக ஆறுமுக நாவலான் போலிக் கவிகளையே திரும்பத் திரும்ப அச்சிட்டு வெளியிடுகின்ற பாதாபக் காட்சியைத்தான் காண்கிறோம். இது போன்றே சிவனுக்கும் எண் குணங்களுண்டென இரு செய்யுள்கள் இயற்றி நிகண்டில் நுழைத்துள்ளார். இவ்விரு போலி செய்யுட்களுக்காக நிகண்டில் இருந்த பஞ்சு அடித்தல் நெய்தல் ஆகிய தொழில்களை விளக்கும் இரு பாடல்களை எடுத்து விட்டார். இத்தகு செயலை ஜைன அறவோர்கள் உலகியல் வழக்கங்களையும் அறநெறிகளையும், வரலாற்றுச் சிறப்பையும் கண்ணாடிபோல் காட்டியுள்ள கருத்துக் கருவூலங்களின் ஆக்கப் பணியை அழிக்கும் தொழில் அல்லது கலைக் கொலை யென்றே கூறலாம். இச்செயல் போதாதென்று இவருக்கு பின் தோன்றிய சிலர் ஜைன நூல்களைச் சிதைத்துள்ள செய்திகளையும் பாருங்கள்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் விளைவித்த சமயப் பூசல் காரணமாக ஜைன அறவோர்கள் இயற்றியருளிய பல அரும் பெரும் நூல்கள் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் திரு. ஆறுமுக நாவலர், நிகண்டை திருத்தி வேறு செய்யுள் இயற்றிய நுழைத்திருப்பதை முன்னரே கண்டோம் எஞ்சியிருக்கும் சில நூல்களின் கடவுள் வாழ்த்தைத் திருத்தி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பதினென்கீழ்க் கணக்குகளில் சிலவும், நெல்லிலக்கம் போன்ற சில கணித நூல்களும் இக்கதிக்கு உள்ளாகியுள்ளன. கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் தாம் இயற்றிய கலிங்கத்துப்பரணி என்னும் நூலில் தாம் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதை விளக்கிப் பதினோரு பாடல்கள் இயற்றிய உலகறியச் செய்துள்ளார் இந்நூலை அச்சிட முனைந்து அந்நூலாசிரியர் வரலாற்றை எழுதியவர் ஜெயங்கொண்டார் ஜைன சமயத்தில் தோன்றியவராயினும் பின்னர் சைவம் தழுவி விட்டார் என அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

திவாகரம் பிங்கலந்தை ஆகிய இரண்டு நிகண்டுகளும் ஜைன அறவோர்களால் இயற்றப்பட்டவைகளே. திவாகரம் இயற்றிய அறவோர் திவாகர் என்பதை யாவரும் அறிவர். இப்பேரறிஞர் திவாகரம் இயற்றுவதற்கு காரணமாய் இருந்தவர் சேந்தன் என்ற மன்னராகும். திவாகர் தன்னை ஆதாத்த சேந்தனை மறவாது தம் நூலுக்கு சேந்தன் திவாரம் எனும் பெயர் சூட்டியதோடு நூலின் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் சேந்தனைப் பாராட்டிப் பாடியுள்ளார் குறிப்பாக,

'செந்தமிழ் சேந்தன்'
'அம்பற்கதபதி சேந்தன்'
'கற்றநாவினன் கேட்ட செவியினன்'
'முற்ற உணர்ந்த மூதறிவாளன்'
'வட நூற்கரசன் தென்தமிழ்க் கவிஞன்'
'கவியரங்கேற்றும் உபயக்கவிப் புலவன்'

என்றெல்லாம் புகழ்ந்து நன்றியறிதலைக் காட்டியுள்ளார் இப்புகழுரைகளால் சேந்தன் வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமைப் பெற்ற பேரறிஞன் என்பது புலனாகிறது. இவ்வுண்மையை சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவர் தம் நூலின் சிறப்பையும் அரங்கேற்றிய இடத்தையும் குறிப்பிட்டு விளக்குகையில்,

"நாமான் புரைக்கும் குறையென்னினு
நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமா னெடுஞ் சேந்தனென்னூர்
தூமான் டமிழின் கிழவன் சுடரார மார்பிற்
கோமா னவையுட் டெருண்டார் கொளப்பட்ட
தன்றே"

என்னும் பாடலில் வரும் தமிழிற் கிழவன் என்னும் சேந்தனும் திவாகரர் குறிப்பிடும் "கற்றநாவினன் கேட்ட செவியினன்" எனப் புகழும் சேந்தனும் ஒருவரே என்பதில் ஐயமில்லை. எனவே தோலாமொழித்தேவரும் கிவாகரரும் சமண காலத்வர் ஆவர்.

காலம்:

சூளாமணியின் காலம் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டாகும். திவாகர நிகண்டின் காலமும் அதே என்பதை சொல்ல வேண்டுவதில்லை. திவாகர் மக்கட் பெயர்த் தொகுதியில் "வேள் புலவரசர்களுக்கு வேந்தர்" எனவும் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியில் "கேழில் வேள்புலவரசர் கொடியே" எனவும் சாளுக்கிய மன்னர் பெயரையும், கொடியையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் திவாகரர் சாளுக்கிய மன்னர் காலத்தவர் என்பது தெளிவாகும்.

வரலாற்று ஆசிரியர்கள் சாளுக்கிய மன்னர் காலம் கி.பி.5 அல்லது 6-ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளார். இவ் வரலாற்றைக் கொண்டு நோக்கினும் திவாகர நிகண்டின் காலம் கி.பி.5 அல்லது 6-ஆம் நூற்றாண்டே என்பது உறுதிப்படுகிறது. இத்தகு அகச்சான்றை மறைத்து திவாகர நிகண்டின் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாய் இருக்கலாம் எனக் கூறுகின்றனர். இக் கூற்றுக்கு அவர்கள் கூறும் காரணம் விந்தையானது. திவாகரர் நிகண்டில் விநாயகர் காப்புச் செய்யுளும், தெய்வப் பெயர்த் தொகுதியில் விநாயகர் பகுதியும் காணப்படுவதால் தமிழகத்தில் புதிதாக நுழைந்த விநாயகர் காலத்திற்கு பிற்பட்டது திவாகரம் எனக் கூறுகின்றனர். திவாகரத்தை ஓலைச்சுவடியினின்றும் முதன் முதல் அச்சில் கொண்டு வந்தவர் தாண்டவராய முதலியார் என்பவர். அவரோ அவரைச்சார்ந்த புலவர் ஒருவரோ திவாகரத்தின் காப்புச்செய்யுளையும் விநாயகர் பகுதியையும் புதிதாக இயற்றி நுழைத்திருக்க வேண்டும். இவர்கள் இத்துடன் நில்லாது முதலில் விளங்கிய அருகர்பெயர்த்தொகுதியை அடியோடு மறைந்து விட்டனர். இவ் அடாத செயலைக் கண்டறிந்த புலவர் பெருமக்கள் திவாகரத்தில் இடைச்செருக்கல் நிறைந்து உள்ளன என வருந்தியுள்ளார்கள் பல்வேறு செருகல்களில் முதன்மையானது விநாயகர் நுழைவர் என துணிந்து கூறலாம்.

இத்தகு இடைச்செருகலைக் கொண்டே சில் திவாகரத்தின் காலம் கிபி 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என மலைப்புண்டு கூறி வருகின்றனர். இம் மயக்கத்தின் வயப்பட்டே திவாகரர் சமயம் சைவ சமயம் எனக்கூசாது கொண்டாடுகின்றனர். இச் சூழ்நிலையை உண்மையாக்கவே தாண்டவராய முதலியார் திவாகரத்தில் விநாயகர் பகுதியை நுழைத்து சூழ்ச்சி செய்தார் என்பது தெற்றென விளங்குகிறது.

இதுபோன்றே வடநாட்டிலுள்ள ஒரு இந்து சமயத்தவர் அமரகோசத்தை முதன் முதல் வெளியிடுகையில்லுள்ள அருகர்ப் பகுதியை மறைத்துவிட்டு வெளியிட்டுவிட்டார். பின்னர் அச்சதிச் செயல் கண்டு பிடிக்கப்பட்டு அமரகோசத்தில் அருகர்ப் பகுதியைச் சேர்த்து வெளியிட்டனர். இங்கு திவாகரத்தின் அருகர் பகுதியோ, வளையாபதியின் கதியை அடைந்துவிட்டது. எனவே நடுநிலைமையாளர் ஒன்றும் செய்ய இயலவில்லை. பண்டைய நூல்களைப் பாழ் செய்யும் இச்செயல்களைக் கலைமகள் அறிந்து கண்ணீர்சிந்தியிருப்பாள் எனக் கற்பனையாக எண்ணுவது தவறல்ல.

இதுவரை நாம் கண்ட திவாகரத்தின் வரலாறுகளாலும் அகச்சான்றுகளாலும் திவாகரர் ஜைன அறவோரே என்பதும் பிங்கலந்தை ஆசிரியர் பிங்கல முனிவர் திவாகரான் மகனாகையால் அப்பெருந்தகையும் ஜைன அறவோரே என்பதைக் கலங்கரை விளக்கம்போல் காணலாம்.
 

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com